எம்ஜிஆர் 100 | 24 - மென்மையான உள்ளம் கொண்டவர்!
M.G.R. தன்னால் ஒரு மனிதர் கூட வருத்தப்படக் கூடாது என்ற மென்மையான உள்ளம் கொண்டவர். தவிர்க்க இயலாத நிலையில், தன் நடவடிக்கையால் யாராவது பாதிக்கப்பட்டாலோ, மனம் புண்பட்டாலோ, உடனே அதற்கு பரிகாரம் தேடிய பிறகே அமைதி அடைவார் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்டவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ம.பொ.சி. தொடர்பான சம்பவம் அதில் ஒன்று.
‘மந்திரி குமாரி, ‘மலைக்கள்ளன்', ‘குலேபகா வலி', ‘மதுரை வீரன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்று 1956-ம் ஆண்டிலேயே எம்.ஜி.ஆர். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி ம.பொ.சி.யின் பொன்விழாவை முன்னிட்டு சென்னையில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் எம்.ஜி.ஆர். பேசும்போது, ம.பொ.சி.யின் தமிழறிவை பாராட்டி, ‘‘தமிழை மழை போல் பொழியும் சிவஞானம்’’ என்று கூறவும்... கூட்டம் ஆர்ப்பரித்தது.
1986-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மேல்சபை இருந்து வந்தது. சட்டசபைத் தேர்தலில் தோற்றவர் களை கொல்லைப்புற வழியாக பதவிக்குக் கொண்டு வரவே மேல்சபை பயன்படுகிறது என்று பொதுவாக ஒரு விமர்சனம் இருந்தது. இந்நிலையில், 1986-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் மேல்சபை கலைக் கப்பட்டது. அதுகுறித்து பல்வேறு சர்ச்சைகளும் வருத்தங்களும் நிலவின.
1984-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடவில்லை. அப்போது அவர் மேல்சபை உறுப்பினராக இருந் தார். அரசியல் காரணங்களுக்காக சபை கலைக்கப் பட்டதாகவும் பேச்சு உண்டு. ஆனால், அரசுக்கு தேவையில்லாத வீண் செலவு என்பதால் மேல்சபை கலைக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அரசுக்கு வீண் செலவு என்று கூறி ஆந்திராவிலும் மேல்சபை கலைக்கப்பட்டது. அங்கே அப்போது எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், தமிழகத்தில் அதுதொடர்பான வாக் கெடுப்பில் நடுநிலை வகித்தது.
காங்கிரஸில் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார், ‘‘மேல்சபை கலைப்பை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை என்பதால் காங்கிரஸ் நடுநிலை வகித்தது’’ என்றார். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவதாக காங்கிரஸை திமுக குற்றம் சாட்டியது.
இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, மேல்சபை கலைக்கப்பட்டதில் மிகவும் வருத்தமடைந்தவர் ம.பொ.சி! அப்போது, மேல்சபைத் தலைவராக அவர்தான் இருந்து வந்தார். அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தார். முதல்வர் எம்.ஜி.ஆரை யும் விமர்சித்தார்.
எம்.ஜி.ஆரின் நண்பரான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, ம.பொ.சி.க்கும் நெருக்கமானவர். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். அவர் ம.பொ.சி-யை சந்தித்தபோது, ‘‘மேல்சபை கலைப்பு முடிவுக்காக எதற்காக எம்.ஜி.ஆரை விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.
