Sunday, March 20, 2016

டாக்டர் மாத்ருபூதம்.

[19:58, 20/3/2016] Appa: ஆன்மிகத்தையும் அறிவுபூர்வமான விஷயங்களையும் நகைச்சுவையோடு சொன்னவர் தென்கச்சி என்றால், பாலுணர்வு விஷயங்களை நகைச்சுவையோடு சொன்னவர் டாக்டர் மாத்ருபூதம். ‘என்னிடம் வருகிற நோயாளிகளை மனநல வைத்தியம் பார்த்து நல்லபடியாக மாற்றிவிடுவதால் என்னைச் சிலர் “மாத்தற பூதம்” என்பார்கள்; நிறைய மாத்திரைகள் கொடுப்பதால் இன்னும் சிலர் என்னை ” மாத்திரை பூதம்” என்பார்கள். அப்படிச் சொன்னால் உடனே நான் ” உங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, நோய் குணமாகிவிடும் என்று சொல்லி ஏமாத்தற பூதம் நான் இல்லை என்பேன்” என்று ஜோக்கடிப்பார்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே அவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். ஒருமுறை அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கல்லூரி நாள்களில் நடந்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றைக் கூறினார்.

வகுப்பில் ஒரு பேராசிரியர். எக்ஸ்-ரே ஃபிலிம் ஒன்றைக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தாராம். திடீரென்று கரண்ட் கட்.

பேராசிரியர் பாடத்தை நிறுத்தவில்லை. ஜன்னலுக்கு அருகில் எக்ஸ்-ரே ஃபிலிமைப் பிடித்துக்கொண்டு பாடத்தைத் தொடர்ந்து நடத்தினார். இடையில் திடீரென்று அவர் “ஓ! ரங்கநாதன் கார் வாங்கிட்டார்போல இருக்கே!” என்றதும் மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மாணவர் மாத்ருபூதம் சட்டென்று ” சார்! அதெல்லாம்கூடவா எக்ஸ்-ரேல தெரியும்? ” என்று கேட்க, வகுப்பில் சிரிப்பலை அடங்க வெகுநேரமானது.

விஷயம் என்னவென்றால், இந்தப் பேராசிரியர் ஜன்னல் அருகில் வைத்து எக்ஸ்-ரேவைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம், அங்கே சக பேராசிரியரான ரங்கநாதன் காரை ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார். அதை அவர் எதார்த்தமாகச் சொல்ல, மாணவர் மாத்ருபூதம் அதைக் காமெடியாக்கிவிட்டார்.

ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் இப்படி நிறைய டாக்டர் ஜோக்ஸ் சொல்லுவார் மாத்ருபூதம். சில சாம்பிள்கள்:

ஒரு டாக்டரிடம் நோயாளி : “டாக்டர்! நீங்க எமதர்மனைவிடப் பெரிய ஆள்! அவர் உயிரைமட்டும்தான் எடுப்பார்! நீங்க உயிரோட என் சொத்தையும் சேர்த்து எடுத்துக்கறீங்க!”

ஒரு டாக்டர் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று தன் கிளினிக்கில் ஓர் எலும்புக்கூட்டை மாட்டி வைத்திருந்தார். ஆனால் சீக்கிரமே அதை அப்புறப்படுத்திவிட்டார். காரணம், டாக்டரின் கிளினிக்கில் இருப்பது அவருடைய முதல் பேஷண்ட்டின் எலும்புக்கூடு என்று யாரோ வதந்தி பரப்பியதுதான்.

மனிதர்களே! மாட்டைப்போல உழையுங்கள்; நாயைப்போலச் சாப்பிடுங்கள்; பூனைபோலத் தூங்குங்கள்; முயலைப்போல ஓடுங்கள்; வருடத்துக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரிடம் செல்லுங்கள்!

ஒருவரது நாய்க்கு உடம்பு சரியில்லை. கால்நடை மருத்துவரிடம் கொண்டுவந்தார். நாயைப் பரிசோதித்த டாக்டர் “நாய் செத்துப் போய்விட்டது” என்றார். நாயின் எஜமானர் நம்பவில்லை. உடனே டாக்டர் அடுத்த அறைக்குப்போய் ஒரு பூனையைக் கொண்டுவந்தார். நாயின் முகத்துக்கு அருகே விட்டார். “பூனை வாசனை தெரிந்தால் நாய் உடனே குரைக்க ஆரம்பித்துவிடும்! உங்க நாய் சும்மா இருக்கிறது; இப்போதாவது நாய் செத்துவிட்டது என்பதை நம்புகிறீர்களா?” என்றார்.

சோகமான நாயின் சொந்தக்காரர் புறப்பட்டார். அவரிடம் 200 ரூபாய் ஃபீஸ் கேட்டார் டாக்டர்.

“நாய் செத்துப்போனதாகச் சொன்னதற்கு 200 ரூபாயா?” என்று அவர் கேட்க, டாக்டரது பதில்: ”என் கன்சல்டேஷன் 100 ரூபாய். பூனையை வெச்சுப் பண்ணின cat scan சார்ஜ் 100 ரூபாய்.”

டாக்டர் மாத்ருபூதத்தின் “புதிரா? புனிதமா?” என்ற நிகழ்ச்சி தமிழ் சேனல்களில் ஒரு புது முயற்சியாக இருந்தது. பாலுணர்வு குறித்த சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி அது. விஜய் டி.வி.யில் ஒளிபரப்பானது. ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அந்த நிகழ்ச்சி ரொம்பப் பிரபலமாகிவிட்டது.

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாத்ருபூதம் நன்றாகப் பாடுவார். ”புதிரா? புனிதமா” நிகழ்ச்சியில்கூட இடையிடையே பழைய தமிழ் சினிமாப் பாடல்களையும் கர்நாடக இசைக் கீர்த்தனைகளையும்கூட அவர் பாடியதுண்டு.

நடிகர் – எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் டாக்டர் மாத்ருபூதத்துக்கு ஒரு பட்டம் கொடுத்தார். என்ன பட்டம் தெரியுமா?

தமிழ்நாட்டின் வயாக்ரா!
[20:13, 20/3/2016] Appa: புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.

(டாக்டர் மாத்ருபூதம் அவர்களின் புன்னகைப் பூக்கள் என்ற  புத்தகத்திலிருந்து)

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...