எம்ஜிஆர் 100 | 32 - எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்எம்.ஜி.ஆர். எதிலும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர். நெருக்கடியான கட்டங்கள் ஏற்படும்போது தனக்கு நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு அதை எளிதாகக் கடந்து விடுவார். அதுபோன்ற சமயங்களில் அவருக்கு தோள்கொடுக்க ராஜவிசுவாசிகள் இருப்பார்கள் என்று வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருமுறை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ராஜவிசுவாசிகளில் முக்கியமானவர் ஆர்.எம். வீரப்பன்.
1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் நிர்வாகியாக ஆர்.எம்.வீரப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார். விரைவிலேயே அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் முதல் நாடகம் ‘இடிந்த கோயில்’. திமுக சார்பில் நடந்த கல்லக்குடி போராட்ட நிதிக்காக, 1953-ம் ஆண்டு அக்டோபர் முதல் வாரம் இடிந்த கோயில் நாடகம் திருச்சியில் அரங்கேறி மக்களின் வரவேற்பை பெற்றது.
அப்போதைய சூழலில் திமுக மீது நாத்திகக் கட்சி என்ற முத்திரை பலமாக விழுந்திருந்தது. அந்த நேரத்தில் ‘இடிந்த கோயில்’ என்ற பெயரில் நாடகம் போட்டால் கடவுள் மறுப்பு நாடகம் என்று மக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் என்றும் நாடகத்தின் கருத்துக்கள் இன்னும் அதிக மக்களை அடைய நாடகத்தின் பெயரை ‘இன்பக் கனவு’ என மாற்றலாம் என்றும் எம்.ஜி.ஆருக்கு யோசனை சொன்னார் வீரப்பன். அது நியாயமாக இருக்கவே, ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
அந்தக் காலத்திலேயே மேடை நாடகத்தில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். கையாண்டார். நாடகத்தில் கனவுக் காட்சி வரும். சாட்டின் படுதா ஒன்றின் மீது சிவப்பு, பச்சை வண்ணங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சி அந்தப் படுதாவை லேசாக ஆட்டும்போது அலை அலையாக வண்ணக் கலவையில் தோன்றும் கனவுக் காட்சி கைதட்டல் பெறும்.
அந்தச் சமயத்தில் ‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் ஆனார். படத்துக்கு திரைக்கதை வசனம் எழுத கருணாநிதியை ஏற்பாடு செய்தார். படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். நாடக மன்ற நிர்வாகியாக இருந்த வீரப்பன், அவரது படங்கள் தொடர்பான வேலைகளையும் கவனித்துக் கொண்டார்.
குலேபகாவலி, மதுரைவீரன் போன்ற வெற்றிப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். திரையுலகில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக்க முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் பங்குதாரர்கள். பின்னர், சிறிது காலம் கழித்து அந்நிறுவனம் ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமாக மாற்றப்பட்டது. அதில் ஆர்.எம்.வீரப்பனையும் பங்குதாரராக சேர்த்ததுடன் அவரை நிர்வாக இயக்குநராகவும் நியமித்தார் எம்.ஜி.ஆர்.!
‘நாடோடி மன்னன்’ படம் வளர்ந்தது. படத்துக்கான தயாரிப்பு செலவுகள் எகிறிக் கொண்டே இருந்தன. செலவு களை சமாளிக்க ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கடன் கேட்க முடிவு செய் தார் வீரப்பன். அப்போது, ஏவி.எம். நிறுவனத்தின் ஆடிட்டர் சீனிவாசன், ‘‘கடன் தருவோம். ஆனால், எம்.ஜி.ஆர். கையெழுத்து போட வேண்டும்’’ என்று கூறிவிட்டார். கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடக் கூடாது, ஏதும் சிக்கல்கள் வந்தால் அவர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வீரப்பன்.
