Saturday, March 25, 2017

Last updated : 12:40 (24/03/2017)

‘எக்காலத்துக்குமான கலைஞன்’ டி.எம்.எஸ் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!



அரை நுாற்றாண்டுகடந்தும் தமிழர்களின் செவிகளின் இன்றும் இசைராஜாங்கம் நடத்திக்கொண்டிருக்கும் டி.எம்.சௌந்தரராஜனுக்கு இன்று பிறந்தநாள்...

தமிழ்த்திரையுலகின் இருபெரும் ஆளுமைகளாக விளங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் பின்னாளில் தங்கள் திரையுலக வெற்றியை அரசியலுக்கும் முதலீடாக்கிக்கொண்டு மக்களை சந்தித்தனர். இதில் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றி அபாரமானது. அந்த வெற்றியில் அவரது திரையுலக சகாவான டி.எம்.சௌந்தரராஜனுக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு. உண்மையில் திராவிட இயக்கத்தின் நீட்சியாக கருதப்படும் அதிமுக என்ற கட்சி மக்களிடம் கொண்டுசேர்க்கப் பயன்பட்ட, வெளியுலகம் தெரியாத ஆளுமை என்றும் சௌந்தரராஜனை குறிப்பிடலாம்.

மதுரையில் இசைப்பின்னணி அல்லாத ஒரு எளிய குடும்பத்தில் 1923 ம் ஆண்டு பிறந்த சௌந்தரராஜன் பிரபல வித்வான் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசைப்பயிற்சி பெற்றவர். இளம்வயதில் கோவில் பஜனைகள், சிறுசிறு கச்சேரிகள் என தம் இசைஞானத்தை இன்னும் பெருக்கிக்கொண்டார்.

மதுரையில் கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர். அரங்கின் வெளியே அவரது புகழ்பெற்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அது தனது பாடலின் ஒலிப்பேழை என நினைத்தபடி அரங்கில் நுழைந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. கூட்டத்தில் அந்த பாடலை பாடிக்கொண்டிருந்தது ஒடிசலான ஒரு சிறுவன். கச்சேரி முடிந்ததும் “அப்படியே என்னைப் போலவே பாடுறியே... சென்னைக்கு வா தம்பி உனக்கு எதிர்காலம் இருக்கு” என வாஞ்சையோடு சிறுவனை வாழ்த்திவிட்டு சென்றார் பாகவதர்.

வசிஷ்டரின் வாழ்த்து பெற்ற பின் சிறுவனால் சும்மா இருக்கமுடியுமா.... பகீரத முயற்சிகளுக்குப்பின் கிருஷ்ண விஜயத்தில் முதல் வாய்ப்பு. சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில் 1950 ம் ஆண்டு வெளியான கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரலில் ஒலித்த முதல்பாடல். (ஆனால் பாடல் பதிவுவானது 1946ம் ஆண்டு. நான்கு ஆண்டு இடைவெளிக்குப்பின்னரே படம் வெளியானது). அன்றுமுதல் அரை நுாற்றாண்டுக்காலம் தமிழர்கள் அவரது குரலை ஒருநாளும் கேட்காமல் உறங்கிப்போயிருக்கமாட்டார்கள்; இனி உறங்கவும் முடியாது.

தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி என மளமளவென வாய்ப்புகள். மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாக பாடிய 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் டி.எம்.எஸ்ஸை கொண்டுசேர்த்தது. அதுமுதல் திரையுலகில் டி.எம்.எஸ் ராஜ்ஜியம்தான். திரையுலகில் 10 ஆயிரம் பாடல்கள், சில நுாறு மேடைகள், மூவாயிரம் பக்திப்பாடல்கள் என தன் சாதனையை பதிவுசெய்தார்.

