Sunday, March 27, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? - வலைவிரிக்கும் வலையுலகம் டாக்டர் ஆர்.காட்சன்

THE HINDU 27.03.2016

என் பையனுக்கு மொபைல் போன்ல உள்ள எல்லா அப்ளிகேஷனும் அத்துப்படி”, “மூணு வயசுலேயே எல்லா கேம்ஸையும் இண்டர்நெட்டை ஆன் பண்ணி, அவனாகவே டவுன்லோட் செஞ்சிருவான்”, “பேஸ்புக்குல இப்பவே அவனுக்கு 200 ப்ரெண்ட்ஸ் இருக்காங்க தெரியுமா?” என்று மெய்சிலிர்த்துக்கொள்ளும் பெற்றோர் பலர், சில வருடங்கள் கழித்துப் பள்ளி ஆசிரியரிடமோ அல்லது மருத்துவரிடமோ “24 மணிநேரமும் நெட்லயே இருக்கான், ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு அடம்பிடிக்கிறான், ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்து மாசாமாசம் டேட்டா ரீசார்ஜ் பண்ணலேனா காலேஜ் போக மாட்டேன்னு சொல்லி வீட்டுல உள்ள பொருட்களை எல்லாம் உடைக்கிறான்” என்ற புகாருடன் வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

நாம் பயன்படுத்தும் பென்சில் மிகவும் பயனுள்ள ஒரு பொருள், அதே நேரம் அவற்றை உருவாக்க மரம் பலியாக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. அதுபோலத்தான் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாக வரும் புதிய கண்டுபிடிப்புகளால் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இல்லாமல் இல்லை.

மீம்ஸ் கலாச்சாரம்

ஒரு படத்தை அல்லது ஒருவரின் கருத்தை, நகைச்சுவை உணர்வுடன் கேலி, கிண்டல் செய்து வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளும் கலாச்சாரம்தான் மீம்ஸ் (Memes). ஆரம்பத்தில் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த மீம்ஸ், இன்று பிறரைக் கேலி செய்யவும், மனதைப் புண்படுத்தவும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு, ஆரோக்கியமற்ற ஒரு சமூகச் சூழலை உருவாக்கிவருகிறது. ஒரு தனிநபரையோ, அரசியல் தலைவரையோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ இப்படி உலகம் அறியத் தாக்குவது மிகவும் எளிது. அது மட்டுமல்லாமல் இதன் மூலம் ஒரு தரமான, நல்ல கருத்தை நீர்த்துப்போகவும் வைக்க முடியும். அல்லது விவாதத்துக்கே தகுதியில்லாத ஒரு விஷயத்தை மிக முக்கியமான கருத்தாக எல்லோருடைய கண்களுக்கும் பூதாகரப்படுத்திக் காண்பிக்கும் மாயக்கண்ணாடியாகவும்கூட இதைப் பயன்படுத்தலாம்.

பாதிப்பின் தீவிரம்

வள்ளுவர் சொன்ன ‘நாவினால் சுட்ட வடு’கூட கொஞ்ச காலத்தில் ஆறிப் போகலாம். ஆனால், இது போன்ற சமூக வலைதளத் தாக்குதல்களின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒருவரைப் பற்றிய தவறான அல்லது ஆபாசமான கருத்து ஒருமுறை உருவாக்கப்பட்டுவிட்டால், அதை முற்றிலும் அழிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆயுட்காலம் முழுக்க வலைதளங்களில் சுற்றிச் சுற்றி வந்து மனரீதியாக நிரந்தரக் காயத்தை ஏற்படுத்தும் விஷயமாக அது மாறிவிடலாம்.

