Wednesday, March 29, 2017

'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வாங்கும் இடம் பொதுமக்களுக்கு செல்போனில் அறிவிக்கப்படும்

Published on : 29th March 2017 06:35 PM
சென்னை: குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்களில் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வாங்கும் இடம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டக் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வரும் சனிக்கிழமை (ஏப்.1) முதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் (ரேஷன் அட்டைகள்) பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக குடும்ப அட்டைகள் புதுப்பிக்கப்படாமல், ஒவ்வோர் ஆண்டும் உள்தாள் ஓட்டி கால நீட்டிப்பு செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

போலி குடும்ப அட்டைகளை நீக்கி முறைகேடுகளைத் தடுக்கவும் அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கவும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.

குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்டு வடிவில் அமைக்க ரூ.320 கோடி ஒதுக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஆதார் அட்டையிலிருந்து இணைக்க வசதியாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் சிறிய ஸ்கேனிங் கருவி வழங்கப்பட்டு கடந்த 5 மாதங்களாக ஆதார் விவரங்கள் குடும்ப அட்டை விவரங்களுடன் இணைக்கப்பட்டன.

குடும்ப அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இதையடுத்து ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு அவற்றை விநியோகிக்கும் நிலை எட்டப்பட்டுள்ளது.

சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாள்தோறும் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.

பழைய குடும்ப அட்டைகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 1-ஆம் தேதி கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக சென்னையில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளை 1-ஆம் தேதி வழங்க இயலாது. அதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 1-ஆம் தேதி ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் கார்டு தயாரானதும், ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற செய்தி அவரவர் அளித்துள்ள செல்போனில் எண்களில் தெளிவாக தகவல் அளிக்கப்படும். அதன்பிறகு மக்கள் வந்தால் போதுமானது.

செய்தி வராதவர்களுக்கு இன்னும் கார்டு ‘பிரிண்ட்’ ஆகவில்லை என்று அர்த்தம் கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அது கிடைக்கும் வரை பழைய குடும்ப அட்டைகளையே 2 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


ஸ்மார்ட் கார்டில் திருத்தம் இருந்தால் இ.சேவை மையத்துக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் போனிலும் ஆப் பதிவிறக்கம் செய்து ஓ.டி.பி. நம்பர் மூலம் திருத்தம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிலர் புகைப்படம் கொடுக்காதது உள்பட பல்வேறு காரணத்தால் பிரிண்ட் செய்வதில் காலதாமதம் ஆனது. இப்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
எனவே, ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பதற்றப்பட வேண்டாம். கார்டு தயாரானதும் உங்கள் செல்லிடைப்பேசிக்கு கண்டிப்பாக மெசெய்திகள் அதன் பிறகு ரே‌ஷன் கடைக்கு வந்தால் போதுமானது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024