சிந்தனைக் களம் » இப்படிக்கு இவர்கள்
1937-ல் வெளிவந்த ஆல்டஸ் ஹக்ஸ்லியின் புகழ்பெற்ற புத்தகம் ‘எண்ட்ஸ் அண்டு மீன்ஸ்’ (Ends and means). இன்றைய நிலைக்கும் பொருத்தமான பல கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது. பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், அவர் விரும்பிப் படித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. பத்திரிகையாளர் சாவி டெல்லியில் காமராஜரைச் சந்திக்கும்போது, அவர் தன் படுக்கையின் அருகே இந்தப் புத்தகத்தை வைத்திருந்தார் என்றும் “அரசியல் தலைவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்” என்று சொன்னார் என்றும் சாவி ஒருமுறை கூறினார்.
இதே கருத்தை காமராஜரின் சகாவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்த ரா.கிருஷ்ணசாமி நாயுடுவும் கூறக் கேட்டிருக்கிறேன். நேருவுக்கும் பிடித்தமான புத்தகம் அது. அந்த நூலை வாங்க டெல்லியில் பல புத்தகக் கடைகளில் காமராஜர் ஏறி இறங்கினார் என்றும் சொன்னார். சுவாரஸ்யமான இன்னொரு விஷயம், இந்தப் புத்தகம் நேருவுக்கும் அண்ணாவுக்கும்கூடப் பிடித்தமானது என்பது. எதற்கும் ஒரு முடிவு உண்டு. அந்த இறுதி நேர்மையாக இருக்க வேண்டும். அதுவே இயற்கையின் நீதி. அந்த வகையில், இந்தப் புத்தகத்தில் ஹக்ஸ்லி வைக்கின்ற வாதங்கள் அனைத்தும் தீர்வுகளோடு முடிவுகளையும் சொல்பவை.
எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், அவ்வளவு எளிமையான நடையைக் கொண்ட நூல் அல்ல இது. மேலோட்டமான ஆங்கில ஞானத்துடன் இதைப் படித்துவிட முடியாது. நம்மில் பலரும் காமராஜரைப் படிக்காதவர் என்றுதான் இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி இல்லை. மிகத் தீவிரமான வாசகர் அவர். பள்ளிக்கூடங்களுக்கு வெளியே தன்னை வளர்த்துக்கொண்ட மேதை.
- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை, ஃபேஸ்புக் மூலமாக.
No comments:
Post a Comment