மறைகின்ற நடைபாதைகள்
By மலையமான்
First Published : 26 March 2016 01:24 AM IST
சென்னையில் ஏறத்தாழ 2,500 கி.மீ. அளவுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைகளை ஒட்டி மக்கள் நடந்து போவதற்காக, ஏறக்குறைய 830 கி.மீ. அளவில் நடைபாதைகள் போடப்பட்டுள்ளன. இந்த நடைபாதைகளில் 60 விழுக்காட்டுக்கு மேல் ஆக்கிரமிப்பாளரின் பிடியில் சிக்கியுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பாக செல்வதற்காக நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், நடைபாதை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கென்றே நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நடைபாதைகளில் இரு சக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் நிறுத்தப்படுகின்றன. நடைபாதைகளில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தாதீர்கள் என்று கூறுவதற்கு எவருக்கும் துணிச்சல் இல்லை.
அப்படிப்பட்ட இடங்களில், நடைபாதையைத் தவிர்த்து சாலை ஓரத்தில் நடந்து செல்கின்றனர்; இதனால், முதியவர்களும், சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
நடைபாதைகளின் சில பகுதிகள் விற்பனைக்களமாக மாறி விடுகின்றன. அங்கே கரும்புச் சாறு பிழியும் இயந்திரம் நிற்கின்றது; பக்கத்தில் கரும்புக் கட்டுகள் கால் நீட்டிப் படுத்துக் கொண்டிருக்கும். கொஞ்ச தூரம் சென்றால் ஆயத்த ஆடைகள் அணிவகுத்து அமர்ந்திருக்கும். அவற்றின் அணிவகுப்பு மரியாதையை அருகில் நடந்து செல்வோரின் பார்வை ஏற்றுக் கொள்ளும்.
மற்றுமோர் இடத்தில் சிறிய பெட்டிக் கடை; மற்றோர் இடத்தில் தேநீரின் மணம்; அது அப்பக்கம் செல்வோரின் கவனத்தை ஈர்க்கும். அந்தத் தேநீர்க் கடையைச் சுற்றி இருப்பவர்களால் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும்.
சில இடங்களில் நடைபாதைப் பகுதி, குப்பை மேடாக மாற்றப்படுகிறது. நகராட்சி மன்றத்தின் குப்பைத் தொட்டி கொஞ்சம் தள்ளியிருந்தால், ஏமாளியின் வீட்டுப் பின்புற நடைபாதை குப்பை மேடாகிறது.
வீடு கட்ட முனைவோருக்கு நடைபாதை கை கொடுத்து உதவும். நடைபாதை செங்கல் அடுக்கு மிடுக்குடன் நிற்கும். அதன் தனிமையைப் போக்குவதற்கு அருகில் மணல் குவியல் துணை புரியும். சில இடங்களில் நடைபாதைப் பகுதி அறிவுப் பரப்பலுக்குப் பெரிதும் வழி அமைக்கும். புதிய புத்தகங்கள் மட்டுமன்றி பழைய நூல்களும் வழிப் போக்கரை அழைக்கும்.
நடைபாதை குறுக்கு வழிப் பாதையாகவும் மாற்றப்படுவதுண்டு. பெரு நகரத்தில் போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் நடைபெறும் செயலாகும். பேருந்துகள் நிலைத்து நிற்கும் யானைகள் போல் தோன்றும். பின் தொடர்ந்த யானைக் குட்டிகள் போல் சிற்றுந்துகளும் நின்று கொண்டிருக்கும். இவற்றுக்குப் பின்னால், இருசக்கர வாகனங்கள் நிற்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் நடைபாதை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்குக் குறுக்குவழிப் பாதையாக மாறும். அந்த வண்டி நடைபாதை மேலே ஓடும். அதைக் கண்டு பாதசாரிகள் அஞ்சி ஓடுவர்; கீழே விழுவர்.
