Sunday, March 20, 2016

சொல் வேந்தர் சுகி சிவம்

சொல் வேந்தர்
சுகி சிவம்

தூங்காதே தம்பி தூங்காதே!

மீன் கண்ணைத் திறந்து கொண்டே தூங்கும் என்று படித்தேன். 'ஆச்சரியமாக இல்லையா?' என்று ஒரு நண்பர் கேட்டார். ""இல்லை... ஆச்சரியமே இல்லை... மனிதர்களில் பல பேரும் விழித்திருக்கும்போதே தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்றேன் நான். இதுதான் உண்மை.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? எப்படி எப்படி எல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம்? சுரண்டப்படுகிறோம், கொள்ளையடிக்கப்படுகிறோம்... என்ற விழிப்புணர்வே பல பேருக்கு இருப்பதில்லை. ஒவ்வொரு கணமும் விழிப்பாக இருப்பவர்களே உன்னதமானவர்கள். சரியானவர்கள்.

நீங்கள் அப்படியா? நம் அனுமதியில்லாமல் நம்மைச் சிலர் அத்துமீறி ஆக்கிரமிப்பார்கள். நம்மைத் தங்கள் வசதிக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். முட்டாளாக்குவார்கள். நாமும் கண்ணைத் திறந்துகொண்டே இவற்றைக் கண்டு கொள்ளாமல் தூங்கி வழிந்தால் என்ன ஆவது?

"பசித்திரு... தனித்திரு... விழித்திரு' என்றார் இராமலிங்கர். இப்படி மூன்றுமாக இருந்தால் மூன்றின் முதலெழுத்தும் ஆன பதவி நமக்கு உண்டு என்பார்கள். விழித்திரு என்ற சொல்லை "உத்திஷ்ட' என்கிறது பகவத்கீதை. "எழு... விழி' என்பதே இந்த அறைகூவலின் அர்த்தம். நமது அறியாமைகள் யாவும் இருளே. தூக்கமே. மரணத்தின் ஒத்திகையே. தாற்காலிகச் சாவுகளே! விழிப்பு ஒன்றே விடியல். வெற்றியின் பூபாளம்.

நான் சமயச் சொற்பொழிவும் செய்வதாலேயே பல சாமியார்கள் என்னை வளைத்துப் போட விரும்புவார்கள். அவர்களது பிரசார பீரங்கியாக இருந்து அவர்களுக்கு இல்லாத பெருமைகளை நான் முழங்கத் தயாரானால் தங்கமும் வெள்ளியும் தருவதாக ஆசை காட்டுவார்கள்.

அவர்கள் மாயாஜால மந்திர வித்தைகளைத் தமது சிஷ்ய கோடிகள் மூலம் எப்படியாவது எனக்கு விவரித்து என்னை மயக்கி என் வாயை வாடகைக்கு வாங்கி அவர்கள் புகழ் வளர்க்கத் திட்டம் தீட்டுவார்கள். நான் குழம்பியதும் இல்லை. மயங்கியதும் இல்லை.

மணிக்கணக்காக அவர்கள் மத்தியில் இருந்தபடி அவர்களை அணுஅணுவாக அளந்து பார்த்திருக்கிறேன். அதே நேரம் பல நீதிபதிகளும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் சாமியார்களின் சாம்ராஜ்யத்தில் ஏமாந்து போவதைக் கண்காணித்திருக்கிறேன். எச்சரித்தும் இருக்கிறேன்.

ஒரு சாமியார் பல பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பஞ்சாமிருதத்தில் இருந்து முருகன், விநாயகர் பொம்மைகளை எடுப்பார்... கொடுப்பார் என்று புகழ்ந்து தள்ளினார்கள். அகன்ற பாத்திரத்தில் பழங்களைப் போட்டார். வெல்லம் சேர்த்தார். தேனும் நெய்யும் ஊற்றினார்.