சம்பந்தப்பட்ட நபருக்கு இது தீவிர மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், சிலநேரம் தற்கொலைக்கு முயற்சிக்கும் அளவுக்கு விபரீதமாகவும் கூடும். மேலும் யார் எந்தப் பதிவை வெளியிட்டாலும் அதற்கு ‘லைக்' போடுவதற்கும், தர்க்கத்துக்கு எடுத்துக்கொள்வதற்கென்று ஒரு கூட்டம் எப்போதும் இருப்பதால், தங்கள் பதிவுகள் மிகுந்த வரவேற்பு பெறுவதாக ஒரு போலியான தோற்றம் கிடைக்கிறது. இதனால் நேரம் விரயமாவது மட்டுமல்லாமல், அடிக்கடி மொபைல் போனைச் சோதித்துப்பார்க்க வேண்டும் என்ற எண்ணச் சுழற்சியும் ஏற்படுகிறது.

பாதுகாப்பற்ற உலகம்

தகவல் தொழில்நுட்பம் பல சவுகரியங்களைத் தந்து காலத்தைச் சுருக்கிக்கொள்ள உதவினாலும், சில நேரம் இந்த உலகத்தைப் பாதுகாப்பற்ற ஒரு கூண்டாகக் கருதும் அளவுக்கு நம் கண்ணோட்டத்தைத் தலைகீழாக மாற்றவும் வாய்ப்பு உண்டு. ஏனென்றால், உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம், நம்முடைய படுக்கை அறைகூடப் பாதுகாப்பாகத் தோன்றுவதில்லை. சமூக வலைதளங்களில் வரும் எச்சரிக்கைகள் நம்மைப் பதற்றப்பட வைக்கின்றன, சந்தேகக் கண்ணோட்டத்தை அதிகரிக்கின்றன. எல்லா வாழ்க்கை சூழ்நிலைகளையும் பயத்தோடு அணுகும் அளவுக்கு இது நம்மைப் பாதிக்கலாம்.

அமெரிக்க மனநல மருத்துவரான நார்மன் கேமரான், ஒருவருக்கு மனச்சிதைவை மற்றும் பிறழ்வை (Delusion) ஏற்படுத்தக்கூடிய பல சமூகச் சூழல்களை வரிசைப்படுத்திக் கூறியிருக்கிறார். ‘அதிகப்படியான சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் சமூகச் சூழல் அல்லது ஒருவர் தன்னைச் சுற்றிலும் ஏதோவொரு மாயவலை பின்னப்பட்டிருப்பதாக உணரும் சமூகச் சூழ்நிலை போன்றவை ஒருவருக்கு மனச் சிதைவை உருவாக்கும் அளவுக்குச் சக்திவாய்ந்தவை’ என்ற அவருடைய கருத்து கவனிக்க வேண்டியது.

தொற்றுநோயா?

டெலூஷன் (Delusion) என்பதற்கு நடக்காத ஒரு விஷயத்தை, அது உண்மையில் தனக்கு எதிராக நடந்துகொண்டிருப்பதாகத் தீர்க்கமாக நம்புவது என்று அர்த்தம். முன்பெல்லாம் மனச்சிதைவு (Schizophrenia) நோயாளிகள், யாரோ தனக்குச் செய்வினை வைத்துவிட்டதாகவோ அல்லது வேறு கிரகத்திலிருந்து யாரோ தன்னைக் கட்டுப்படுத்துவதாகவோதான் சொல்வார்கள். ஆனால், சமீபத்தில் நான் பரிசோதித்த படிப்பறிவற்ற ஒரு கிராமத்துப் பெரியவர், அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் தன்னை ‘வாட்ஸ்அப்' மூலமாகக் கட்டுப்படுத்தி, ‘வாய்ஸ் மெயில்' மூலமாக மிரட்டுவதாகச் சொன்னது மிகுந்த ஆச்சரியத்துக்குரிய ஒன்று. உண்மையில் அப்படியென்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை. மனரீதியாக மட்டுமல்ல, மனநோயின் தன்மையையே சமூக வலைதளங்கள் பாதிக்க ஆரம்பித்துவிட்டதற்கு இது ஒரு ‘சோற்றுப் பதம்’தான்.

மொத்தத்தில் வலிமையான ஆயுதத்தை ஆக்கத்துக்குப் பயன்படுத்துவதா, அழிவுக்குப் பயன்படுத்துவதா என்பது நம் கையில்தான் இருக்கிறது.

(அடுத்த வாரம்: இதுவும் ஒரு போதைதான்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024