நடைபாதையின் அகலம் 1.5 மீட்டர் என்று இந்தியச் சாலைக் குழுமம் வரையறுத்துள்ளது. ஆனால், இந்த விதிமுறை சில இடங்களில் மேற்கொள்ளப்படுவதில்லை. சாலைகள் விரிவுபடுத்தும் முறையில் நடைபாதைகளுக்குரிய நிலப்பரப்பு விழுங்கப்பட்டு விடுகிறது. பின்பு நடைபாதை குறுகி விடுகிறது. அதன் மேல் நடந்து செல்வதற்குக் கால்கள் மறுத்துவிடுகின்றன. நடைபாதையின் நோக்கம் அடிபட்டுப் போகிறது.
நடைபாதை பற்றி ஆய்வும் செய்யப்பட்டு வருகிறது. வெளிப்படையான சென்னை (டிரான்ஸ்பெரண்ட் சென்னை) என்பது ஒரு தன்னார்வ நிறுவனம். இது சென்னையில் உள்ள நடைபாதைகளைப் பற்றி ஆய்வு செய்தது. அது அறிவித்த முடிவுகள் சிந்தனைக்கு உரியவை.
அவையாவன: சென்னை மாநகராட்சி 830 கி.மீ. நீளமுள்ள நடைபாதைகளைக் கவனித்து வருகிறது. இந்த நடைபாதை சில இடங்களில் 3.5 மீட்டர் அளவு விரிவாக உள்ளது (இந்த இடப்பரப்பு இரவில் மக்கள் படுத்துறங்கப் பயன்படுகிறது. இங்கு குடிசை தோன்றுவதற்கும் இடமளிக்கிறது). சில இடங்களில் நடைபாதையின் பரப்பளவு 0.6 மீட்டர் அளவாகக் குறுகியுள்ளது. 52% நடைபாதைகள் இந்தியச் சாலைக் குழுமத்தின் விதிப்படி அமையவில்லை.
சென்னையில் நடைபெறும் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுவது 33 சதவீதம் நடந்து செல்பவரும், மிதிவண்டி ஓட்டுநருமே ஆவார். சென்னையின் நடைபாதைகளில் 30 கி.மீ. அளவு வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் போடப்பட்ட நடைபாதைகளில் 40% பயன்படுத்தப்படவில்லை.
நடைபாதையைப் பயன்படுத்தும் பழக்கம் மக்களிடம் குறைவாக உள்ளது. இதனால் விபத்துக்கு ஆளாகின்றனர். ஓர் ஆண்டில் ஏறத்தாழ 230 பாதசாரிகள் கொல்லப்படுகின்றனர்.
நடைபாதைகள் பற்றி ஓர் அறிஞர் சிந்தனை செய்தார். அவர் மும்பைய் ஐ.ஐ.டி. நிறுவனத்தின் போக்குவரத்துத் திட்டப் பொறியியல் துறைப் பேராசிரியர். அவருடைய பெயர் டாக்டர் பி. வேதகிரி. நடைபாதையைப் பயன்படுத்துபவர்களின் நலனுக்காக - அவர்களின் பாதுகாப்புக்காகச் சில திட்டங்களைச் சொன்னார்.
"நடைபாதை - சாலை - என்ற இவற்றுக்கு இடையில் தடுப்புக் கம்பி வேலி அமைக்கப்பட வேண்டும்; நடைபாதையில் இருசக்கர வண்டிகள் நிறுத்துவதைத் தடுக்கும் முறையில், குட்டையான, செங்குத்துச் சிறு தூண்கள் நடப்பட வேண்டும்; போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும் பகுதியில் பாதசாரிகள் தடையில்லாமல் செல்வதற்கு ஏற்றபடி சிறு பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்; இதன் காரணமாக பாதசாரிகளுக்கு ஏற்படும் விபத்துகள் குறையும். சாலை அமைக்கும் திட்டத்தில் நடைபாதை அமைப்பது பற்றிய கருத்துக்கு முக்கிய இடம் தரப்பட வேண்டும். நடைபாதைகளைத் தவறாகப் பயன்படுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும்' என்று கூறுகிறார் அவர்.
இதைத் தவிர, சாலை விதிகளை இயல்பாக பின்பற்றும் வழக்கம் மக்களுக்கு அமைய வேண்டும். இது இளமையிலிருந்தே உருவாக வேண்டும். அதுதான் முக்கியம்.
No comments:
Post a Comment