Monday, March 27, 2017


இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு! உணரலாம் வாருங்கள்..






இந்தியாவில் வீட்டிற்கு வெளியே வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்காமல் வீட்டில் இருக்கும் திருமணமான பெண்ணை , "House Wife" (வீட்டு மனைவி) என அழைக்கின்றார்கள். பெண்ணின் உழைப்பு மதிக்கப்பிழக்க இதுவும் ஒரு காரணம். 

திருமணமாகி கணவன் வீட்டில் இருக்கும் வெளியே வேலைக்கு செல்லாத ஒரு பெண்ணிடம் (திருமணமாகாத‌ பெற்றோர் வீட்டில் இருக்கும் பெண்ணிடமும்) நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என யாராவது கேட்டால், அவர்களில் பெரும்பான்மையானோர் நான் வீட்ல சும்மா தாங்க இருக்கேன் என சொல்வார்கள் . உண்மையாகவே அவர்கள் வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கின்றார்களா என வினவினால், வீட்டில் அவர்கள் தான் சமையல், துணிகளை துவைப்பது, வீட்டை தூய்மைப்படுத்துவது , குழந்தை வளர்ப்பு, வீட்டில் குழந்தைகளுக்கு கல்வியளிப்பது, பல வீடுகளில் கணவன் கொடுக்கும் சம்பள பணத்திற்குள் எல்லா செலவுகளையும் செய்து பொருளாதாரத்தை நிர்வகிப்பது என எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.






இப்படிக் காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை ஓய்வின்றி உழைக்கும் அவர்கள் ஏன் தங்களை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கின்றேன் என சொல்கின்றனர் என யோசித்தால், அவர்களின் இந்த உழைப்புக்கு சம்பளம் (பணம்) வழங்கப்படுவதில்லை. சம்பளம் கொடுக்கப்படாத‌ வேலையை செய்வதால் அவர்கள் தாங்கள் சும்மா இருப்பதாக சொல்கின்றனர்.

பெண்கள் வீட்டில் செய்யும் இந்த வேலைகள் எல்லாம் சம்பளம் கிடைக்காத வேலைகளா எனக்கேட்டால் இல்லை. இந்த வேலைகளை எல்லாம் வேறொரு வீட்டிலோ, நிறுவனத்திலோ செய்தால் சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைகளாகும். இங்கே தான் இந்திய ஆண்கள் எல்லோரும் முதலாளிகளாக மாறுகின்றோம். வீட்டில் பெண்களிடம் இவ்வளவு வேலைகளையும் வாங்கிவிட்டு அதற்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதுடன் மட்டும் நிற்காமல், அவர்கள் சும்மா இருப்பதாகத் திரும்ப, திரும்பப் பொய்யை சொல்கின்றோம். இப்படியாக மீண்டும் , மீண்டும் சொல்லப்படும் ஒரு பொய்யானது பெண்கள் மனதில் உண்மையாக ஆழப்பதிந்து அவர்களும் அதையே சொல்கின்றனர்.

நடிகை ஜோதிகா நடித்த "36 வயதினிலே" திரைப்படத்தில் வெளிநாடு செல்லும் கணவன், வளர்ந்த பெண் பிள்ளையைத் தன்னுடன் அழைத்து செல்வான். தன்னையும் அழைத்து செல்லுங்கள் என மனைவி ஜோதிகா கேட்கும் பொழுது உனக்கு அங்கு வேலை கிடைக்காமல் எப்படி அழைத்து செல்வது என கேட்டு அவரின் வாயடைத்து விட்டு வெளிநாடு சென்று விடுவான். பின்னர் அதே கணவன் இங்கு உணவு சரியில்லை, வீட்டு வேலைக்கு யாரையாவது அழைக்கலாம் என்றால் அதிக சம்பளம் கேட்கின்றார்கள், அதனால் நீ என்னுடன் வெளிநாடு வந்து தங்கி விடுகின்றாயா என கேட்பான். அவனுக்கு அங்கே தேவை மனைவி அல்ல, சம்பளம் வாங்காத ஒரு வேலைக்காரி மட்டுமே. இதை ஜோதிகா மறுக்கும் பொழுது தன் பிள்ளையை விட்டு பேசச் சொல்லி ஒர் உளவியல் தாக்குதல் தொடுப்பான்.

