Friday, March 25, 2016

சேமிப்பவர்கள் ஏமாளிகளா?

சேமிப்பவர்கள் ஏமாளிகளா?

DINAMANI

By எஸ். ஸ்ரீதுரை


First Published : 24 March 2016 01:29 AM IST
இந்தியா ஓர் ஆன்மிக தேசம்தான், சந்தேகமில்லை. நேற்று இருப்பவர்கள் இன்று இல்லை, இன்று இருப்பவர்கள் நாளை இருக்கப் போவதுமில்லை என்ற வேதாந்தக் கருத்துகள் மக்களுக்குத் தெரிந்ததுதான்.
அதற்காக, யாரும் எதிர்காலத்துக்கென்று நாலு காசு சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது என்றோ, எல்லாவற்றையும் தெய்வம் பார்த்துக் கொள்ளும் என்று மூலையில் சும்மா உட்கார்ந்து கொள்ளவேண்டும் என்றோ கூறிவிட முடியுமா..?
அப்படித்தான் சொல்கிறது நமது மத்திய அரசின் நிதி அமைச்சகம். சிறு சேமிப்பு, ஆயுள் காப்பீடு என்றெல்லாம் காலம் காலமாக நமது தேசத்தின் கோடிக்கணக்கான மக்களையும், சேமியுங்கள், சேமியுங்கள் என்று சொல்லிவிட்டு, இன்று அரசு நிதி நிறுவனங்களில் சேமிப்பவர்களை "அட அப்பாவிகளே! இன்னுமா எங்களை நம்பி சேமித்துக் கொண்டிருக்கிறீர்கள்'? என்று எள்ளி நகையாடிக்கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கிரோம்.
30 ஆண்டுகளுக்கு முன்பு, தபால் துறையின் கிஸான் பத்திரத்தில் ஒருவர் சேமிக்கும் தொகை ஐந்தரை வருடங்களில் இரட்டிப்பாகும். இந்திர விகாஸ் பத்திர சேமிப்பு ஐந்தே வருடங்களில் இரட்டிப்பாகும். அரசுத்துறை ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பிராவிடண்ட் ஃபண்டு தொகைக்கு 11% வட்டி உண்டு. ஒரு நிதியாண்டு முழுவதும் அதிலிருந்து பணம் எடுக்காத பட்சத்தில் போனஸ் வட்டியும் உண்டு.
அரசுத் துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நிலை வைப்புக்கான குறைந்த கால முதலீட்டுக்கே 12.5%, நீண்ட கால நிலை வைப்புகளுக்கு 15% வரையிலும் வட்டி கொடுக்கப்பட்டது. தபால் துறை மற்றும் பொதுத் துறை வங்கிகளில் துவங்கப்படும் தொடர்வைப்புகளுக்கும் 12% வட்டி இருந்தது.
ஏழை எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஓய்வூதியம் பெறுபவர், சிக்கனம் பேணும் இல்லத்தரசிகள் ஆகிய எல்லோருடைய சேமிப்புகளுக்கும் பாதுகாப்பானதாகவும், நியாயமான லாபம் தேடித் தருவதாகவும் விளங்கிவந்த இத்தகைய சிறு சேமிப்புகளுக்கும் அடுத்தடுத்து வந்த அரசுகளால் அதிர்ச்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை வாழ்விப்பதற்காகவே அவதரிக்கின்ற ஒவ்வொரு நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கி ஆளுநர்களும் தங்களது மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசனைகள் பல செய்து ஒரு முடிவுக்கு வந்து, இந்தியத் திருநாட்டின் சிறு சேமிப்பாளர்களை ஓட ஓட விரட்டிவிட்டு, அதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த உத்தேசித்திருப்பதாகத் தோன்றுகின்றது.
இல்லாவிட்டால், ஒரு காலத்தில் சாதாரண சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்பட்ட 7% வட்டியை நீண்டகால டெபாசிட்டுகளுக்கு வழங்கும் வினோதம் எங்காவது நடைபெறுமா?