கொத்தாக இருந்த ஒரு கிலோ பேரீச்சம் பழத்தையும் உள்ளே போட்டுப் பிசைந்தார். "இந்தா... இந்தா' என்று எதிரில் இருக்கிற மாஜிஸ்திரேட் கையில் முருகன் சிலையை எடுத்துக் கொடுத்தார். கண்ணில் நீர் வடியக் கன்னத்தில் போட்டபடி மாஜிஸ்திரேட், "முருகா... முருகா' என்று வாங்கிக் கொண்டார்.

"முருகா... முருகா' என்று என் கண்ணிலும் நீர் வழிந்தது. கொத்துக் கொத்தாகச் சாமியார் உள்ளே போட்ட பேரீச்சம் பழத்தில் பத்து முருகன் பொம்மைகளை வைக்கலாம். இதற்கு அந்தச் சாமியாரையே மாஜிஸ்திரேட் உள்ளே வைக்கலாம். கண்ணைத் திறந்து கொண்டே கனவான்கள் தூங்கும் தூக்க தேசம் இது.

இதில் நாமும் உறங்கிவிட்டால் என்ன ஆவது? கண்ணைத் திற... தோளை நிமிர்த்து... உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எப்போதும் விழிப்பாக இரு. மதத்தின் பெயரால் ஏமாற்று வேலைகள். திருட்டுத் தனமாகக் கோழி பிடிக்கிறவன் துண்டை விரித்துக் கொண்டு காத்திருக்கிற மாதிரிக் கட்சிக் கொடியை விரித்தபடி இளைஞர்களை அமுக்கப் பல அரசியல் கோஷ்டிகள் காத்திருக்கின்றன. சிக்கிவிடாதே இளைஞனே... விழிப்பாக இரு.

தாங்கள் உயர உயரப் பறப்பதற்கு இறகுகள் இன்றித் தத்தளிக்கும் சில ஜாதித் தலைவர்கள் உங்கள் தலைகளைக் கத்தரித்து இறக்கைகளாக்க வெறி பிடித்து அலைகிறார்கள். உஷாராக இரு இளைஞனே... கொஞ்சம் தூங்கினால் உன் தலை கத்தரிக்கப்படும்! இளம்பெண்ணே! சினிமாக் கனவுகளில் உன் சேலை நழுவும்போது உன் இளமையை விலை கூறி விற்க ஒரு கூட்டம் அலைகிறது. இளம்பெண்ணே... உறங்கிவிடாதே! விழிப்பாக இரு.

வெளிநாடுகளில் வேலை என்கிற மணி மகுடங்களைக் காட்டி, பரம்பரைச் சேமிப்பையும் கொள்ளையடித்து அநாதைப் பிச்சைக்காரர்களாய் உங்கள் கையில் ஓர் அலுமினியத் தட்டைத் திணிக்கும் அராஜகம் அரங்கேறப் பார்கிறது.

இளமையே... தூங்கி வழியாதே. விழிப்பாக இரு! காலையில் கண் விழித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு விஷயத்திலும் விழிப்பாக இரு. அலர்ட், அவேக், அவேர், அரைஸ், அலார்ம் என்று ஆங்கிலத்தில் அடுக்கடுக்காக விழிப்பை உணர்த்தும் மொழிச் சொற்கள் உள்ளன.

ஒவ்வொரு சொல்லின் அர்த்தமாகவும் வாழ்ந்து பார். குழப்பம்கூட ஒரு தூக்கம்தான். மறதி, சோம்பல், தயக்கம் இவைகூட உறக்கத்தின் விதவிதமான புனைபெயர்களே. குழப்பத்தில் தத்தளித்த அர்ஜுனனை நோக்கி பகவத் கீதையில் கண்ணன் சொன்ன வார்த்தைகள்... "உத்திஷ்ட'.

அதையேதான் நானும் சொல்லுகிறேன். தூங்காதே... தம்பி... தூங்காதே. வெற்றி நிச்சயம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024