Thursday, March 30, 2017

 பாடம் கற்றுத்தருகிறது ஒரு பள்ளிவாசல்!

கோவை : இஸ்லாமியர்கள், 'ஒழு' செய்வதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, பூமிக்குள் செலுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.தொழுகை செய்வதற்கு முன்பாக, கை, கால் மற்றும் முகம் ஆகியவற்றை சுத்தமாகக் கழுவுவது (ஒழு), இஸ்லாமியர்கள் கடை பிடிக்கும் முக்கிய மரபாகவுள்ளது. ஒவ்வொரு பள்ளி வாசலிலும், தொழுகைக்காக ஒழு செய்ய மட்டும், தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கோவையில், 100க்கும் அதிகமான பள்ளி வாசல்கள் உள்ளன; இவற்றில், ஒரு நாளைக்கு, 10 லட்சம் லிட்டர் தண்ணீர், 'ஒழு' செய்வதற்காக செலவிடப்பட்டு, சாக்கடையில் கலப்பதாக தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.தற்போதுள்ள கடுமையான வறட்சியால், நகரிலுள்ள சில பள்ளிவாசல்களில் ஒழு செய்யவும் தண்ணீர் இல்லாமல், விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 இதனால், பள்ளி நிர்வாகத்தினரும், பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையைத் தவிர்ப்பதற்காக, கரும்புக்கடை சல்மத் நகரிலுள்ள மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளி வாசலில், தண்ணீர் சேகரிப்புக்கான முன் மாதிரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, இந்த பள்ளி வாசலில், ஒழு செய்யும் தண்ணீரை பூமிக்குள் சுத்திகரித்து அனுப்புவதற்குதேவையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 5 அடி விட்டம், 12 அடி ஆழத்தில் இரண்டு பெரிய குழிகள் தோண்டப்பட்டு, அதில் தண்ணீரை சுத்திகரிப்பதற்கான கூழாங்கற்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் நிரப்பப்பட்டுள்ளன. இதனால், தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் நிலத்துக்குள் அனுப்பப்படுகிறது.இதன் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. அடுத்த கட்டமாக, கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹூதா, ஒப்பணக்கார வீதி அத்தர் ஜமாஅத் பள்ளி வாசல், ஆர்.எஸ்.புரம் குர்ரதுல் அயன் ஆகிய பள்ளிவாசல்களில், இதே போன்ற தண்ணீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்க முயற்சி நடப்பதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், ''கோவையில், பள்ளி வாசல்களில் ஒழு செய்ய பயன்படுத்தும் தண்ணீரை, சுத்திகரிப்பு செய்து, பூமிக்குள் செலுத்துவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. ''எனவே, மற்ற பள்ளி வாசல்களுக்கு முன் மாதிரியாக, இந்த கட்டமைப்பு, எங்களது பள்ளி வாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறைவனின் அருட்கொடையான தண்ணீரை, சாக்கடையில் கலந்து விரயமாக்காமல், அதை சுத்திகரிப்பு செய்து, மறு பயன்பாட்டுக்குக் கொண்டு வர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மற்ற பள்ளி வாசல்களிலும் தொடரும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024