Thursday, March 24, 2016

டி.எம்.சவுந்தரராஜன் 10 ராஜலட்சுமி சிவலிங்கம்



பிரபல பின்னணி பாடகர்

‘டிஎம்எஸ்’ என்று அன்போடு அழைக்கப்படும், தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் (T.M.Soundararajan) பிறந்த தினம் இன்று (மார்ச் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# மதுரையில் சவுராஷ்டிரக் குடும்பத்தில் (1923) பிறந்தார். தந்தை தொகுளுவ மீனாட்சி ஐயங்கார், கோயில் அர்ச்சகர். ‘தொகுளுவ’ என்பது குடும்பப் பெயர். பஜனைப் பாடல் பாடுவதில் வல்லவர். இவரும் இயல்பாகவே பாடுவதில் நாட்டம் கொண்டிருந்தார்.

# பள்ளி இறுதிப் படிப்பு வரை பயின்றார். காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று, கச்சேரிகள் செய்தார். எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களை மேடைகளில் அவரைப் போலவே பாடினார்.

# பிரபல இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்னி தனது ‘கிருஷ்ண விஜயம்’ (1950) திரைப்படத்தில் ‘ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி’ பாடலைப் பாட வாய்ப்பு அளித்தார். தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தன. ‘தூக்குத் தூக்கி’ (1954) திரைப்படப் பாடல்கள் இவரைப் புகழேணியில் ஏற்றிவிட்டன.

# 1960, 70-களில் இவர் பாடாத படங்களே இல்லை எனலாம். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட அனைவருக்கும் பாடி 5 தலைமுறை பின்னணிப் பாடகர் என்ற பெருமை பெற்றார். அந்தந்த நடிகருக்கேற்ப குரலை மாற்றிப் பாடும் ஆற்றல் பெற்றவர்.

# இந்தி இசையமைப்பாளர் நவ்ஷாத் இவரை பலமுறை அழைத்தும் ‘எனக்கு தமிழ் போதும்’ என்று மறுத்துள்ளார். இது இந்தி சினிமாவின் நஷ்டம் என்றாராம் நவ்ஷாத். இவரது ‘ஓராயிரம் பாடலிலே’ பாடலைக் கேட்டு உருகிய இந்தி பாடகர் முகம்மது ரஃபி, இவரது தொண்டையை வருடி ‘இங்கிருந்துதானா அந்த குரல் வருகிறது?’ என கேட்டாராம்.

# 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி, மெல்லிசைப் பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார். இவரது முருக பக்திப் பாடல்கள் மிகவும் பிரசித்தம்.

# தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். பல நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார். பட்டினத்தார், அருணகிரிநாதர், அகத்தியர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

# பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்ம உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். அருமையாக ஹார்மோனியம் வாசிப்பார். 2002-ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

# காஞ்சி மஹா பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர். இவரை ‘கற்பகவல்லி’ பாடலை பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்த காஞ்சிப் பெரியவர், தான் போர்த்தியிருந்த சால்வையை பரிசாக அளித்தார். பாடலின் பொருள் உணர்ந்து பாட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். திருப்புகழ் பாடும் வாய்ப்பு வந்தபோது, வாரியாரிடம் சென்று அதன் பொருளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகே பாடினார்.

# தன் பாடல்கள் மூலம் இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் டிஎம்எஸ் 91-வது வயதில் (2013) மறைந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024