Thursday, March 30, 2017

ஜனநாயகத்துக்குச் செருப்படி!

By ஆசிரியர்  |   Published on : 30th March 2017 01:37 AM

புணேயிலிருந்து தில்லிக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வருகிறார் சிவசேனை கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான ரவீந்திர கெய்க்வாட். அது முதல் வகுப்பு என்பது இல்லாத விமானம். மக்களவை உறுப்பினரான நான் முதல் வகுப்பில்தான் பயணம் செய்வேன் என்று அடம் பிடிக்கிறார் ரவீந்திர கெய்க்வாட்.

விமானப் பணிப்பெண்ணும், அறுபது வயது ஒப்பந்த ஊழியர் ஆர். சுகுமாரும், அந்த விமானத்தில் தனியாக முதல் வகுப்பு வசதி இல்லாததால், நாடாளுமன்ற உறுப்பினரான அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக விளக்குகிறார்கள். அவர்களது விளக்கத்தைக் கேட்கத் தயாராக இல்லாத கெய்க்வாட், சட்டென்று தனது செருப்பை எடுத்து ஆத்திரத்தில் ஒப்பந்த ஊழியர் சுகுமாரை அடிக்கிறார். தான் 25 முறை அடித்ததாகத் தொலைக்காட்சி சேனல்களுக்குப் பெருமையுடன் பேட்டி அளிக்கிறார்.

ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது இந்த நிகழ்வு. ஏர் இந்தியா விமானம் ரவீந்திர கெய்க்வாட்டைத் தங்களது விமானத்தில் பயணிப்பதற்குத் தடை விதித்தது. ஏர் இந்தியாவைத் தொடர்ந்து, ஏனைய விமான நிறுவனங்களும் முறைகேடாக நடந்து கொண்ட ரவீந்திர கெய்க்வாட் விமானங்களில் பயணிப்பதற்குத் தடை விதித்தன. சம்பந்தப்பட்டவர் முக்கியமான அரசியல் பிரமுகர், அதுமட்டுமல்லாமல் மக்களவை உறுப்பினரும்கூட என்று தெரிந்தும் துணிந்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட விமான நிறுவனங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்திய நாடாளுமன்றமே கொதித்தெழுந்தது, அது ரவீந்திர கெய்க்வாட்டைத் தண்டிப்பதற்கல்ல, விமான நிறுவனங்களைக் கண்டிப்பதற்கு.
'எல்லா விமான நிறுவனங்களும் ரவீந்திர கெய்க்வாட் பயணிப்பதற்குத் தடை விதித்திருக்கின்றன. ஆனால் விமானத்தில் பயணிப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களான எங்களது அடிப்படை உரிமை' என்று முழங்கினார் சிவசேனை கட்சியின் இன்னொரு மக்களவை உறுப்பினரான அர்விந்த் சாவந்த். நாடாளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸைச் சேர்ந்த விவேக் தாங்கா ஒருவர்தான் தனது சுட்டுரையில், 'எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் கெய்க்வாட்டின் செயல்பாட்டை நியாயப்படுத்த முற்படுகிறார்கள். இது வருத்தமளிக்கிறது. மக்களிடையே நம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைத்தான் இது ஏற்படுத்தும்' என்று துணிந்து பதிவு செய்திருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தரப்படும் சலுகைகள் ஏராளம் ஏராளம். ஆண்டொன்றுக்கு 34 தடவை தனது மனைவியுடன் விமானத்தில் பயணிக்கலாம். உறுப்பினரின் மனைவியோ கணவரோ எட்டு முறை தனியாகப் பயணிக்கலாம். நாடாளுமன்றம் செயல்படும்போது எத்தனை தடவை வேண்டுமானாலும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிக்கலாம். அவர்கள் விமான நிலையத்துக்கு வந்தால் அவர்களுக்கு உதவி செய்ய விமான நிலைய அதிகாரி ஒருவர் விமானத்தில் ஏறும்வரை உடன்வந்து உதவுவார். இவையெல்லாம் உரிமைகள் அல்ல, சலுகைகள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சேவைக்காக வழங்கப்படும் சலுகைகள். அதையே தங்களது உரிமையாகக் கருதும்போதுதான் ஆணவம் தலைக்கேறி, ஊழியர்களை கைநீட்டி அடிக்கும் அளவுக்கு அது அத்துமீறுகிறது.

தவறு செய்யும் உறுப்பினர்களை நாடாளுமன்றம் ஆரம்பத்திலிருந்தே கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படாததால்தான், ரவீந்திர கெய்க்வாட்டின் செயல்பாட்டையும் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியாயப்படுத்த முற்பட்டிருக்கிறார்கள். 1951-இல் உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அதை யாரும் பொருட்படுத்தவே இல்லை. அதில் காணப்பட்ட சலுகைகளையும், உரிமைகளையும் பயன்படுத்தும் அளவுக்கு, அதில் கூறப்பட்ட நடத்தை விதிமுறைகளை யாரும் பின்பற்றவில்லை. 1993-இல் சிவராஜ் பாட்டீல் மக்களவைத் தலைவராக இருக்கும்போது 'ஒழுக்கக் குழு' ஒன்றை ஏற்படுத்த முற்பட்டார். அதுவும் எடுபடவில்லை.
1992-இல் தில்லி - கொல்கத்தா ராஜதானி விரைவு ரயிலில் பிகாரில் ஏறிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் முன்பதிவு செய்து பயணித்துக் கொண்டிருந்த இந்திய அரசுப் பணி அதிகாரிகளைப் படுத்தியபாடு ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது. முறைகேடாக நடந்த அந்த உறுப்பினர்களை நாடாளுமன்றம் கண்டிக்கவும் இல்லை, தண்டிக்கவும் இல்லை.

இதுபோல நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாதாக்கள் போலவும், ரெளடிகள் போலவும் நடந்துகொள்வது, புதிதல்ல. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் பொதுஜனத்திற்குத் துணிவு கிடையாது. அவையின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையுடன் நாடாளுமன்ற, சட்டப்பேரவையாவது தவறு செய்யும் உறுப்பினர்களை எச்சரிக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை என்பதால்தான், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.

சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தாங்கள் மக்கள் தொண்டர்கள் என்பதை மறந்து செயல்படுகிறார்கள் என்பதை உணர்ந்திருந்தவர் மகாத்மா காந்தி. 'அதிகாரம் என்பது எவருடைய அறிவையும் மங்கச் செய்யும். அதிகார ஆட்சிக்கு வருவது பெரும் புகழைக் கொடுக்கலாம் அல்லது சர்வ நாசத்தையும் விளைவிக்கலாம். மக்களுக்குத் தொண்டு புரிவதன் மூலம் கிடைக்கும் விசேஷ உரிமைகள்தான் எந்தக் காலத்திலும் அழியாமல் இருக்கும். வெறும் அதிகாரச் சின்னங்களாக உள்ள உரிமைகள் அனைத்தும் அழிந்து போகும்' என்று 80 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் காந்தியடிகள் இதை உணர்ந்துதான் கூறியிருக்கிறார்.
மகாத்மா காந்தியையே மறந்துவிட்டவர்கள். அவர் சொன்னது எங்கே இவர்களுக்கு நினைவிருக்கப் போகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024