பொதுவாழ்வில் ம.பொ.சி. தூய்மையானவர். தனக்கென்று எந்த சொத்து சுகமும் சேர்க்காதவர். ‘‘மேல்சபைத் தலைவர் பதவி போய்விட்டால் மாதம்தோறும் எனக்கு கிடைக்கும் சம்பளமும் போய்விடும். எனக்கு இப்போது அரசாங்க கார் இருக்கிறது. அந்தக் காரும் இருக்காது. வயது முதிர்ந்த காலத்தில் வெளியே செல்ல வேண்டு மானால் என் பாடு திண்டாட்டம்’’ என்று பழனி பெரியசாமியிடம் கூறி ம.பொ.சி. வருத்தப் பட்டிருக்கிறார். ம.பொ.சி. யாரிடமும் எதுவும் கேட் டுப் பழகாதவர். எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றால் அவரிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று தனது மகள் மாதவி பாஸ்கரனிடம் சொல்லி அனுப்புவாராம்.
ம.பொ.சி. தன்னிடம் வருத்தப்பட்ட அன்று இரவே எம்.ஜி.ஆரை பழனி பெரியசாமி சந்தித் தார். விஷயத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். ‘‘அப்படியா?’’ என்று கேட்டுக் கொண்டாரே தவிர, எதுவும் சொல்லவில்லை.
அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு ம.பொ.சி. சென்றார். அங்கு, பழனி பெரியசாமியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. போனை எடுத்த பழனி பெரியசாமியிடம் பேசிவிட்டு ம.பொ.சி-யிடம் கொடுக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
ம.பொ.சி-யிடம் நலம் விசாரித்து விட்டு, அமெரிக்காவை நன்கு சுற்றிப் பார்க்கும்படியும் ‘ஷாப்பிங்’ சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படியும் இதுகுறித்து பழனி பெரியசாமியிடம் சொல்லியிருப்பதாக வும் எம்.ஜி.ஆர். கூறினார்.
பின்னர், அமெரிக்காவில் இருந்து ம.பொ.சி. திரும்பிய பின் ஒருநாள், கோட் டையில் இருந்து வீட்டுக்கு காரில் புறப் பட்ட எம்.ஜி.ஆர்., திடீரென ம.பொ.சி-யின் வீட்டுக்குச் சென்றார். முதல்வரின் எதிர் பாராத வருகையால் ம.பொ.சி. மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் அமெரிக்க சுற்றுப் பயணம் பற்றி விசாரித்துவிட்டு புறப்படத் தயாரானார் எம்.ஜி.ஆர்.
ம.பொ.சியும் வழியனுப்ப எழுந்துகொள்ள, அவரின் கையில் ஒரு சாவியை எம்.ஜி.ஆர். திணித்தார். புரியாமல் பார்த்த ம.பொ.சி-யிடம், ‘‘இது கார் சாவி. உங்களுக்கு அரசாங்கம் கார் கொடுத்திருக்கிறது. மேல்சபை தலைவராக இருந்தபோது உங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளமான ரூ.15,000 தொடர்ந்து கிடைக்கும். அந்த பதவியில் இருந்த எல்லா சலுகைகளும் வசதி களும் உங்களுக்கு தொடரும். உங்களை தமிழ் வளர்ச்சித்துறை தலைவராக நியமித்திருக் கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்க நின்றார் ம.பொ.சி.
சிலருக்குத்தான் சில பட்டங்கள் பொருத்தமாக அமையும். அப்படி எம்.ஜி.ஆருக்கு என்றே மிகப் பொருத்தமாக அமைந்தது, திருமுருக கிருபானந்த வாரியார் வழங்கிய பட்டமான ‘பொன்மனச் செம்மல்.’
- தொடரும்...
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது திருத்தணி ஆந்திராவுடன் சேர்க்கப்பட் டது. வடக்கு எல்லை போராட்டம் நடத்தி திருத் தணியை தமிழகத்துக்கு மீட்டார் ம.பொ.சி.
பின்னாளில் அவர் குடல்புண் நோயால் பாதிக்கப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அவருக்கு தைரியம் சொல்லி மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செலவுகளையும் செய்து குணப்படுத்தி கடும் வயிற்று வலியில் இருந்து ம.பொ.சி-யை மீட்டார் எம்.ஜி.ஆர்.
படங்கள் உதவி: ஞானம்
No comments:
Post a Comment