Monday, March 28, 2016

'நூறாண்டு காலம் வாழ்க...' என பாடியவர்அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் அவலம்

'நூறாண்டு காலம் வாழ்க...' என பாடியவர்அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் அவலம்
DINAMALAR
நுாறாண்டு காலம் வாழ்க... நோய் நொடி இல்லாமல் வளர்க...' என, சந்தோஷம் பொங்க பாடிய, திரைப்பட பின்னணி பாடகி சரளா, 76, ஆதரவின்றி அன்றாட வாழ்விற்கே திண்டாடி வருகிறார். 'சூறாவளியில் சிக்கிய படகு போல் தவிக்கிறேன்; முதல்வர் பார்வை பட்டால், கஷ்டம் எல்லாம் பனி போல் நீங்கிவிடும்' என, நம்பிக்கையோடு அவர் கூறுகிறார்.

இது குறித்து சரளா கூறியதாவது:கணவர் இறந்த பின், பொருளாதார ரீதியாக சங்கடங்களை சந்தித்தோம். உரிய நேரத்தில் திருமணம் செய்து வைக்க முடியாததால், இரு மகள்களும் துறவிகளாகி விட்டனர். மூவரும், சிறு வீட்டில் வாழ்கிறோம். அரசு மூலம், தலா, 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறது. 1,500 ரூபாய் வீட்டு வாடகை போக, 1,500 ரூபாயில் வாழ வேண்டி உள்ளது. நான், ரத்தக்கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுக்கு திண்டாடுகிறேன்.

முதல்வர் தனிப்பிரிவில், உதவி கோரி மனு கொடுத்தேன்; அது, முதல்வர் கவனத்துக்கு சென்றதா என தெரியவில்லை. நான்கு ஆண்டுகளாக அலைகிறேன். முதல்வரை பார்த்தால் நிச்சயம் உதவி கிடைக்கும். ஆண்டவனும் என்னை தவிக்க விட்டு விட்டான். என் பிள்ளைகளை தனியா தவிக்க விட்டுட்டு கண்களை மூடி விடுவேனோ என, மனம் தவிக்கிறது. சூறாவளியில் சிக்கிய படகு போல், திக்கு தெரியாமல் தவிக்கிறேன்.இவ்வாறு சரளா கூறினார்.

முதல்வரோ, திரை உலகமோ, சேவை மனம் உள்ளோரோ உதவினால், சரளாவின் இறுதி காலமாவது நிம்மதியாக அமையும். உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், அவரை, 98402 35867 என்ற போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இசையுலகில்...சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சரளா. தன், 13வது வயதில், எம்.ஆர்.ராதாவின், ரத்தக்கண்ணீர், துாக்குமேடை நாடகங்களில் பின்னணி பாடத் துவங்கியவர். அதன் பின், சினிமாவிலும் பின்னணி பாடகியாக வலம் வந்தார். பேசும் தெய்வம் படத்தில், 'நுாறாண்டு காலம் வாழ்க... நோய் நொடி இல்லாமல் வளர்க...' என்பது உட்பட, இவர் பாடிய பல பாடல்கள் இன்னும் ரீங்காரமிடுகின்றன. 'தபேலா' இசைக் கலைஞர், மயிலாப்பூர், 'அம்பி' சுவாமிநாதனை காதலித்து மணந்த இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர்.

பட்டி தொட்டிகளில் இவரது பாடல் ஒலித்துக் கொண்டிருந்தாலும், இவர் யார் என தெரியாத அளவிற்கு சென்னை, போரூர் அருகே, கோவூர் என்ற இடத்தில் உள்ள சிறு வீட்டில், இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்; அன்றாட செலவுக்கே திண்டாடி வருகிறார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...