மந்திரிகுமாரி படத்தில் அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே என்ற பாடலுக்கு சிங்காரம் என்ற துணைநடிகருக்கு பாடிய சௌந்தரராஜன், எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வாழ்வில் தவிர்க்கவியலாதவராக ஆனபின்னாலும் பந்தா இல்லாமல்தான் திரையுலகில் பவனிவந்தார். “இவருக்குதான் பாடுவேன்... இவருக்கு பாட முடியாது” என சொன்னதில்லை. யாருக்கு பாடினாலும் ஒரு ஒருவிஷயத்தில் மட்டுமே பிடிவாதம் பிடிப்பார். அது, பாடலின் சுவைக்காக ஸ்ருதி விலகி பாடமுடியாது என்பதே!

லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னாலும் ஸ்ருதி விலகி பாடச்சொன்னால் பாடமாட்டார் அதுதான் டி.எம்.எஸ்! - இது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் பாராட்டு.

எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை. திரையுலகின் அன்றைய இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல... அதன்பின் இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.

குரல் வளம் இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத பாடகர்களில் தனித்துவமாக பாடல்களை பாடியவர் என்பதே திரையிசை வரலாற்றில் டி.எம்.எஸ் விட்டுச்சென்ற தடம்.

உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடுவார்... ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன் சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு கண்டத்திலிருந்து சில ஃபார்முலாவில் பாடி அசரடிப்பார். இப்படி தனித்துவம் மிக்கவர் டி.எம்.எஸ். பாடலின் வரிகளை இசையமைப்பாளர் நோட்ஸ்க்கு தக்கபடி பாடிவிட்டு சென்றுவிடுவதுமட்டுமல்ல ஒரு பாடகரின் பணி என்பதற்கு உதாரணம் டி.எம்.எஸ்.



உயர்ந்த மனிதன் படத்தில் நடுத்தர வயதை கடந்த கதாநாயகன் தன் பால்ய வயது நினைவுகளை பின்னோக்கி பார்த்தபடி பாடும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே பாடல் காட்சியில் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக இயக்குனர் காட்சியை சித்தரித்திருந்தார். காட்சிக்கு உயிரூட்ட ரிக்கார்டிங் அறையில் குறிப்பிட்ட வரிகளை பாடும் முன் பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார். காட்சி தத்ரூபமாக பொருந்தி பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.

கண் புருவத்திலும் தன் நடிப்பை வெளிக்காட்டும் சிவாஜியையே கூட சமயங்களில் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் டி.எம்.எஸ். சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற “யார் அந்த நிலவு“ பாடல் ரெக்கார்டிங் முடிந்து படப்பிடிப்புக்காக சிவாஜிக்கு தகவல் போனது. நடிக்க வந்த சிவாஜி பாடலைக் கேட்டுவிட்டு சற்று மெனமாகிவிட்டார். அருகிலிருந்து இயக்குனர். “என்னண்ணா ஏதாவது உடம்பு பிரச்னையா... இன்னொரு நாள் படப்பிடிப்பை தள்ளிவைக்கட்டுமா என்றாராம். “வேண்டாம் கொஞ்சம் டயம் கொடு. அண்ணன் இந்த பாடலில் பிய்ச்சி உதறியிருக்காரு. கிட்டதட்ட எனக்கு சவால் கொடுத்திருக்காரு. அவ்வளவு சாதாரணமான இதுக்கு வாயசைச்சிடமுடியாது” என டேப் ரிக்கார்டரை எடுத்துச்சென்று சிலமுறை ரிகர்சல் பார்த்தபின்னரே நடித்துக்கொடுத்தாராம். அதுதான் டி.எம்.எஸ்.

மேதைகள் குழந்தைத்தன்மை கொண்டவர்கள் என்பதற்கு டி.எம்.எஸ் -ம் விதிவிலக்கல்ல. திரையுலகில் யார்மீதும் அவர் பொறாமை கொண்டவரல்ல அவர். மாறாக திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின் பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி 'சென்னைக்கு வாய்யா உனக்கு எதிர்காலம் இருக்கு' என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ் தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது. தன் குரலின் இனிமைக்காக பல சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறுவார்.



டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி, நான் உட்பட அரசியலில் பங்கெடுத்த நடிகர்களின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; அரசியல் வாழ்க்கையிலும் டி.எம்.எஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஆம்... தேர்தல் பிரசாரங்களுக்கு நாங்கள் செல்லும் இடங்களில் எத்தனை மணிநேரங்கள் நாங்கள் தாமதமாக சென்றாலும் மக்களை காத்திருக்கச்செய்தது, எங்களுக்காக அவர் குரல் கொடுத்து பாடிய பாடல்கள்தான். இப்படி எங்கள் அரசியல்வாழ்விலும் அவர் பங்கு முக்கியமானது" என வெளிப்படையாக சொன்னார் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இது நிதர்சனமும் கூட.

ஆனால் தன்னால் பயனடைந்த கதாநாயகர்கள் பின்னாளில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தபோதுகூட அவர்களின் சிறு பரிந்துரைக்கு கூட சென்று பல் இளிக்காத பண்பாளராக இறுதிவரை திகழ்ந்தார் டி.எம்.எஸ்.

கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற படத்தில் தானே க(தை)தாநாயகனாக நடித்தார். அருணகிரிநாதர் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை புகழ்ந்து “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடலை பாடியிருந்தார். தான் பாடும் பாடலின் பொருளை அறிந்தபின்னரே பாடும் வழக்கமுடைய டி.எம்.எஸ் இந்த பாடலை பாடும் முன் கிருபானந்தவாரியாரிடம் நேரில் சென்று அதற்கான பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். புகழ்பெற்ற அந்த பாடலைக் கேட்ட அவரது பையன்களில் ஒருவர், “அப்பா, உனக்கு சிவாஜி குரல் கொடுத்தாரா” என கேட்க விழுந்து விழுந்து சிரித்தாராம் டி.எம்.எஸ்.
“வடநாட்டுக்கு ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.சவுந்தரராஜன் என ஒரு முறை டி.எம்.எஸ் குறித்து சிலாகித்த வாலி, கர்நாடக பாடகர்களே கூட சமயங்களில் சுருதி விலக்கக்கூடும். டி.எம்.எஸ் எப்போதும் அதை செய்யமாட்டார். அத்தனை இசைஞானம்” என புகழ்ந்தார்.

தெலுங்கு படம் ஒன்றின் பாடல் பதிவின்போது 'கிருஷ்ணா மனமிரங்கி வந்து என்னை காப்பாற்று' என்ற பொருள்படும் தெலுங்கு வரிகளை பாடினார். அந்த வரிகளை பாடுகிறபோடு உச்சஸ்தாயில் அதிகாரமாய் தெரிந்தது. “உதவி கேட்கிற ஒருவனின் குரல் இறைஞ்சுவதுபோல்தான் இருக்கவேண்டும். அதிகாரக்குரலில் இருப்பது முரண்” என பாட மறுத்தார் டி.எம்.எஸ். இத்தனைக்கும் இசையமைப்பாளர் அன்று பிரபலம். இசையமைப்பாளர் தயவு இல்லையென்றால் தொழிலில் நீடிக்கமுடியாது என்றாலும் அத்தனை துணிச்சலாக பாட மறுத்தவர் டி.எம்.எஸ்.

டி.எம்.சௌந்தரராஜனுக்கு மத்திய அரசின் கவுரவம்போன்றெ நிரந்தர புகழ்தருகிறது இன்னொரு முயற்சி. ஆம் அவரது வாழ்க்கை வரலாற்றுத்தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இமயத்துடன் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இத்தொடர் ஓர் வழக்கமான முயற்சி அல்ல; அவரது வாழும்காலத்திலேயே அவரையே கொண்டு அவர் வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகள், இடங்கள், அவரது திரையுல சாதனைகள், மற்றும் 3 தலைமுறை சினிமா உலக ஆளுமைகளுடன் அவரை உரையாட வைத்தும் கிட்டதட்ட 12 ஆண்டுகள் உழைப்பின் பலனாய் குறிஞ்சி மலராய் மலர்ந்திருக்கிறது.

