Thursday, March 17, 2016

மாற்றம் தேடும் நம் கல்விமுறை

மாற்றம் தேடும் நம் கல்விமுறை

By ப. ஜஸ்டின் ஆன்றணி

First Published : 17 March 2016 01:19 AM IST
மனிதனை சிறந்த வழியை நோக்கி மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு என்பதை அகிலமே அறியும். இங்ஙனம் மாற்றத்தை உருவாக்கும் கல்வி முறையிலேயே மாற்றம் வரவேண்டும் என்னும் எண்ணம் உதிக்கும்போது விழிகள் ஆச்சரியத்தால் விரிகின்றன.
 எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியுற்ற மாணவன் தற்கொலை, வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் சாவு, காதல் தோல்வியால் இளம்பெண் மரணம் போன்ற செய்திகளை அறியும்போது யாரை நிந்திப்பது? இவர்களையா, பெற்றோரையா, சமூகச் சூழலையா அல்லது நம்பிக்கையை வளர்க்க உதவாத இன்றைய கல்வி முறையையா?
 ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையான இந்த நம்பிக்கை என்னும் விதை விதைக்கப்பட்டால் வாழ்வு எனும் மரம் செழித்து வளரும் என்பதில் ஐயமில்லை.
 நம்பிக்கையை விதைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியருக்குப் பெற்றோராகத் திகழ வேண்டியவர்கள் ஆசிரியர்களே. வகுப்பறையில் பாடத்தை மட்டும் அன்றாடம் படிக்காமல், உலக விஷயங்களையும் மாணவன் புரிந்து கொள்வதை உறுதிப்படுத்துதல் நன்று.
 உதாரணமாக, சச்சின் டெண்டுல்கர். இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது அவனி அறிந்ததே. ஆனால், பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று, பின்னர் தேர்ச்சி பெற்ற இந்த சச்சின், தனது சாதனைகளால் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அலங்கரிக்கப்படுகிறார்.
 தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் இன்று எத்தனை பள்ளிக்கூடங்களில் உள்ளன? எல்லா பள்ளிகளிலும் தரமான நூல்நிலையங்கள் உள்ளனவா? அப்படியிருந்தாலும் அவை மாணவரின் பயன்பாட்டுக்கு உள்ளனவா அல்லது பள்ளிக்கூட அனுமதிக்கான விதிகளில் இடம்பெறுவதற்கான ஓர்-அறை நூல்நிலையமா?
 பேருந்தில் நீண்டதூர பயணம் செய்துகொண்டிருந்தபோது அருகில் வந்தமர்ந்தார் நாகரீக உடையணிந்த ஒரு மாணவர். பள்ளிக்கூடத்தில் பாடங்கள் மட்டுமல்லாது என்னென்ன பயிற்றுவிக்கப்படுகிறதென கேட்டேன். தலையைச் சொறிந்தார். அவரிடம் 2 ஆங்கில தினசரிகளின் பெயர்களைச் சொல் என்றேன். முழித்தார். 2 தமிழ் தினசரிகளின் பெயர்களையாவது சொல்லச்சொன்னேன். அப்போதும் முழித்தார்.
 பள்ளியில் நூல்நிலையம் உள்ளதா என வினவினேன். நூல்நிலையம் உண்டு, ஆனால் அது எப்போதுமே பூட்டித்தானிருக்கும் என்றார். அப்போது புரிந்தது, தவறு மாணவர்களிடமில்லை. எய்தவனிருக்க அம்பை நோவானேன்? இன்று ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள நூல்நிலையங்கள் மாணவர்களுக்கு உதவுகின்றனவா என்பதை பள்ளி நிர்வாகம் சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
 அடுத்ததாக, ஆசிரியர்கள் பழகும் விதமும் மாணவ, மாணவியரின் ஆளுமையில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. இதுவும் கவனிக்கப்பட வேண்டும்.
 "போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் நீக்கம்' -இப்படி ஒரு செய்தி. ஓர் ஆசிரியரே மது அருந்திவிட்டு பாடம் நடத்த வகுப்பறைக்கு வருகிறாரென்றால், மாணவரிடையே இவரது மதிப்பு என்னவாக இருக்கும்? இவர் நடத்தும் பாடம் எத்தகைய தரத்துடன் காணப்படும்? எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
 "ஆசிரியரைக் கத்தியால் குத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவன்'.- இப்படியும் ஒரு செய்தி வந்தது. மாணவனது சிந்தனையும் சக்தியும் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம்; சந்தேகமே இல்லை.
 ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 அல்லது 15 வயது மாணவன் தாய்க்கு சமமாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியையே கத்தியால் குத்துகிறான் என்றால், நாம் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் விதம், சக நண்பர்கள், சமூகம் மற்றும் கல்வி நிலையங்களின் கலாசார நிலை ஆகிய அனைத்துமே காரணிகளாகின்றன. மாணவ சமூகத்துக்கு ஆசிரிய, ஆசிரியைகளின் மீதுள்ள நம்பிக்கையும், ஆசிரியர்களுக்கு மாணவர் மீதுள்ள நம்பிக்கையும் கல்வி வளர்ச்சியில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துபவை.
 "மாநில அறிவியல் கண்காட்சி. மார்த்தாண்டன்துறை பள்ளி மாணவி முதலிடம் (11.1.2013)'. இச்செய்தியை அறிந்தபோது, இந்த மாணவியின் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் எப்படிப்பட்ட உந்து சக்தியாக திகழ்ந்திருப்பார்கள் என்பதை உணர முடிகிறது.
 தரமான ஆசிரியர்களின் தகுதியான மாணவி என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேண்டுமோ? எங்கெங்கெல்லாம் தகுதியும் திறமையும் மேலோங்கி நிற்கின்றனவோ அங்கெல்லாம் சிறந்த ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளும் உருவாகிறார்கள். பிறந்தாயிற்று, வாழ்வோம் என வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், இப்படித்தான் வாழ வேண்டும் என்று சிறப்புடன் வாழ்ந்து காட்டுகிற ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர், மாணவ, மாணவியர் பாராட்டத் தகுந்தவர்களே. இவர்களோடு, நன்றாக செயல்படும் நிர்வாகம் மூலம் நம் கல்விமுறை சிறக்கும்.
 உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்வது, தன்னம்பிக்கையை வளர்க்கும் ஆளுமைப் பயிற்சிகள் வழங்குவது உள்ளிட்ட ஆற்றல் தரும் கல்வி மூலம் தற்கொலைகளையும், சாவுகளையும், மர்ம மரணங்களையும் தடுக்கும் மாற்றம் பிறக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024