M.G.R. எல்லாருக்கும் உதவும் நல்ல உள்ளம் கொண்டவர். என்றாலும், சில நேரங்களில் சிலரால் அவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார். தன்னைப் பற்றி வரும் தவறான செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் அவர் விளக்கம் அளிக்க மாட்டார். மக்கள் தன்னை தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டுமல்ல; விளக்கம் அளிப்பதன் மூலம் யாருடைய பெயரும் கெடக் கூடாது என்ற எண்ணம் எம்.ஜி.ஆருக்கு.
நடிகர் சந்திரபாபு பன்முகத் திறமை வாய்ந்த கலைஞர். நடிப்பு, நடனம், இசை என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். எப்போதும் வெளிநாட்டவர்போல கோட்டும் சூட்டும் அணிந்து மிடுக்காகக் காட்சி தருவார். ‘குலேபகாவலி’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் நட்பு மலர்ந்தது. படப்பிடிப்பில் ஒருநாள் சந்திரபாபுவின் கைகளைப் பற்றிக் கொண்டு ‘‘இனி நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்’’ என்று நெகிழ்ந்துபோய் எம்.ஜி.ஆர். கூறினார்.
அப்போதைய எம்.ஜி.ஆரின் படங்களில் சந்திரபாபுவும் கட்டாயம் இடம் பெறுவார். தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். அப்படத்தில் முட்டைகளை குடித்து விட்டு, பிறகு வாயிலிருந்து கோழிக் குஞ்சை அவர் வெளியே எடுக்கும் காட்சியில் சிரிக்காதவர் இருக்க முடியுமா?
கோழிக்குஞ்சு தொண்டையை பிறாண்டும் அபாயம் இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். தடுத்தும் கேட்காமல் அந்தக் காட்சியில் பிடிவாதமாக அர்ப்பணிப் போடு நடித்தவர் சந்திரபாபு. படத்தின் தயாரிப்பாளருமான எம்.ஜி.ஆர் கவலை அடையும் அளவுக்கு சில நேரங்களில் அவரின் வேடிக்கை விளையாட்டுக்கள் சென்றுவிடும். ‘நாடோடி மன்னன்’ படப் பிடிப்பின்போது ஒருநாள் எம்.ஜி.ஆர். எச்சரித்தும் கேட்காமல் ஒரு முரட்டுக் குதிரை மீது ஏறி கீழே விழுந்து மயக்க மடைந்துவிட்டார். நல்லவேளையாக, பெரிய காயம் எதுவும் இல்லை.
‘‘எண்ணங்கள் ஏப்பங்கள் அல்ல, அப்படியே வெளியே விடுவதற்கு’’ என்று நயமான உவமையை பேரறிஞர் அண்ணா சொல்வது உண்டு. சந்திரபாபு தனது எண்ணங்களை அப்படியே வெளியே விடக்கூடியவர். கேலியும், கிண்டலும், அலட்சியமும் அவருடைய நகைச்சுவை போலவே உடன் பிறந்தவை. எல்லாரையும் கிண்டல் செய்யும் ஜாலி பேர்வழி. எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவருடைய நடிப்பைப் பற்றியும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்வார் சந்திரபாபு.
இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி தன்னால் கிண்டல் செய்யப் படும் எம்.ஜி.ஆரை வைத்தே ஜூபிளி பிக்சர்ஸ் கோவிந்தராஜூடன் சேர்ந்து ஒரு படம் எடுக்க அவர் முடிவு செய்தது சுவாரஸ்யமான முரண். படத்தின் இயக்குநரும் சந்திரபாபுதான். கதாநாயகி அவரது தோழி சாவித்திரி. படத்தின் கதையை சந்திரபாபு சொல்ல எம்.ஜி.ஆருக்கும் பிடித்துப் போனது. ‘‘எனக்கு நிறைய படங்கள் ‘கமிட்’ ஆகியிருக்கு.கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே நடிச்சுத் தரேன்’’ என்று எம்.ஜி.ஆர். உறுதியளித்தார். ‘‘இருந்தாலும் என் பொறுமைக்கும் எல்லை இருக்கு இல்லியா?’’ என்று சந்திரபாபு துரிதப்படுத்தினார்.
