Monday, March 27, 2017

 திருச்சி - தஞ்சை இரட்டை பாதை : 90 சதவீத பணிகள் நிறைவு

திருச்சி: திருச்சி - தஞ்சை இரட்டை ரயில் பாதை பணிகள், 90 சதவீதம் முடிந்து விட்டதால், இன்னும் சில மாதங்களில் ரயில்கள் இயக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. புகழ் பெற்ற ஆன்மிக தலங்கள் அதிகம் இருப்பதால், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே, 'திருச்சியிலிருந்து தஞ்சை வரை, இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்தது.


ரூ.190 கோடி : கடந்த, 2011ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், திருச்சி - தஞ்சை இரட்டை ரயில் பாதை அமைக்க, முதல் கட்டமாக, 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்டத்தின் மொத்த மதிப்பு, 450 கோடி ரூபாய்.திருச்சி, பொன்மலையில் துவங்கும் இந்த பாதை, தஞ்சை ரயில் நிலையத்தில் முடியும் வகையில், 49 கி.மீ.,க்கு திட்டமிடப்பட்டது. நில ஆர்ஜித பணிகள் முடிந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கின. இந்த வழித்தடத்தில், 13 பெரிய, 90 சிறிய பாலங்கள், மூன்று இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்தன.
விரிவாக்கம் :

 மேலும், இரட்டை ரயில் பாதையை கையாளும் வகையில், பொன்மலை, பூதலுார், சோளகம்பட்டி உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களையும் விரிவாக்கம் செய்யும் பணியும் நடந்தது. இப்படி, இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக நடந்த இரட்டை ரயில் பாதை பணி, தற்போது, 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே, ரயில்வே நிர்வாகம், '2017 ஏப்ரலில், இரண்டாவது வழித்தடத்தில் ரயில் இயக்கப்படும்' என அறிவித்திருந்தது. ஆனால், 'அதற்குள் பணிகள் முடிய வாய்ப்பில்லை என்பதால், இன்னும், மூன்று மாதங்களில், பணிகள் முழுமையாக நிறைவுற்று, ஜூலையில், இரட்டை பாதை பயன்பாட்டுக்கு வரும்' என, ரயில்வே துறையினர் தெரிவிக்கின்றனர்.அதன்பின், திருச்சியிலிருந்து தஞ்சைக்கு, எக்ஸ்பிரஸ் ரயிலில், 30 நிமிடங்களிலும், பாசஞ்சர் ரயிலில், 50 நிமிடங்களிலும் செல்ல முடியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024