இந்தப் படத்தில் கணவன் கதாபாத்திரம் செய்யும் இந்த செயலைத் தான் பெரும்பான்மையான இந்திய ஆண்களாகிய நாம் ஆண்டாண்டு காலமாக செய்து வருகின்றோம். நம‌க்கு பொருளாதார சிரமங்கள் ஏற்படும் பொழுது கட்டிய மனைவியையே சுமையாக கருதி அவரை அவமானப்படுத்துகின்றோம். பின்னர் அவரால் நம‌க்கு நலன் உண்டாகின்றது எனில் நாம் முன்னர் செய்த தவறுக்கு மன்னிப்பு கூடக்கேட்காமல் எந்த வித கூச்சமுமின்றி "நீ தான் எல்லாம்" என நாகூசாமல் பொய் சொல்கின்றோம். ஒரு தவறை திரும்ப, திரும்ப செய்வதால் அது நம்முடைய‌ பழக்க வழக்கமாக மாறிவிடுகிறது. அதனால் அந்த தவறுகள் நம்முள் எந்த குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.


அந்தப் படத்தில் வரும் பிள்ளையைப் போலத்தான் இன்று பெரும்பான்மையான பிள்ளைகள்(ஆண்/பெண் குழந்தைகள்) இங்கே வளர்க்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தங்கள் அன்னையின் உழைப்பு புரிவதில்லை, அதற்கு காரணமும் பணம் தான். அப்பா பணம் சம்பாதிக்கின்றார், அவரே நாம் கேட்கும் பொருட்களை வாங்கித் தருவார் என எண்ணுகின்றனர். பணம் தான் எல்லாம் என வாழும் இன்றைய சமூகத்தில் வளரும் குழந்தைகள் அவர்கள்.

என் மூன்று வயது மகள் இன்பா "டோரா புஜ்ஜி" கார்ட்டூன் பார்த்துவிட்டு தனக்கு உதவி செய்யும் நபர்களுக்கு நன்றி சொல்லத் தொடங்கினார். அந்த நன்றி எப்பொழுதும் அப்பாவான எனக்கு மட்டுமே கிடைக்கின்றது. என் மகளைப் பொருத்தவரை நான் தான் அவர் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கித் தருகின்றேன். அவரது அம்மாவிற்கு நன்றி கூறி நான் பார்த்ததில்லை. மூன்று வயது குழந்தை அம்மா பணம் சம்பாதிப்பதில்லை, அதனால் அவர் நமக்கு செய்யும் வேலைகளுக்கு நன்றி சொல்லத் தேவையில்லை என யோசிக்கின்றது.

இதை நான் கவனிக்கத் தொடங்கிய‌திலிருந்து அவரிடம் நான் அவரது அம்மா செய்யும் பணிகளைத் திரும்ப, திரும்பச் சொல்லி அதை நாம் மதிக்க வேண்டும் எனப் பேசி வருகின்றேன். குழந்தைகளை வளர்க்கும் நாம் அனைவரும் இதை புரிந்து கொண்டு நம் குழந்தைகளிடம் இன்றிலிருந்தே இதைப் போல பேசத் தொடங்க வேண்டும். அதுமட்டுமின்றி நம் மனைவியரிடம் பணத்தைக் கொடுத்துக் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்கித் தரச்சொல்ல வேண்டும். அது மட்டுமின்றிப் பணத்தை வைத்து ஒருவர் செய்யும் வேலையை மதிப்பிடக்கூடாது எனவும் சொல்லி நம் குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டும். இல்லையென்றால் 36 வயதினிலே திரைப்படத்தில் முதல் பாதியில் தன் அம்மா செய்யும் வேலைகளைப் புறக்கணித்து அவரை அவமானப்படுத்தும் பிள்ளையாகத் தான் நம் பிள்ளைகள் வளரும். நிற்க‌