அடையாறு திரைப்படக்கல்லுாரியின் முன்னாள் மாணவர் டி.விஜயராஜ் இதனை இயக்கியுள்ளார். இவர் ஏ.சி திருலோக்சந்தரின் முத்துக்கள் தொலைக்காட்சித்தொடரில் பணியாற்றியவர்.

“ஆபாவாணனின் தாய்நாடு படத்திற்கு பாட வந்தபோது டி.எம்.எஸ் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவரைப்பற்றி பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். எப்பேர்ப்பட்ட சாதனையாளரை நாம் கொண்டாடாமல் இருக்கிறொம் என உணர்ந்தேன். அதுவரை வெறும் ரசிகராக இருந்த நான் அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணமாக்கவேண்டும் என முடிவெடுத்தேன். ஒருநாள் அவரை வீட்டில் சந்தித்து இதுபற்றி சொன்னபோது, சத்தமாக சிரித்தவர், “நான் அப்படி ஒன்றும் சாதனை செய்யலையேப்பா” என மறுத்துவிட்டார். பலநாட்கள் தொடர்ந்து வற்புறுத்தலுக்குப்பின்னர்தான் ஒப்புக்கொண்டார். மிகப்பெரிய ஆளுமையின் வாழ்க்கையை பதிவுசெய்கிறோம் என்பதால் சிறப்பானதொரு தொடராக இருக்கவேண்டும என ஆரம்பத்திலேயே திட்டமிட்டுக்கொண்டேன்.

கடந்த 2001 ம் ஆண்டு மதுரையில் அவரது பிறந்த வீட்டில் முதற்காட்சி எடுக்கப்பட்டது. அவரது கச்சேரிகள், மற்ற பொதுநிகழ்ச்சிகளுக்கு இடையுறு இன்றி படப்பிடிப்பை வைத்துக்கொண்டேன். டி.எம்.எஸ் பிறந்த வீடு முதல் அவர் இளம்வயதில் கச்சேரிகள் செய்த இடங்கள் முதல் பாடல் பதிவான கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ, சேலம் மாடர்ன் தியெட்டர்ஸ், பட்ஷிராஜா ஸ்டுடியோ, சென்னையில் அவர்கள் வாழ்ந்த இடங்கள், முத்தாய்ப்பாக கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆரின் துணைவியார் சதானந்தவதியின் குழல்மன்னம் வீடு, திரையுலக வாழ்வில் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய இடங்கள் என அத்தனை இடங்களுக்கும் அவரை அழைத்துச்சென்று அவரை பேட்டி எடுத்து பதிவு செய்திருக்கிறோம். மும்பையில் லதா மங்கேஷ்கர், ஆந்திராவில் நாகேஷ்வரராவ், தமிழகத்தில் சிவாஜி குடும்பத்தினர், எஸ்.எஸ்.ஆர் , ரவிச்சந்திரன்,ரஜினி, துவங்கி 3 தலைமுறை கலைஞர்கள் என திரையுலகின் அத்தனை ஆளுமைகளுடனும் அவரை சந்தித்து உரையாட வைத்து பதிவு செய்திருக்கிறோம்.

டி.எம்.எஸ் உடன் முரண்படும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடனும் இதில் காரசார விவாதம் செய்திருக்கிறார் டி.எம்.எஸ். கல்லுாரி மாணவர்களுடன் அவர் தன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்கிறார். இந்த வகையில் இந்த தொடர் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறாக மட்டுமல்லாமல் திரையுலக வரலாற்று ஆவணமாகவும் இருக்கும். டி.எம்.எஸ் பாடி தற்போது கிடைக்காத பல அரிய பாடல்களை மலேஷியாவில் உள்ள கொலம்பியா நிறுவனத்திடம் இருந்து சேகரித்து இணைத்துள்ளோம். 150 வாரங்களுக்கு ஒளிபரப்பும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 2001ம் ஆண்டு எடுக்கத்துவங்கி 2013 ம் ஆண்டுவரை சுமார் 12 ஆண்டுகள் இதற்கென உழைத்திருக்கிறோம். சுமார் 60 லட்ச ரூபாய் வரை செலவானது.



