Friday, March 25, 2016

விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து காலதாமதமாக மேல்முறையீடு செய்த மனைவியின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து காலதாமதமாக மேல்முறையீடு செய்த மனைவியின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


DAILY THANTHI


சென்னை,


கணவன் மறுதிருமணம் செய்த பின்னர், கீழ் கோர்ட்டு பிறப்பித்த விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து காலதாமதமாக மேல்முறையீடு செய்த மனைவியின் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.


விவாகரத்து
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமிக்கும், சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த ராமலிங்கத்துக்கும் (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2007–ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இதற்கிடையில் கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தாம்பரம் கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ராமலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு மகாலட்சுமி ஆஜராகாததால், கடந்த 2010–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராமலிங்கத்துக்கு ஒரு தலைபட்சமாக விவாகரத்து வழங்கி தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


மேல்முறையீடு
இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி அதே ஆண்டு ஏப்ரல் மாதம் தாம்பரம் கோர்ட்டில் மகாலட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அதே ஆண்டு ஏப்ரல் மாதம் ராமலிங்கம் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில், தாம்பரம் கோர்ட்டு தன்னுடைய மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் மகாலட்சுமி மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:


திருமணம் செல்லுமா?
விவாகரத்து தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து, அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் காலம் முடிந்த பின்னர், கணவர் மறுதிருமணம் செய்து கொண்டார். ஆனால், மேல் முறையீடு செய்யும் கால அவகாசம் முடிந்த பின்னர், கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து முதல் மனைவி மேல்முறையீடு செய்தால், அந்த கணவர் செய்த இரண்டாவது திருமணம் செல்லுமா? என்ற கேள்வி இந்த வழக்கில் எழுந்துள்ளது.


பொதுவாக விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து சில நாட்கள் காலதாமதம் செய்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார், அந்த மனுவை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும்.


ஆஜராகவில்லை
ஏன் என்றால், இதுபோன்ற வழக்கில் கணவன்மனைவிக்கு இடையே உள்ள பிரச்சினைகளை தாண்டி, அவர்களது குழந்தைகளின் நலனும் கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. இந்த வழக்கில் தாம்பரம் கோர்ட்டு கணவருக்கு ஒரு தலைபட்சமான விவாகரத்து வழங்கிய பின்னர், அதை ரத்து செய்ய வேண்டும் என்று 24 நாட்கள் காலதாமதமாக மகாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அவர் நேரில் ஆஜராகவில்லை. வழக்குக்குரிய கட்டணத்தையும் அவர் செலுத்தவில்லை. எனவே, அவரது மனுவை தாம்பரம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. அந்த தள்ளுபடி உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யும் காலம் முடிந்த பின்னர், ராமலிங்கம் மறுதிருமணம் செய்து கொண்டார். இப்போது தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மகாலட்சுமி மனு செய்துள்ளார்.


உரிமை இல்லை
உரிய காலத்தில் விரைவாக செயல்படாமல், அலட்சியமாக இருந்து விட்டு, காலம் கடந்த பின்னர் அவர் இந்த கோர்ட்டை நாடியுள்ளார். இப்போது ராமலிங்கம் திருமணம் செய்து விட்டதால், அந்த பெண்ணின் வாழ்க்கையையும் கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. ஆனால், ராமலிங்கம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மேல்முறையீடு காலம் முடிந்த பின்னர்தான் தன் கட்சிக்காரர் திருமணம் செய்துள்ளார். அவ்வாறு திருமணம் செய்த பின்னர், இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ய மகாலட்சுமிக்கு உரிமையே கிடையாது’ என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளை தாக்கல் செய்துள்ளார்.


தள்ளுபடி
தற்போது இவர்கள் இருவருக்கும் பிறந்த மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. ஆனால், அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சத்தை ராமலிங்கம் வழங்கி வருவதாக அவரது வக்கீல் கூறினார். எனவே, மனுதாரரின் காலதாமதமான மனுவை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்.


இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024