Monday, March 27, 2017

கருவூலம்: கடலூர் மாவட்டம்!

Published on : 14th March 2017 03:43 PM  
KOLLIDAM

கடலூர் மாவட்டம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்று. இதனை கிழக்கே வங்காள விரிகுடாவும், பிற பகுதிகளில் விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் சூழ்ந்து உள்ளது. இந்த மாவட்டம் 3678 ச.கி.மீ. பரப்பளவும், 57.5 கி.மீ நீளமுள்ள கடற்கரையும் கொண்டது.
முன்பு தமிழ் நாட்டில் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் இப்பகுதி தென்னாற்காடு மாவட்டமாக இருந்தது. 1993இல் விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டபின் "தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம்' ஆகியது. பின்னர் கடலூர் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டம் நிர்வாக வசதிக்காக கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, புவனகிரி என ஒன்பது வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடலூர் நகராட்சியே இம்மாவட்டத்தின் தலைநகரமும், பெரிய நகரமுமாகும்.

வரலாற்று தகவல்கள்!
சரித்திரக் குறிப்புகளின்படி சங்க காலத்திற்குப் பின் பல்லவர்களும், சோழர்களும், முகலாயர்களும், மற்றும் பல அரச பரம்பரையினரும் இப்பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளனர்.

சோழ மன்னர் முதலாம் பராந்தகச் சோழன் (907-935) "வீர நாராயண சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் ஒரு ஊரினை உருவாக்கினார். (வீர நாராயணன் என்பது அவரது சிறப்புப் பெயர்) அதுவே இன்று காட்டு மன்னார்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஊருக்கு அருகிலேயே அவருடைய மகன் ராஜாதித்திய சோழனால் விவசாயிகளின் நலன் கருதி, "வீர நாராயணன் ஏரி' என்ற பெரிய ஏரி ஒன்று வெட்டப்பட்டது! அந்த ஏரிதான் இன்று "வீராணம் ஏரி' என்று அழைக்கப்படுகிறது.
1600ஆம் ஆண்டுக்குப் பின் ஐரோப்பாக் கண்டத்தின் டென்மார்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், பிரான்ஸ், மற்றும் பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்பகுதிக்கு வணிகம் செய்வதற்காக வந்துள்ளனர். இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பாண்டிச்சேரி பகுதியிலும், பிரிட்டிஷார் கடலூர் பகுதியிலும் வணிகம் செய்வதாகக் கூறிக்கொண்டு தங்கள் குடியிருப்புப் பகுதிகளை அமைத்து ஆதிக்கம் செலுத்தினர். ஆதிக்க ஆசையில் இப்பகுதி பலமுறை போர்க்களமானது.

பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் கடலூர், சிறிது காலம் தலைமை அதிகார மையமாகவும், முக்கியமான துறைமுக நகரமாகவும் இருந்தது. அவர்கள் காலத்திலிருந்தே இப்பகுதி கடலூர் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் முற்காலத்தில் பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு என மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் என்பதால் "கூடலூர்' என்று அழைக்கப்பட்டது! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூடலூர் 1780இல் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் "இஸ்லாமாபாத்' என்ற பெயரில் இருந்தது. 1782இல் அவரது மறைவுக்குப் பிறகு 1783இல் "கடலூர் போர்' மூலம் ஆங்கிலேயர் கைப்பற்றி பெரிய துறைமுகமாக மாற்றினர். தங்கள் நாட்டுடன் வணிகத் தொடர்புக்கு இந்தத் துறைமுகத்தையே அதிகம் பயன்படுத்தினர். இங்கிருந்து கப்பல்கள் மூலம் பெருமளவில் பொருட்கள் அனுப்பப்பட்டது!

