Wednesday, March 23, 2016

மாஜி கணவருக்கு கஷ்டம் கொடுக்காதீங்க!'பெண்ணுக்கு கோர்ட் அறிவுரை

மாஜி கணவருக்கு கஷ்டம் கொடுக்காதீங்க!'பெண்ணுக்கு கோர்ட் அறிவுரை

DINAMALAR

புதுடில்லி;'ஜீவனாம்சம் கேட்டு, முன்னாள் கணவருக்கு நிதிச்சுமை ஏற்றுவதற்கு பதில், வேலைக்குச் சென்று சம்பாதிக்கலாமே' என, முதுகலை பட்டதாரி பெண்ணுக்கு, டில்லி கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.டில்லியைச் சேர்ந்த அந்த தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்றது. 'பெண்ணின் வாழ்க்கைக்காக, மாதம், 12 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்' என, குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, கணவர், மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கை மாவட்ட நீதிபதி, ரேகா ராணி விசாரித்தார். விசாரணையின் போது, முன்னாள், கணவன் - மனைவி இருவரும் கோர்ட்டில் ஆஜராகியிருந்தனர். அப்போது, கணவன், ''என்னை விட நன்றாக படித்திருக்கிறார். வேலைக்கு சென்றால், கை நிறைய சம்பாதிக்கும் திறமை அவருக்கு உள்ளது. ஆனால், அப்படிச் செய்யாமல், வீட்டிலேயே உட்கார்ந்திருக்கிறார்,'' என்றார்.

உடனே நீதிபதி, ''நீங்கள் தான், எம்.எஸ்சி., வரை படித்திருக்கிறீர்களே... முன்னாள் கணவருக்கு நிதிச் சுமை ஏற்றுவதற்கு பதில், வேலைக்கு செல்லலாமே,'' என அப்பெண்ணிடம் கேட்டார்.
அதற்கு அப்பெண், ''எனக்கு எந்த அனுபவமும் இல்லை; இதுவரைக்கும் நான் வேலை தேடிச் செல்லவும் இல்லை. தனியாக செல்ல பயமாக இருக்கிறது,'' என்றார்.
உடனே நீதிபதி, ''கணவனுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்காக கோர்ட் வரை தனியாக வந்த உங்களால், வேலை தேடுவதற்கு தனியாக செல்ல முடியாதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட கணவர், ''அவர் வேலை தேடுவதற்காக, துணைக்கு செல்லவும், வேலை தேட உதவி செய்யவும் தயாராக இருக்கிறேன்.

அவர் வேலை தேடும் வரை, ஓராண்டுக்கு மட்டும், மாதம், 12 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்கவும் தயாராக இருக்கிறேன்,'' என்றார்.இதை ஏற்ற நீதிபதி, ரேகா ராணி, ''ஓராண்டுக்குள் வேலை தேட வேண்டும். அதற்கு உதவி செய்வதாக கூறிய கணவனுக்கு, மொபைல் எண், இ-மெயில் முகவரியை மனைவி வழங்க வேண்டும். ஓராண்டுக்கு, மாதம், 12 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த உத்தரவு, ஓராண்டுக்கு மட்டுமே செல்லும்,'' என, உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024