Sunday, March 20, 2016

தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறுமியர் திருமணங்கள்: 2 ஆண்டில் 378 திருமணங்களை தடுத்த அதிகாரிகள் .....ஆர்.செளந்தர்

தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறுமியர் திருமணங்கள்: 2 ஆண்டில் 378 திருமணங்களை தடுத்த அதிகாரிகள்

ஆர்.செளந்தர்

தேனி மாவட்டத்தில் பள்ளிச் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், 378 குழந்தை திருமணங்கள் சைல்டு லைன் அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் குறிப்பாக வருசநாடு, கடமலைக்குண்டு, அகமலை ஆகிய மலை கிராமங்கள் மற்றும் போடி, ஆண்டிபட்டி புறநகர் பகுதிகளில் சிறுமிகளுக்கு அதிகமாக திருமணங்கள் செய்து வைக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி படிப்பை முடிக்காத 18 வயது பூர்த்தி அடைந்த ஏழை பெண் களுக்கு அரசு வழங்கும் சலுகை களை கூட அவர்கள் பெறாமல் விரைவில் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்த போதிலும் ஆண்டுதோறும் சிறுமி கள் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் சைல்டுலைன் இயக்குநர் எஸ். முகமது சேக் இப்ராகிம் கூறியதாவது: இனக் கவர்ச்சியால் சிறுமிகள் சிலர் எளிதில் காதல் வயப்பட்டு விடுகின்றனர். இதனால், சில பெற்றோர் பள்ளிக்கு அனுப் பாமல் சிறு வயதிலேயே பெண் களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதன் காரணமாக அந்த சிறுமி உடல் மற்றும் மனரீதியாக பாதிப்புக்குள்ளாகிறார்.

தேனி மாவட்டத்தில் 2014-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி சைல்டுலைன் ஆரம்பிக்கப்பட்டது. 2014 ஏப்ரல் முதல் 2015 மார்ச் வரை 176 திருமணங்களும், 2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி வரை 202 திருமணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 378 திருமணங்களை நிறுத்தியுள்ளோம்.

திருமணம் நிறுத்தப்பட்ட சிறுமி களை தொடர்ந்து கண்காணித்து வந்தாலும், எங்களுக்குத் தெரியா மல் வசந்தவிழா என்ற பெயரிலோ அல்லது வெளியூரிலோ பத்திரிகை அடிக்காமல் சத்தமில்லாமல் திரு மணங்களை நடத்தி முடித்து விடு கின்றனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட திருமணங்களை கண்டறிய தற் போது கணக்கெடுப்பு பணியைத் தொடங்கி உள்ளோம். கணக் கெடுப்பு முடிந்த பின்னர், அந்த அறிக்கையை சமூக நலத்துறை மற்றும் காவல்துறையிடம் அளித்து நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள் ளோம்.

புகார் தெரிவிக்க..

திருமண மண்டபங்கள், கோயில், மசூதி, தேவாலயங்களில் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என அறிவுறுத் தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக விழிப்பு ணர்வு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பெற்றோர் களும் தங்களது குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிந்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

சமூக ஆர்வலர்கள் ராம்குமார், அகஸ்டின் ஆகியோர் கூறியது: ஆணுக்கும், பெண்ணுக்கும் 21வயது பூர்த்தி அடைந்த பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும் என கடந்த 1969-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், தற்போது பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது. ஆனால், பலர் உறவு முறை விட்டு போகக் கூடாது என்பதற் காகவும், வசதிபடைத்த குடும்பம், நல்ல வரன் எனக் கூறியும் அதிக வயதான நபருக்கு சிறுமி களை திருமணம் செய்து வைத்து| விடுகின்றனர்.

இதனால் பல இடங் களில் கணவன், மனைவிக்குள் புரிதல் இல்லாமல் விவாகரத்து, பிரசவக் காலங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க, சிறு வயதில் திருமணம் செய்து வைப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றனர்.
Keywords: தேனி மாவட்டம், அதிகரிக்கும் சிறுமியர் திருமணங்கள், திருமணங்களை தடுத்த அதிகாரிகள்





No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...