Wednesday, March 23, 2016

சொல் வேந்தர் சுகி சிவம்

சொல் வேந்தர்
சுகி சிவம்

நம்பர் ஒன்னா? நம்பர் டூவா?

உலகத்திலேயே மிகமிக அதிர்ஷ்டசாலி யார்? எல்லா வசதி வாய்ப்புகளும் பெற்று எந்தவிதக் கவலையும் சிக்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழக் கூடிய வாய்ப்பு ஒருவருக்கு உண்டா? உண்டு என்றால் அவர் யார்?

இந்தக் கேள்விக்குப் பதில் என்ன தெரியுமா? அமெரிக்காவின் துணை ஜனாதிபதி. அவர்தான் சகல வசதி வாய்ப்புகளுடன் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழும் வாய்ப்பு உடையவர். அவரைப் பற்றி பிரசித்தி பெற்ற ஜோக் ஒன்று உண்டு.

காலைத் தூக்கம் கலைந்ததும் படுக்கையில் இருந்து எழாமலேயே, "ஜனாதிபதி நன்றாக இருக்கிறாரா?' என்று கேட்டு, "ஆம்' என்று பதில் வந்தால், மறுபடியும் போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்கப் போய்விடலாம். அவருக்கு என்று அமெரிக்காவில் எந்தப் பொறுப்பும் எந்த வேலையும் கிடையாது. ஆனால் ஜனாதிபதிக்கு நிகரான வாழ்க்கை வசதிகள் உண்டு.

ஜனாதிபதி இறந்தால் மட்டுமே அவரது இயக்கம் ஆரம்பம் ஆகும்! சகல வசதி வாய்ப்புடன் எந்தவித வேலைப் பளுவும் இல்லாத இந்த உதவி - துணை என்கிற பதவிகளைச் சிலர் விரும்புவார்கள். காரணம், முதலாவதாக இருப்பதில் பெருமை இருக்கிற அளவு பொறுப்பும் பாரமும் துன்பமும் விமர்சனமும் உண்டு. ஆனால் நம்பர் 2 ஆக இருப்பதில் சுகமும் போகமும் மட்டுமே உண்டு.

ஆனால் இந்த நம்பர் 2-ல் திருப்தி அடைவது வாழ்க்கையே அல்ல. போராட்டங்கள் நிறைந்த நம்பர் ஒன்னாக இருக்கவே ஆசைப்படுங்கள்.

ஆனந்த் தியேட்டர் அதிபர் அமரர் உமாபதி அவர்களைப் பற்றிய சுவையான செய்தி ஒன்று உண்டு.

எந்த விழாவுக்குப் போனாலும் முதல் வரிசையில் இடம் இருந்தால்தான் அமருவார். இரண்டாவது வரிசையில் இருக்க அவருக்குப் பிடிக்காது என்று சிலம்பொலி செல்லப்பன் ஒருமுறை சொன்னார்கள். எனக்கும் இந்த இயல்பு உண்டு.

எல்லோருக்கும் முதல் வரிசையில் இடம் கிடைக்குமா? எல்லோரும் நம்பர் ஒன் ஆக முடியுமா என்று தத்துவ வினாக்கள் எழுப்ப வேண்டாம்! அந்த விவாத நேரத்தைக்கூட வீணாக்காமல் நம்பர் ஒன் ஆவதற்கு முயலுங்கள்.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் சீனியாரிட்டிபடிப் பார்த்தால் கலைஞர் தி.மு.க.வின் தலைவராகவும் முதல்வராகவும் ஆகியிருக்க முடியாது. அமரர் எம்.ஜி.ஆர். கூடக் கலைஞரை முதல் இடத்தில் ஒப்புக்கொண்டார்.

அமரர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் இன்றைய தமிழக முதல்வரும் சீனியாரிட்டிகளைப் புறக்கணித்து நம்பர் ஒன் என்று தன்னை நிரூபித்தார். அவர் நம்பர் 2 ஆக இருக்க விரும்பியதே இல்லை!

நம்பர் டூ பாதுகாப்பானது... ஆனால் விரும்பத்தக்கது அல்ல.

ஆபத்துகளை, விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனிதர்களே எப்போதும் நம்பர் ஒன் என்ற முதலிடம் பெறுகிறார்கள்.