அப்படி அற்ப சொற்பமாக வழங்கப்படும் வட்டியிலும் TDS என்ற வகையில் ஒரு பிடித்தம் செய்து அதை வருமான வரித்துறை எடுத்துக் கொள்ளுமா? அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டத்திற்கான போனஸும் 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு அதுவும் இல்லாமல் ஆக்கப்படுமா? மூத்த குடிமக்கள் நிலை வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் இப்படிக் கண்மூடித்தனமாகக் குறைக்கப்படுமா?
1990களில் ஆங்காங்கே நகைக் கடைகள், மகிழுந்து விற்பனைக் கூடங்கள், தேக்குப் பண்ணை வியாபாரிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் முளைத்து 18%, 24% வட்டி என்றெல்லாம் ஆசை காட்டியதில் மக்கள் பலரும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து முதலுக்கே மோசமாகிப் போனது நினைவிருக்கலாம்.
அந்தச் சுனாமிகளிலிருந்தெல்லாம் தப்பித்த மக்கள்தான் இப்போது, சேமித்த சொற்பப் பணத்தைக் காப்பாற்றிகொண்டால் போதும் என்றும், அதையும் தபால் துறை, பொதுத் துறை வங்கிகள் போன்றவற்றில் முதலீடு செய்தால் குறைந்த வட்டியானாலும், போட்டு வைத்த பணம் பத்திரமாயிருக்கும் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்களைச் சீரமைக்கிறோம் என்ற பெயரில், குறைத்துக் கொண்டே போனால், அப்புறம் யாருக்குத்தான் சேமிப்பில் ஊக்கமும் உற்சாகமும் இருக்கும்..?
விலைவாசி உயர்வு, விழித்தது முதல் உறங்குவது வரை கடன், கடன் அட்டை, மாதத் தவணை விற்பனையில் மகிழுந்து முதல் சகலமும் விற்பனை, கெளரவத்திற்காக வரவுக்கு மீறிய செலவு... என்று எல்லாவற்றையும் கடந்து கொஞ்சமாவது சேமிக்க வேண்டும். அதையும் அரசுத் துறை நிதிகளில் சேமிக்கவேண்டும் என்று முனைகின்ற நடுத்தர மக்களை வட்டிக் குறைப்பு, வட்டிக்கு வரி என்றெல்லாம் அரசே மிரட்டுவது நியாயம்தானா..?
ஒருபுறம் சேமிக்கும் மக்களை வெறுப்பேற்றுவது, கல்லூரிப் படிப்பிற்கும், விவசாயத்திற்கும், வீடு கட்டுவதற்கும் வங்கிக் கடன் வாங்கும் மக்களை அலைக்கழித்து அவமானப்படுத்துவதும், மறுபுறம் எல்லையில்லாத கடன்களை மல்லையாக்களுக்குக் கொடுத்துவிட்டு விழிப்பதுதான் சிறந்த நிர்வாகம் என்பதன் அளவு கோலா என்பதை நம்மை ஆள்பவர்களும், அதிகாரிகளும் யோசிக்க வேண்டும்.
மொத்தத்தில் சொல்வதென்றால், அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்களில் இனி முதலீடு செய்வதும் ஒருவகை முட்டாள் தனமோ, ஏமாளித்தனமோ என்ற எண்ணம் நமது மக்களின் மனத்தில் தோன்றுவதற்கு முன்பு உரியவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும்தான்... ஆனால், அதற்கு ஏழை, எளிய சேமிப்பாளர்களின் வயிற்றில் அடிப்பதைத் தவிர வேறு சிறந்த வழிமுறைகள் உண்டு. நம்மை வழி நடத்தும் பொருளாதார அறிஞர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும், நெஞ்சில் ஈரத்தோடு...

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024