தினமும் 20 மணி நேரம் பணியாற்ற வேண்டும்: உ.பி. முதல்வர் வலியுறுத்தலால் அரசு ஊழியர்கள் கலக்கம்
அரசு ஊழியர்கள் தினமும் 20 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வலியுறுத்தலினால் அரசு ஊழியர்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.
உ.பி.முதல்வராகப் பொறுப்பேற்ற ஆர்.எஸ்.எஸ். பிண்ணணி உள்ள யோகி ஆதித்ய நாத், அதிரடி உத்தரவுகள், அதிரடி சோதனைகள் என்று ஆரம்பகால வேகம் காட்டி வருகிறார்.
இவர் பதவியேற்ற மறுநாளே இவரது உத்தரவுக்குக் கூட காத்திருக்காமல் மாட்டிறைச்சி நிலையங்கள் மூடப்பட்டன. பிறகு லக்னோவில் காவல்நிலையத்தில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு காவலர்களின் பணிகளைக் கண்காணித்து அசத்தினார்.
இப்படிப்பட்ட நிலையில் கோரக்பூரில் நேற்று நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “அரசு ஊழியர்களும் பாஜக தொண்டர்களும் தினமும் 20 மணி நேரம் உழைக்க வேண்டும். நமக்கு பொழுது போக்க நேரமில்லை, இப்படி உழைக்க நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு 20 மணிநேரம் உழைக்கத் தயாராயில்லாதவர்கள் பொறுப்பிலிருந்து விலகி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்.
மேலும் அரசு, அதிகாரிகளின் ஆதரவில் உ.பி.யில் செயல்பட்டு வரும் கிரிமினல் குற்றவாளிகள் மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டும் இல்லையெனில் சிறையில் தள்ளப்படுவது உறுதி.
2 ஆண்டுகளுக்கு நாம் மழை, வெயில், பனி என்று பாராமல் உழைக்க வேண்டும். அப்படிச்செய்தால்தான் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்” என்று பேசியுள்ளார். இவரது அடுத்தடுத்த அதிரடிகளினால் அரசு ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் உண்மையில் கலங்கிப் போயுள்ளனர்.
No comments:
Post a Comment