கஷ்ட காலத்தில் ஒரு குழுவைக் கட்டுக்குலையாமல் கொண்டு செலுத்தும் துணிவுடையவர்கள் பிறவித் தலைவர்கள். அவர்களிடம் இருந்து அந்தப் பண்பை நாம் படித்தாக வேண்டும்.

சைவ சமயத்தில் இறைவனைக் குறித்துப் பாடிய நாயன்மார்கள் பாடலை நம்பியாண்டார் நம்பி என்பவர் வரிசைப்படுத்தி முறைப்படுத்தினார். காலத்தால் பிந்திய- வயதில் சின்னவரான ஞானசம்பந்தர் பாடல்களைத்தான் முதல் திருமுறை என்று அறிவித்தார். சைவ சமயத் தலைவர்களை வரிசைப்படுத்தும்போது முதலில் ஞானசம்பந்தர் என்றே வரிசைப்படுத்துவார்கள்.

ஏன்?

சைவ சமயத்துக்குப் பிற சமயங்களால் துன்பம் நேர்ந்தபோது அஞ்சாமல் தலைமை ஏற்று நின்ற தமிழ் முதல்வர் சம்பந்தர். அது மட்டுமா? பாண்டிய நாட்டில் திருநீறு வைத்தாலே தீட்டு என்று அரசருக்கு அஞ்சி மக்கள் திருநீறு வைக்காதபோது நெற்றி நிறைய நீறு பூசி, திருநீற்றுப் பதிகம் பாடி, மன்னருக்கே திருநீறு கொடுத்த தமிழ்த் தலைவன் ஞானசம்பந்தன்.

எனவே நம்பர் ஒன் என்பது அவரைத் தேடி வந்தது. அவரைக் கொல்லப் பல முயற்சிகள் நடந்தன. பல ஆபத்துகளை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது என்றாலும் அவர் எதிர்கொண்டார்.

நம்பர் 2-ல் செüகரியங்கள் அதிகம். நம்பர் ஒன்னில் சங்கடங்கள் அதிகம். என்றாலும் நம்பர் 1 தான் உங்கள் லட்சியமாக இருக்க வேண்டும்.

நம்பர் ஒன் ஆக வேண்டும் என்றால் தகுதி, உழைப்பு, தியாகம், தலைமைப் பண்புடன் ஆக வேண்டுமே ஒழிய தவறான பாதைக்குத் தாவக் கூடாது.

ஒரு சில சைவ மடங்களில்கூட அசைவ வேலைகள் செய்து தலைமையைப் பெற ஆசைப்படுகிறார்கள். அதுவல்ல சரியான வழி...


ஞானசம்பந்தர் மாதிரி அஞ்சாமை, பொறுப்புணர்வு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் நம்பர் ஒன் ஆக வேண்டும்.

மகாபாரதத்தில் வியாசர் ஓர் அருமையான விளக்கம் சொல்லுகிறார்...

""எவன் பெரியவன் என்ற கேள்விக்கு அவர் சொல்லும் பதில் ஆச்சரியமானது. நான்கு வர்ணங்களில், அந்தணரில் அறிவு அதிகம் உடையவனே பெரியவன். அரசரில் பலம் அதிகம் உடையவனே பெரியவன். வணிகரில் பணம் அதிகம் வைத்திருப்பவனே பெரியவன். நாலாம் வர்ணத்தில் மட்டுமே வயது மூத்தவன் பெரியவன்.

காலம் மாறிவிட்டது. வர்ணாச்ரமம் வடிவம் மாறிவிட்டது... என்றாலும் வியாசரின் அணுகுமுறை ஆழ்ந்த அறிவு, மாற முடியாது.

உங்கள் ஆசிரியரைவிட நீங்கள் அதிகம் படித்தால் நீங்கள் நம்பர் ஒன். உங்கள் மேல் அதிகாரியைவிட உங்கள் பலம் பெருகிவிட்டால் நீங்கள் நம்பர் ஒன். உங்களைச் சுற்றி இருப்பவரைவிட உங்கள் பண பலம் பெருகிவிட்டால் நீங்கள் நம்பர் ஒன்.

வயது மூத்தவர்களை மரியாதையுடன் நடத்தினால் அப்போதும் நீங்கள் நம்பர் ஒன்.

சௌரியம் கருதி நம்பர் டூ ஆகவேண்டாம். சங்கடம் என்றாலும் நம்பர் ஒன்தான் நமது லட்சியம்.

இந்த லட்சியம் இருந்தால் வெற்றி நிச்சயம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024