Thursday, March 30, 2017

மதுபானத்தை விட உயிர் முக்கியமானது டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

By DIN  |   Published on : 30th March 2017 05:06 AM
SUPREME-COURT
'மதுபானத்தை விட உயிர் முக்கியமானது' என்று டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் சுற்று வட்டாரத்துக்கு குறையாமல் மதுபானக் கடைகள் தள்ளியிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பை செயல்படுத்த மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள், மது விற்பனையாளர்கள் உள்ளிட்ட 66 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரம் என்பதை 100 மீட்டர் ஆகக் குறைப்பதற்குப் பரிசீலனை செய்ய வேண்டும். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நவம்பர் 28-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதபதிகள் டி.ஓய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி முன் வைத்த வாதம்: தேசிய நெடுஞ்சாலை என்பது முக்கிய நகரங்களை இணைக்கிறது.

மாநில நெடுஞ்சாலை மாவட்ட தலைநகரங்களையும், சிறிய நகரங்களையும் இணைக்கிறது. மதுபான உரிமம் தொடர்பாக மாநிலங்களில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் சுற்று வட்டாரத்தை கடந்து மதுபானக் கடைகள் இருக்க வேண்டும் என்ற உத்தரவை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற முடியுமா எனத் தெரியவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடைகளை அகற்ற வேண்டுமானால், தமிழகத்தில் 5,672 மதுபானக் கடைகளில் 3,321 கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். இதனால், வருவாய் இழப்பு ஏற்படும்' என்றார்.
இதையடுத்து, வெவ்வேறு மாநில அரசுகள் உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் கே.கே. வேணுகோபால், அபிஷேக் மனு சிங்வி, கோபால் சுப்பிரமணியம், ராஜீவ் ராமசந்திரன் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.

அவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'மதுபான விற்பனையை விட மனித உயிர் முக்கியமானது. குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர் மது போதையால் உயிரிழக்க நேரிட்டால், ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும்.

தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு எங்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை. அதே சமயம், மாநிலங்கள் தரப்பில் முன்வைத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. அவற்றைப் பரசீலிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து வியாழக்கிழமை (மார்ச் 30) பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்கிறோம்' என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...