Wednesday, March 23, 2016

மதிப்பெண் மனஅழுத்தம்!

மதிப்பெண் மனஅழுத்தம்!
By ஆசிரியர்
First Published : 18 March 2016 12:40 AM IST
மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பிளஸ்2 கணிதத் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்; பெற்றோர்கள் மனக்கொதிப்பில் இருக்கிறார்கள்; புகார்கள் குவிந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும்போது, அதிக கரிசனம் காட்டப்படும் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்திருப்பது ஓரளவு ஆறுதல் தந்தாலும், இந்த வினாத் தாள் மூலம் மாணவர்கள் அடைந்திருக்கும் மனஅழுத்தம் நீங்கியபாடில்லை.

மாணவர்களின் கண்ணீர் போதாதென்று, அரசியல்வாதிகளும் சேர்ந்து கொண்டுவிட்டனர். இந்த கணிதத் தேர்வு வினாத்தாள் பாட்னாவில் முன்னதாகவே வெளியாகிவிட்டதாகவும், கட்செவிஅஞ்சலில் (வாட்ஸ்ஆப்) அனைவருக்கும் கிடைத்ததாகவும், தென்னிந்திய மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள் என்பதாகவும் மக்களவையில் உறுப்பினர்கள் ஆவேசமாகப் பேசியுள்ளனர். மத்திய அரசும் இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

இருப்பினும், சி.பி.எஸ்.இ. கல்வி நிர்வாகம் இதை மறுத்துள்ளது. கட்செவிஅஞ்சலில் வெளியானதாகக் கூறப்படும் வினாத்தாளில் இடம்பெற்றிருந்த இரண்டு கேள்விகள் மட்டுமே, மார்ச் 14-ஆம் தேதி தேர்வுக்கான கேள்வித்தாளுடன் ஒத்திருப்பதாகவும், இது தற்செயலானது என்பதோடு, இந்தக் கேள்விகள் பிளஸ்2 மாணவர்களின் கணிதப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பவை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற பொறியியல் கல்லூரிகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சேர்வதற்கு கணித மதிப்பெண் ஒரு தடையாக இருக்கப்போவதில்லை. ஏனெனில், இந்த மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெறுவதன் மூலம் அங்கே இடம் பெற்றுவிட முடியும்.

ஆனால், சி.பி.எஸ்.இ. பயிலும் எல்லா மாணவர்களுக்கும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.களில் இடம் கிடைத்துவிடுவதில்லை. சி.பி.எஸ்.இ. மாணவர்களில் பலரும், குறிப்பாக தமிழகத்திலேயே உயர்கல்வியைத் தொடர்கின்றனர். "கட்-ஆஃப்' மதிப்பெண் அடைவதில் கணித மதிப்பெண் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கணித மதிப்பெண் குறையக் குறைய அவர்கள் "கட்-ஆஃப்' மதிப்பெண்ணில் பின்தங்கி, கலந்தாய்வில் கடைசியாக இடம்பெறுவர். ஆகவேதான், பொறியியல் படிப்பு வாய்ப்பு அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. மாணவர்களும் பெற்றோரும் கவலைப்படுகின்றனர்.

இதுபோல ஒரு கடினமான வினாத்தாள் தமிழகக் கல்வித் துறை நடத்தும் பிளஸ்2 தேர்வில் இடம்பெற்றிருந்தால் என்னவாகியிருக்கும்? பெற்றோரும் மாணவர்களும் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தியிருப்பார்கள்; அரசியல் கட்சிகளும் சேர்ந்து கொண்டிருக்கும்; மறுதேர்வு நடத்தும்படி செய்திருப்பார்கள். ஆனால், சி.பி.எஸ்.இ. மீண்டும் இத்தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பது சந்தேகமே.

கணிதத் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தம், அடுத்துவரும் தேர்வுகளை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள மனத்தடைகள் என யாவற்றையும் பார்க்கும்போது, தற்போதைய கல்வி முறை கேள்விக்குரியதாகிறது. இரண்டு ஆண்டுகள் கல்வி பயிலும் ஒரு மாணவரின் வெற்றித் தோல்வியை ஒரேயொரு பாடத்தின் வினாத்தாள் மூலம் தீர்மானிப்பது சரியான முறையல்ல.

வளரிளம் பருவத்தை எட்டும் மாணவர்களின் ஆர்வம், உள்ளார்ந்த இலக்கு, விருப்பம் எல்லாமும் மாறுகிறது. சில மாணவர்கள் கணிதத்தில் புலிகளாக மாறுகிறார்கள். சிலர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் புலமைப் பெறுகிறார்கள். இவர்களுக்கு ஏதாவது ஒரு பாடம் ஈர்ப்பில்லாமல் போய்விடுகிறது. அந்த ஒரு பாடத்தில் மட்டும் அவர்கள் சரியாக தேர்ச்சி பெறுவதில்லை. ஒரு பாடத்தில் ஒரு மாணவரால் சிறப்பாக எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை என்றால், அவர் தோல்வியுற்றவராகக் கருதுவதை இன்னமும் எத்தனைக் காலத்துக்குத் தொடரப் போகிறோம்? மேலைநாடுகளில் மாணவர்கள் அவரவருக்கு விருப்பான பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தைப் பொருத்தவரை, கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருப்பது கணிதமும் ஆங்கிலமும்தான். தற்போதைய கல்விமுறைப்படி 10-ஆம் வகுப்பு வரை கணிதம், ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும். மேனிலைப் பள்ளியில்தான் ஒரு மாணவர் கணிதம், அறிவியல் அல்லாத பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும் வசதி உள்ளது. அங்கும்கூட, ஆங்கிலத்திலிருந்து தப்பித்தல் சாத்தியமில்லை. இத்தகைய கல்விமுறை மாணவர்களை வடிகட்ட உதவுமே தவிர, மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் ஊக்குவிப்பதாக அமையாது.

எட்டாம் வகுப்புவரை மாணவர்கள் கல்வியை எளிமையாகவும், விளையாட்டாகவும், மதிப்பெண்கள் குறித்த கவலையில்லாமலும் பயின்று முடிக்க வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளை அவர்களே தேர்வு செய்துகொள்ள வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் விரும்பித் தேர்வு செய்யும் பாடங்களில் ஒவ்வோர் ஆண்டும் நுட்பமான, கடினமானப் பகுதிகளைப் புகுத்திக்கொண்டே போகும்போது, விருப்பமான பாடம் என்பதால் அவர்களும் அதை எளிமையாகக் கடந்து வருவார்கள்.

எல்லாரும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும்தான். ஆனால், சிறந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. பள்ளியில் படித்தவற்றை ஒருவர் மறந்த பின்னர் மிச்சமாக இருப்பதுதான் கல்வி (Education is what remains after one has forgotten what one has learned in school)  - என்கிறார் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நம் பள்ளிக் கல்வியின் மிச்சம் எது? மதிப்பெண் மட்டும்தானா?

நமது கல்வி முறையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மதிப்பெண் மாயையிலிருந்தும் மனஅழுத்தத்திலிருந்தும் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...