Thursday, March 30, 2017

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும் 

(குறள்: 639) 
 
பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. பெரிய வங்கி ஒன்றில் கடன் கேட்டிருந்தார் ஒரு தொழிலதிபர். தொகை அதிகம் என்பதால் கோட்ட மேலாளர் ஒப்புதல் அளிக்க வேண்டும்! அவரோ இராணுவத்தில் குறுகிய காலம் பணியாற்றி விட்டு வங்கியில் சேர்ந்து உயர் பதவிக்கு வந்தவர்! இருப்பினும் வர்த்தக வளர்ச்சியில் அதீத ஆர்வம் கொண்டவர்.
ஆனால் பாவம், கடன் கொடுப்பதில் அனுபவம் குறைவு. அச்சம் வேறு. அதனால் தனது அலுவலகத்தில் கடன் பிரிவின் தலைமை அதிகாரியையே நம்பி இருந்தார். அதிகாரி பெயர் குமார் என்று நீங்களே சொல்லி விட்டீர்களே! குமாருக்கு கத்தி போல புத்தி. கடனில் புலி. ஆனால் தனக்குப் பின் பணியில் சேர்ந்தவர் கோட்ட மேலாளராக இருப்பதில் பொறாமை; முன்னேற விடக் கூடாதென்கிற கெட்ட எண்ணம்! அப்பாவியான கோட்ட மேலாளருக்கோ இது புரியவில்லை! 

கோட்ட மேலாளரைச் சந்திப்பதற்கு தொழிலதிபர் நேரம் கேட்ட பொழுது அவர், ‘குமாரை முதலில் பாருங்கள்' எனச் சொல்லி விட்டார். அங்கு சென்ற கிளை மேலாளரும் தொழிலதிபரும் காத்திருந்தனர், காத்திருந்தனர், ஒரு மணி நேரம் காத்தே கிடந்தனர்! பின்னர் உள்ளே கூப்பிட்ட குமார் ஒரு கையில் தேநீர் கோப்பையும் மறு கையில் நாளிதழுமாக இருந்தார்! தொழிலதிபர் இருமினார், செருமினார். ‘ம்..சொல்லுங்க' என்ற குமார், கிளை மேலாளர் கடன் பற்றிச் சொல்லத் தொடங்கியவுடன் அவரை இடை மறித்தார்!
`இங்கே கொடுத்த கடனே வசூலாகவில்லை. நான் சொன்னாலும் கோட்ட மேலாளர் செய்ய மாட்டார். 6 மாதம் கழித்துப் பார்க்கலாம்’ என்று கோட்ட மேலாளரைக் குறை சொல்லி அவர்களை அனுப்பி விட்டார்! அவர்களோ விடாமல் கோட்ட மேலாளரைச் சந்தித்தனர். அவர் மரியாதை காட்டினாரே தவிர, ‘கடன் என்றால் குமார் சொல்லியதற்கு மேல் ஒன்றுமில்லை' என்று சொல்லி விட்டார். இந்த மாதிரி சம்பவங்களால் வாடிக்கையாளர்கள் நொந்து போனார்கள். வங்கியை விட்டும் போனார்கள்! கோட்ட மேலாளரின் பெயர் கெட்டது. மற்ற வங்கிகள் இந்த வங்கியின் வாடிக்கையாளர்களை குறி வைக்க ஆரம்பித்து விட்டன! 

அண்ணே, உதவிக்கு ஆள் தேவைதான். ஆனால் அவர் விசுவாசத்துடன் இருக்க வேண்டும் இல்லையா? ஒப்பந்தப் புள்ளிக்கு என்ன தொகைக்கு விண்ணப்பித்துள்ளோம் என்பதைப் போட்டியாளருக்கு ரகசியமாகச் சொல்பவர் போன்றோரை அருகில் வைத்துக் கொண்டால் என்ன ஆகும்? ஒரே ஆள் எல்லா வேலைகளையும் பார்க்க முடியாது என்பதற்காகவும், சில துறைகளில் நிபுணத்துவம் வேண்டும் என்பதற்காகவும் தானேங்க உதவியாட்கள்? 

அதாவது செய்வதைச் சிறப்பாகவும் நாணயமாகவும் செய்யக் கூடியவர்கள்! இக்குணங்கள் இல்லாதவரை அருகில் வைத்துக் கொண்டால் வேறு வினையே வேண்டாமே! தீய எண்ணமுடையவன் பக்கத்தில் இருப்பது எழுபது கோடி பகைவர்கள் இருப்பதினும் கொடுமையைத் தரும் என்கிறது குறள்! 

- somaiah.veerappan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024