Thursday, March 24, 2016

நாம் எந்தக் கட்சி?



சொல் வேந்தர் சுகி சிவம்


. நாம் எந்தக் கட்சி?

வாழ்க்கையில் வெற்றி பெறும் கலையை முழுக்க முழுக்க இன்னொருவர் கற்றுத் தந்துவிட முடியாது. நாமாகத்தான் கற்க வேண்டும். உள்வாங்க வேண்டும். பத்து மாணவர்களுக்கு ஆசிரியர் ஒரே மாதிரித்தான் பாடம் நடத்துவார். அதிகமாக உள்வாங்கும் திறன் உடையவன் முதல் மதிப்பெண் பெறுகிறான். மழை சமமாகப் பெய்தாலும் களிமண் நீரை உள்ளே விடாது. மணல் முழுக்க உள்ளே உறிஞ்சும். செம்மண்ணும் மணலும் கலந்த பூமி அதிகம் உள்வாங்கிக் கொஞ்சம் வெளியே நிறுத்தும். தாவரங்கள் செம்மண் பூமியில் தளதளவென்று வளருகின்றன.

சுயமாக முன்னுக்கு வந்த கலைஞர்கள், வணிகர்கள், தொழிலதிபர்களைப் பார்த்து, ""நீங்கள் முன்னுக்கு வந்த டெக்னிக்கைச் சொல்லிக் கொடுங்கள்'' என்றால் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்களைச் சுயநலவாதி, கர்வி, தான் மட்டும் முன்னேற ஆசை என்று உலகம் வாரி வைகிறது. சொல்லித் தரக்கூடாது என்ற எண்ணம் அல்ல. இது சொல்லித் தரமுடியாதது என்பது ஏன் பலருக்குப் புரிவதில்லை? பரபரப்பில்லாமல் சிந்தித்தால் இந்த உண்மை உங்களுக்குப் புரியவரும்.

நடிப்புக் கல்லூரியில் நடிப்பைப் படிப்பாக முடித்த எவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விஞ்சியது இல்லை. என்ன புரிகிறது? ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதைவிடக் கற்றுக் கொள்வதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. சிவாஜி கணேசன் கல்லூரியில் நடிப்பைக் கற்கவில்லை. ஆனால் உலகம் முழுவதிலும் இருந்து நடிப்பைக் கற்றுக் கொண்டார். சொல்லிக் கொடுப்பதில் வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் கற்றுக் கொள்வதில் வேறுபாடு இருக்க முடியும். தனித்தன்மை சுடர்விட முடியும். இதனைப் புரிந்து கொள்ளாமல் சிலர், புகழ்பெற்றவர்கள் வெற்றி ரகசியங்களை மறைத்து வைப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இது பிழை.

இன்னொரு செய்தி. புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரின் வீட்டைத் தேடிப்போய் ஒருவர் தம்மை முன்னேற்றி விடும்படிக் கேட்டிருக்கிறார். நடிகர் மவுனமாகவே இருந்ததும், ""நான் கண்டிப்பா பெரிய ஆளா வருவேன். நீங்க சில டெக்னிக் கத்துக் குடுத்து வாய்ப்பும் வாங்கிக் குடுத்தா நான் நிச்சயம் பெரிய நடிகனா ஆக முடியும்... மத்தவங்களை வளர்க்கணும்னு உங்களுக்குக் கடமை இருக்கு'' என்று பாடம் நடத்தியிருக்கிறார்.

""இதோபார்... இப்படி எந்த இடத்திலும் போய் நான் நிற்காததால்தான் பெரிய நடிகனாக இருக்கிறேன்'' என்று கூறிவிட்டு, படார் என்று கதவைச் சாத்திக்கொண்டு போய்விட்டார். போனவர் அப்ùஸட். நடிகரை மண்டைக் கனம் பிடித்தவர் என்று வசை பாடுகிறார். உண்மை அது அல்ல. நிறையக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் எதையும் சொல்லித் தர முடியாது. பிறரைக் குற்றம் சாட்ட வேண்டாம். நமது அக்கறையை அதிகப்படுத்த வேண்டும்.

"சமைத்துப்பார்' என்கிற புத்தகத்தைப் படித்துச் செய்த சமையலைவிட அருமையாகச் சமைக்கிற அம்மணிகள் ஆயிரம் ஆயிரம் இருக்கிறார்கள். அவர்கள் குழம்பு கொதிக்கும் போதே, "உப்பு கம்மி... புளி அதிகம்' என்று ரிப்போர்ட் கொடுப்பார்கள். இது அனுபவம் மட்டுமல்ல... பழக்கம் மட்டும் காரணம் அல்ல. மனம் விழித்த நிலை. விவரிக்க முடியாத சக்தியான மனம் பூரணமாக விழித்திருந்தால் நுட்பமான பல கலைகளைக் கற்றுக் கொள்ளும்.