கடன் பெறுவதற்காக, படத்தின் இலங்கை ஏரியா விநியோக ஒப்பந்தத்தை ஈடாக காண்பித்திருந்தனர். அதில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டிருந்தார். ‘‘விநியோக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும்போது கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடவேண்டும்’’ என்று ஆடிட்டரும் பிடிவாதமாக இருந்தார். நாட்கள் ஓடின. பணம் இல்லையென்றால் படப்பிடிப்பு நடத்த ஃபிலிம் வாங்க முடியாத நிலை.
திடீரென யோசனை தோன்ற மீண்டும் சீனிவாசனிடம் சென்றார் வீரப்பன். ‘‘இலங்கை விநியோக ஒப்பந்தம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் போடப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பிறகு ‘எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று ஆனபிறகு, அதன் நிர்வாக இயக்குநர் நான்தான். என் பெயரில்தான் கடிதத் தொடர்புகள் நடக்கிறது. எனவே கடன் பத்திரத்தில் நான் கையெழுத்திட்டால் போதும்.’’ என்று கூறி ஆதாரங்களை காட்டினார் வீரப்பன்.
சட்டபூர்வமாக அவரது வாதத்தை மறுக்க முடியாத நிலையில், கடன் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரை கையெழுத்து போடவிடாமல் கடன் பெற்றுவிட்டார் வீரப்பன்.
‘எம்.ஜி.ஆர். படங்கள் நகரங்களில் ஓடாது. கிராமங்களில்தான் ஓடும்’ என்ற தவறான கருத்து இருந்தது. இதை மாற்ற வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1961-ல் எம்.ஜி.ஆர் நடித்த ‘திருடாதே’ படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அந்நிறுவனம் பெற்றது. அப்போதெல்லாம், சென்னையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கு முதல்தர திரையரங்குகள் கிடைக்காது.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகியாக இருந்த வீரப்பன் துணிந்து முடிவு எடுத்தார். அண்ணா சாலையில் பழைய படங்களை வெளியிட்டு வந்த பிளாசா, மற்றும் பாரத், மகாலட்சுமி ஆகிய பழைய திரையரங்குகளில் ‘திருடாதே’ படம் திரையிடப்பட்டது. புதிய விளம்பர உத்திகளையும் வீரப்பன் வகுத்தார். மூன்று தியேட்டர்களிலும் படம் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி பெற்றது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களை திரையிடுவதில் சென்னையின் முக்கிய தியேட்டர் அதிபர்கள் ஆர்வம் காட்டினர். ‘திருடாதே’ படம் பட்டி தொட்டிகளிலும் ஓடி வசூலை வாரிக்குவித்தது. ராஜா ராணிக் கதைகளுக்குத்தான் எம்.ஜி.ஆர். பொருத்தமானவர் என்ற கருத்தையும் ‘திருடாதே’ தகர்த்தது.
எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த முதல் வெற்றிப்படம் ‘தெய்வத்தாய்.’ அதிலிருந்து ‘இதயக்கனி’ வரை சத்யா மூவீஸின் 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
எம்.ஜி.ஆரிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வீரப்பன், அவருக்கே சம்பளம் கொடுப்பவராக மாறினார். சமயங்களில் வீரப்பனை எம்.ஜி.ஆர். ‘‘என்ன முதலாளி?’’ என்று ஜாலியாக அழைப்பது வழக்கம்.
முதல்வராகி தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட பிறகும், கடைசி வரை தனது ‘கணக்குப் பிள்ளை’யான ஆர்.எம். வீரப்பனுக்கு மாத சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பதை எம்.ஜி.ஆர். நிறுத்தவேயில்லை.
- தொடரும்...
‘இதயக்கனி’ படத்துக்கு மற்ற எம்.ஜி.ஆர். படங்களுக்கு இல்லாத சிறப்பு உண்டு. ரஷ்யாவில் நடைபெற்ற தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ‘இதயக்கனி’ தேர்வு செய்யப்பட்டது. வெளிநாட்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்.படம் என்ற பெருமையைப் பெற்றது ‘இதயக்கனி’.
படங்கள் உதவி: ஞானம்
No comments:
Post a Comment