அப்படியானால் வீட்டில் பெண்கள் செய்யும் இந்த வேலைகளுக்கெல்லாம் ஆண்கள் எல்லோரும் சம்பளம் கொடுக்கவேண்டும் என சொல்கின்றீர்களா என்ற கேள்வி இயல்பாகவே எல்லோருக்கும் எழும். வாழ்வதற்கே இன்று நமக்கு கிடைக்கும் சம்பளம் கட்டுபடியாகாத சூழலில் நம்மால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாது என்பது தான் யதார்த்தம், அதே நேரத்தில் அவர்கள் கூலிக்கு மாரடிக்கவில்லை, நம்முடன் ஏற்பட்டுள்ள திருமண‌ உறவிற்காக அவர்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்கின்றார்கள். அவர்கள் வீட்டில் சும்மா இருக்கின்றார்கள் என நாம் சொல்லும் பொய்யை முதலில் நிறுத்துவோம்.
அலுவலகத்தில் இரவு , பகலாக உழைக்கும் எனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என பொருமும் ஆண்களாகிய நாம் வீட்டில் அதைப் போலவே உழைக்கும் நம் வீட்டு பெண்களின் உழைப்பை முதலில் மதிக்கக் கற்றுகொள்ளவேண்டும். நமக்கு என்றாவது உணவு வேண்டாம் என்றால் அதை முதலில் வீட்டில் சொல்வோம். ஏனெனில் அவர்கள் நமக்காக சமைத்து குப்பையில் கொட்டுவது உணவை மட்டுமல்ல, அவர்களது உழைப்பையும் தான்.

அலுவலகத்தில் சம்பளம் வாங்கும் வேலைக்காரனாகவும், வீட்டில் முதலாளியாகவும் நடந்து கொள்ளும் நமது பழக்கத்தை மாற்றுவோம். வீட்டில் நாம் சக பயணியே அன்றி முதலாளிகள் அல்ல, அவர்களும் நம் வேலைக்காரர்கள் அல்ல‌. அவர்களுக்கு தேவையான உடை போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கு தேவையான சின்ன சின்னச் செலவுகளையும் செய்வதற்கும் நமது சம்பளத்தில் ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது அவர்கள் பணம் என்பதையும் நாம் உணர வேண்டும். இதுமட்டும் போதுமா என்றால், போதாது.

நாம்(ஆண்) மட்டும் வெளியே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் மூழ்கித் திளைக்காமல் மனைவியின் வேலையைப் பகிர்ந்து கொள்வோம். ஏனென்றால் ஆண்களாகிய நமக்கு விடுமுறை தினமாக ஞாயிற்றுக் கிழமையாவது உள்ளது, அவர்களுக்கு அந்த நாள் கூட விடுமுறை (ஓய்வு) கிடையாது. ஆண்/பெண் இருவருமே வெளியே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் கண்டிப்பாக எல்லா வேலைகளையும் இருவரும் ப‌கிர்ந்து கொள்ள வேண்டும்.
எனக்குப் பெண்கள் செய்யும் வேலை எதுவும் செய்யத் தெரியாதே என சாக்கு போக்கு சொல்ல வேண்டாம். ஏனென்றால் வீட்டில் பெண்கள் செய்யும் இந்த வேலைகளை எல்லாம் (வீட்டிற்கு) வெளியே சம்பளத்திற்காக செய்வது பெரும்பான்மையாக ஆண்களாகிய நாமே. அவர்களை வீட்டு மனைவி (House Wife) என அழைக்கும் நமது கயமையை நிறுத்திவிட்டு, வீட்டை உருவாக்குபவர்கள், நிர்வகிப்பவர்கள் ("Home Maker") என அழைக்கத் தொடங்குவோம். இங்கு நடைபெறுவது பெயர் மாற்றம் மட்டுமல்ல ஆண்களாகிய நமது மனமாற்றமும் தான். நம்முடன் வாழும் சக மனிதர்களாகிய பெண்களை, அவர்களது உழைப்பை மதிப்போம் , அவர்கள் மீது உண்மையான அன்பைப் பொழிவோம்.

அன்னை, மனைவி, அக்கா, தோழி என என்னுடன் பயணிக்கும் எல்லா பெண்களுக்கும், உலகில் உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்".


-நற்றமிழன்.ப

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024