தூக்கத்தில் இருந்து உடல் விழித்தால் போதாது. மனதும் விழிக்க வேண்டும். வீட்டு ஜன்னலை விரியத் திறந்தால் போதாது. மூளையின் சாளரங்களை மூச்சுக் காற்றால் திறக்க வேண்டும். அப்போதுதான் நிறைய நிறைய உள்வாங்க முடியும். "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற பொன் மொழி கோடி கோடி பெறும். சொல்லிக் கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டும் நம்பி ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது.

ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி கண்ணில்லாதவர். கண்ணில்லாத போதும் கல்வி கற்பது எப்படி என்று அவர் ஆசிரியர் ஆனி சல்லிவன் கற்றுக் கொடுத்தார். ஆனால் ஆசிரியர் கற்றுக் கொடுக்காத ஆற்றலை ஹெலன் கெல்லர் சுயமாகப் பெற்றார். அதுதான் அவரை உலகின் ஆச்சரியப் பொருளாக்கியது.

விழிப்புலன் இல்லாத அவர் தொட்டுத் தொட்டு ஒவ்வொரு பொருளையும் உணர்ந்து பெயர் குறிக்கும் வித்தையை அவரது ஆசிரியர் கற்றுக் கொடுத்தார். ஹெலன் கெல்லர் ஒரு படி மேலே போய் ஒரு பொருளைத் தொட்டுவிட்டு அதன் நிறம் இன்னது என்று சொல்லத் தொடங்கினார். இது ஆசிரியர் சொல்லித் தராதது. விழிப்படைந்த மனம் அவர் விரல் நுனியில் பூரணமாய் நின்றதால் கண்களின் வேலையைக் கைகளே செய்தன. பள்ளி, கல்லூரிகளில் படித்துவிட்டால் படிப்பே முடிந்துவிட்டதாகப் பலர் கருதுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் எதையும் பூரணமாகக் கற்றுத் தர முடியாது. வேண்டுமானால் எப்படிக் கற்க வேண்டும் என்கிற தொடக்கத்தைச் சொல்லித் தரலாம். "கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த படிப்பும் எத்தனை நாள் வரும்?' என்ற கிராமத்துக் கவிதையை உணருங்கள். உயர்வது நிச்சயம்.

ஆசார்ய ரஜனீஷ் இதை விளக்க ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு மகாராஜா மகன் மிக மக்காய் இருந்தான். பவர் உள்ள பல குடும்பங்களில் "மக்கு மகன்' பிரச்சினை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியைக் கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. "என்ன செய்யலாம்' என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில் மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பல துறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பிவந்தான்.

அவனது நடை, உடை, பாவனைகள் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன், அறிவாளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைப் பாராட்டினர்.

ஒரு கிழவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். ""என்ன படித்தாய்?'' என்றார். ""நிறைய நிறைய... சோதிடம் கூட முறையாகக் கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால்கூடச் சொல்வேன்'' என்றான். கிழவர் மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, ""இது என்ன?'' என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ கணக்குப் போட்டான். அப்படி இப்படி தலையை ஆட்டிக் கொண்டான். ""உங்கள் கையில் உள்ளது வட்டமானது. ஒளியுடையது'' என்று விடை சொன்னான். கிழவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், ""அடையாளங்களைச் சொல்லுகிறாயே ஒழிய அது இன்ன தென்று சொல்லக்கூடாதா?'' என்றார். ""அது எங்கள் பாடத் திட்டத்தில் இல்லை'' என்றான் இளவரசன். ""யூகித்துச் சொல்'' என்றார் கிழவர். உடனே இளவரசன் ""பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லிவிடுவேன்... அது ஒரு வண்டிச் சக்கரம்'' என்றான்.

மடப்பயல்... சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவனும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரியவில்லை.

YOU CAN EDUCATE FOOLS; BUT YOU CAN NOT MAKE THEM WISE என்பது சத்தியம். முட்டாளைப் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது. அதனால்தான் கீதையில், ""புத்திமான்களுக்குள் நான் புத்தி'' என்கிறான் கண்ணன். புத்தியில்லாத புத்திமான்கள் அநேகம் பேர். "செவன்த் சென்ஸ்' பெறப் பலர் தியானம் செய்கிறார்கள். "காமன் சென்ஸ்' இல்லாவிட்டால் இவர்களை என்ன செய்ய..? படிக்காத மேதைகளும் உண்டு; படித்த முட்டாள்களும் உண்டு. நாம் எந்தக் கட்சி..? கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024