குறிப்பாக அவர்கள் தொடங்கிய சர்க்கரை ஆலையின் (E.T.D.PARRY LTD 1782) சரக்குகளும் பரங்கிப்பேட்டை இரும்பு உருக்கு ஆலையில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்களும் இங்கிருந்தே இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இயற்கைத் துறைமுக நகரமான கடலூரின் அன்றைய பெருமையை வெளிப்படுத்தும் அடையாளங்கள் இன்றும் இங்குள்ளன. ஐரோப்பியக் கட்டிடக் கலையில் அமைந்த சில கட்டிடங்களும் ஆங்கிலேயர்கள் பெயர்கள் கொண்ட சில தெருக்களும் இந்நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

இம்மாவட்டத்தின் ஆட்சியாளராக "ராபர்ட் கிளைவ்' இருந்தபோது "கார்டன் ஹவுஸ்' என்ற கட்டிடத்தில் தங்கியிருந்தார். இக்கட்டிடத்தின் கூரை, செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

கடலூரிலிருந்து 35கி.மீ. தூரத்தில் கடற்கரையில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை முன்பு "போர்டோ நோவோ' என்று அழைக்கப்பட்டது! இங்கு போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என அடுத்தடுத்து ஆதிக்கம் செலுத்தினர். மேலும் இங்குதான் மைசூர் மஹாராஜாவிற்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே போர் நடந்தது.

நீர்வளம்!
நதிகள் கடலில் சங்கமிக்கும் கழிமுகப் பகுதியான இம்மாவட்டத்தினை தென்பெண்ணையாறு, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம் ஆகிய நதிகள் கடந்து செல்கின்றன.

தென்பெண்ணையாறு
பெங்களூரிலிருந்து 60கி.மீ. தூரத்தில் உள்ள நந்திமலையில் தோன்றி, கர்நாடகம், தமிழ்நாடு மாநிலங்கள் வழியாக 391கி.மீ தூரம் ஓடி, கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கெடிலம் ஆறு
விழுப்புரம் மாவட்டத்தில் தோன்றி கடலூரில் வங்காளவிரிகுடாவில் கலக்கிறது. இச்சிறு நதியைப் பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளாறு
சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் தோன்றி 193கி.மீ தூரம் பயணித்து பரங்கிப்பேட்டையில் கடலில் கலக்கிறது. இந்நதியில் முக்கிய துணையாறான மணிமுக்தா நதி இம்மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றுடன் இணைகிறது.

இந்நதிக்கரையில் உள்ள புவனகிரிதான் மகான் ஸ்ரீராகவேந்திரர் பிறந்த ஊராகும்! இங்கு அவருக்கு ஒரு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம்
காவிரி ஆறு திருச்சி அருகே முக்கொம்பில் இரண்டாகப் பிரிகிறது. இங்குதான் மேலணை உள்ளது. இதில் வடகிளையே "கொள்ளிடம் ஆறு' எனப்படுகிறது. 150கி.மீ. தூரம் ஓடி பரங்கிப்பேட்டைக்குத் தெற்கே 5கி.மீ. தொலைவில் கடலில் கலக்கிறது. இந்நதி கடலூர் மற்றும் நாகப்பட்டினம் இடையேயான எல்லையில் பாய்கிறது.
மேலும் இங்கு வீராணம் ஏரி, வெலிங்டன் ஏரி, பெருமாள் ஏரி என மூன்று பெரிய ஏரிகளும் உள்ளன.

விவசாயம்
நெல், கரும்பு, சோளம், ராகி, வரகு, கம்பு, சிறுபயறு, உளுத்தம்பருப்பு, உள்ளிட்ட பல உணவுப்பொருட்கள் இங்கு விளைகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது. இங்கிருந்து பல நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்குள்ள பாலூரில் காய்கறி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இது 1905இல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் 2ஆவது "விவசாய ஆராய்ச்சி நிலையமாக' தொடங்கப்பட்டது.

தொழில்வளம்
இங்கு நெய்வேலி அனல்மின் நிலையம், பழுப்பு நிலக்கரிச் சுரங்கம், சர்க்கரை ஆலைகள், மீன் பதப்படுத்துதல், மீன் எண்ணை உற்பத்தி, சிப்காட் தொழிற்பேட்டையின் தொழிலகங்கள் என பல தொழிற்சாலைகள் உள்ளன.
(தொடரும்)

தொகுப்பு : கே. பார்வதி , திருநெல்வேலி டவுன்



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024