சமயங்களில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கநேர்ந்தபோது இந்த திட்டத்தை கைவிடும்படி பலர் யோசனை சொன்னார்கள். ஆனால் தளராமல் போராடி எடுத்து முடித்திருக்கிறேன். பணம், பொருள் இத்தனை வருட உழைப்பும் அதனால் ஏற்பட்ட களைப்பையும் தொடரைப்பார்த்து மக்கள் அளிக்கும் பாராட்டு போக்கிவிடும். படைப்பாளி வேறு என்ன எதிர்பார்ப்பான்” - இறைவனுக்கு படையல் வைத்த தொண்டனாய் முகம் மலர சொல்கிறார் டி.விஜயராஜ்.

“கோவை பட்ஷிராஜா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்த சென்றபோது அதன் இப்போதைய உரிமையாளர் அனுமதி தரவில்லை. வற்புறுத்தலுக்குப்பின்னர் அனுமதி கிடைத்தது. அப்போது அங்கிருந்த ஸ்டுடியோ சின்னமான கழகுசிலை உடைபட்டு கிடந்ததை கண்டு டி.எம்.எஸ் அழுதுவிட்டார். அதை உரிமையாளர் கண்டுகொண்டார். மறுதினம் நாங்கள் படப்பிடிப்புக்கு சென்றபோது உடைந்த சிலையையும் காணவில்லை. காட்சி உயிரோட்டமாக இருக்கும் என நினைத்து சென்ற எங்களுக்கு அதிர்ச்சி. கொஞ்சநேரத்தில் உரிமையாளர் வந்தார். அங்கிருந்த புல்கட்டுகளை விலக்கி காண்பித்தார். ஆம் பல ஆயிரங்கள் செலவில் ஒரே இரவில் அதை பழையபடி புதிததாக செய்து அங்கு வைத்திருக்கிறார். டி.எம்.எஸ் ஆனந்த கண்ணீர் விட்டார்.



படப்பிடிப்பின்போது இப்படி பல நெகிழ்வான அனுபவங்கள். இந்த தொடருக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது நாங்கள் செய்யவேண்டிய வேலைகளை நீங்கள் செய்கிறீர்கள் என அவர் என்னைப்பாராட்டியதை மறக்கமுடியாது. அப்போது கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவில் அவரது தாயார் முதன்முதலாக மேக்கப் டெஸ்ட்டுக்காக எடுத்த படங்களை சேகரித்து வந்து அவரிடம் காண்பித்தோம். நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னார் ஜெயலலிதா. டி.எம்.எஸ். அவர்களுடன் தான் பாடிய பாடல்களையும் தன் பரபரப்பான அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் பகிர்ந்துகொண்டார்” என்கிறார் விஜயராஜ்.

ஓய்வுநாட்களில் தானே சமைத்து தன் குடும்பத்தினருக்கு பரிமாறும் சமையற்கலைஞர் நிபுணர் டி.எம்.எஸ், தான் இசையமைத்த படத்தில் தன் சொந்த மகன்களுக்கு வாய்ப்பு வழங்காமல் பாடலின் சுவைக்காக இன்னொரு பிரபல பாடகரின் பாட வைத்த இசையமைப்பாளர் டி.எம்.எஸ் என ஆச்சர்யமான அவரது பல பரிமாணங்களை இந்த தொடர் தொட்டுச்செல்கிறது.

கடந்த ஜனவரிமாதம் டி.எம்.சௌந்தரராஜனுக்கு மத்திய அரசு தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த 10 ஆளுமைகளுக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்புசேர்த்த இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய கலைஞர் டி.எம்.எஸ் மட்டுமே. ஏற்கனவே மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுபெற்றவர் டி.எம்.எஸ்.

இசையுலகத்தில் டி.எம்.எஸ் புகழ் என்றும் நிலைக்கும்!

- எஸ்.கிருபாகரன், வெ.நீலகண்டன்

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...