பரணி ஸ்டுடியோவில் பூஜை போடப்பட்டு இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. எம்.ஜி.ஆரை வைத்தே படம் எடுக்கும்போதும் அவரைப் பற்றிய விமர்சனங்களை சந்திரபாபு நிறுத்தவில்லை. அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கும் பல படங்களின் படப்பிடிப்பு. உடனடியாக, சந்திரபாபுவுக்கு கால்ஷீட் தரமுடியாத நிலை. ஒரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடமே கேட்டார் சந்திரபாபு. கால்ஷீ்ட் விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளும் தனது அண்ணன் சக்ரபாணியை பார்க்குமாறு எம்.ஜி.ஆர். சொன்னார். பொதுவாக கலைஞர்கள் உணர்ச்சிமயமானவர்கள். சந்திரபாபு என்ற பெரும் கலைஞனைப் பற்றி கேட்கவே வேண்டாம். எம்.ஜி.ஆரின் கால்ஷீட் தொடர்பாக சக்ரபாணியுடன் பேசும்போது இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்தன. நிலைமை ரசாபாசமானது. ‘‘நான் நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கி விட்டேன். நண்பர்கள் என்னைத் தடுத்திருக்காவிட்டால் ஒன்று நாற்காலி உடைந்திருக்கும். இல்லை…’’ என்று சந்திரபாபு பதிவு செய்திருக்கிறார்.அதோடு, படமும் நின்றுபோனது.
அதன் பிறகும் சந்திரபாபுவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த எம்.ஜி.ஆர். ‘‘என்ன பாபு சார்?’’ என்று நலம் விசாரித்தார். படத்துக்கு ‘மாடிவீட்டு ஏழை’ என்று பெயர் வைத்த ராசியோ என்னவோ, சந்திரபாபுவுக்கு கஷ்டகாலம் ஏற்பட்டது. தனது பழைய நண்பர் கஷ்டப்படுவதைப் பொறுக்காத எம்.ஜி.ஆர்., ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’, தனது சொந்தப் படமான ‘அடிமைப் பெண்’ ஆகிய படங்களில் சந்திரபாபுவுக்கு நடிக்க வாய்ப்புகள் அளித்தார். ‘அடிமைப் பெண்’ படத்தில் நடிக்க அவருக்கு கணிசமான தொகை யையும் ஊதியமாக அளித்தார்.
பி.யு.சின்னப்பா நடித்த ‘கண்ணகி’ படத்தில் கண்ணகியாக நடித்த கண்ணாம்பா பேசும் அனல்தெறிக்கும் வசனங்கள் 60-ஐக் கடந்த பலருக்கு இன்னும் காதுகளில் ரீங்காரமிடும். கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம். எம்.ஜி.ஆர். நடித்த ‘தாலிபாக்கியம்’ படத்தை தயாரித்து இயக்கினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் நடந்தது. படப்பிடிப்புக் குழுவினர் மைசூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். திடீரென, நாகபூஷணம் பதறியபடி எம்.ஜி.ஆரை சந்தித்து, ‘‘தயாரிப்பு செலவுக்காக கொண்டு வந்திருந்த 3 லட்ச ரூபாய் தொலைந்து விட்டது. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திரும்ப வேண்டியதுதான்’’ என்று கலங்கினார். 1966-ம் ஆண்டில் ரூ.3 லட்சம் மிகப்பெரிய தொகை.
அவரைத் தேற்றி ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் சக்ரபாணியின் மைத்துனர் குஞ்சப்பன் மூலம் சென்னையில் இருந்து ரூ.3 லட்சம் கொண்டுவரச் சொல்லி உதவினார். அதோடு மட்டுமல்ல, ‘‘இந்தப் பணத்தை நீங்கள் திருப்பித் தரவேண்டாம்’’ என்றும் சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆரை பார்த்து கண்களில் கண்ணீருடன் கைகூப்பி நின்றார் நாகபூஷணம்.
‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர். சொல்வார்… ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.’’
தொப்பி ரகசியம்
‘அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது.
படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்
- தொடரும்...
No comments:
Post a Comment