Wednesday, March 30, 2016

சோகத்தால் மனவேதனை: மகனை கொன்ற தந்தைக்கு விடுதலை

DINAMALAR

சென்னை:'அடுத்தடுத்த சோகத்தால் பாதிக்கப்பட்டு, மனவேதனைக்கு ஆளான தந்தை, தன் மகனுக்கு துாக்க மாத்திரை கொடுத்தது, கொலை குற்றம் ஆகாது' என, சென்னை உயர் நீதிமன்றம், பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் ரத்து செய்தது.சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர், ஸ்டீபன். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய இவர், சங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு, ஐந்து வயதில், ஒரு ஆண் குழந்தை இருந்தது.

வேலுார் அருகில், ஸ்டீபனின் பெற்றோர் வசித்து வருகின்றனர். தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என தகவல் கேள்விப்பட்டு, மனைவி, மகனுடன், வேலுார் புறப்பட்டு சென்றார். அதன்பின், பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரவே, உடனடியாக, மனைவி, மகனுடன் சென்னை புறப்பட்டார்.காரில் வரும்போது, மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில், மனைவி சங்கீதா இறந்தார். ஸ்டீபனுக்கு, இரண்டு கால்களிலும் எலும்பு முறிந்தது.

வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில், ஸ்டீபன் சேர்க்கப்பட்டார். மகனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2008, அக்டோபரில், சம்பவம் நடந்தது.

ரூ.2.5 லட்சம்:விபத்துக்கு பின், சங்கீதாவின் உடல், சென்னை கொண்டு வரப்பட்டு, கணவன் இல்லாமலே இறுதி சடங்கு நடந்தது. அப்போது, ஸ்டீபன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை செலவு, 2.5 லட்சம் ரூபாய் ஆனது.சிகிச்சை முடிந்து, சென்னை திரும்பிய ஸ்டீபனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் இருந்த, 50 சவரன் நகையை காணவில்லை. விசாரித்தபோது, மாமனார் எடுத்து சென்றது தெரியவந்தது. மகளின் இறுதி சடங்குக்கு, 80 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும், அந்த பணத்தை தரும்படி, மருமகனிடம் கேட்டார்.

வேலையும் இல்லாமல், குடும்ப செலவுக்கும், சிகிச்சைக்கும் கையில் பணமும் இல்லாமல், ஸ்டீபன் தவித்தார்; வாழ்க்கையில், விரக்தி ஏற்பட்டது. மகனுக்கு, துாக்க

மாத்திரைகளை கொடுத்தார்.


மேற்கு மாம்பலத்தில் வசிக்கும், மாமனார் வீட்டுக்கு, மகனுடன் சென்றார். அங்கு, மாமியார் மட்டும் இருந்தார். வீட்டுக்குள் சென்று, கதவை பூட்டி கொண்டார்; துாக்கு மாட்டினார்; எடை தாங்காமல், கம்பி அறுந்து கீழே விழுந்தார். துாக்க மாத்திரை சாப்பிட்ட, மகன் இறந்தான். இது, 2009 ஜூலையில் நடந்தது.மாமியாரின் அலறல் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வந்தனர்; கதவை உடைத்து உள்ளே சென்றனர். இருவரையும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மகன், இறந்து விட்டான்; சிகிச்சையினால், ஸ்டீபன் உயிர் பிழைத்தார்.


இதையடுத்து, ஸ்டீபன் மீது, கொலை வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த, சென்னை, விரைவு நீதிமன்றம், ஸ்டீபனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். மனுவை, நீதிபதிகள் ஜெய்சந்திரன், நாகமுத்து அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. ஸ்டீபன் தரப்பில், வழக்கறிஞர் டி.செல்வம், அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் மகாராஜா ஆஜராகினர்.


குற்றமாகாது:மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

சிகிச்சை அளித்த டாக்டரின் விளக்கம் மற்றும் அவரது கருத்தில் இருந்து, 'ஸ்டீபன், சுய கட்டுப்பாட்டில் இல்லை; அவரது செயலால் ஏற்படும் விளைவுகள் பற்றி, அவர் அறிந்திருக்கவில்லை' என்பது தெரிகிறது.மருத்துவ சாட்சியத்தை பார்க்கும்போது, சம்பவம் நடக்கும் போது, ஸ்டீபனின் மனநிலை சரியில்லாமல் இருந்தது தெளிவாகிறது. எனவே, அவரது செயல், கொலை குற்றமாகாது. விடுதலை பெற, ஸ்டீபனுக்கு உரிமை உள்ளது. தண்டனையில் இருந்து, ஸ்டீபனை விடுதலை செய்கிறோம். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...