Tuesday, November 29, 2016

வாடிக்கையாளர் பொய் புகார்: டாக்ஸி டிரைவரை போலீசிடம் இருந்து காப்பாற்றிய பெண்!


டாக்ஸிஸி

vikatan.com

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஹிமானி. அண்மையில் உபேர் டாக்ஸி ஒன்றில் ஹிமானி பயணித்த போது, வித்தியாசமான அனுபவத்தைச் சந்திக்க நேர்ந்தது. தனது அனுபவத்தை ஃபேஸ்புக்கில் ஹிமானி பதிவிட்டிருந்தார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 6,500 முறை ஹிமானியின் பதிவு ஷேர் செய்யப்பட்டுள்ளது. 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்திருந்தனர். ஏராளமானோர் ஹிமானியின் செயலை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்த பதிவின் சுருக்கம் இங்கே...

சமீபத்தில் அலுலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக ஒரு உபேர் டாக்ஸியை புக் செய்தேன். டிரைவர் மிகவும் பணிவாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டார். அது ஒரு ஷேர் டாக்ஸி. என்னுடன் 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரும் பயணித்தார். காருக்குள் ஏறியதுமே, அந்த பெண் டிரைவிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். டிராப் செய்வது குறித்து டிரைவரிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். டிரைவர் பணிவாக பதில் அளித்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை. 'ஆப்பில் குறிப்பிட்டுள்ளபடி உங்களை டிராப் செய்துவிடுகிறேன் ' என டிரைவர் கூனார். ஆனால், அந்த பெண்ணின் கோபம் அடங்கவில்லை.

அவரது கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. மூன்றாம் தர வார்த்தைகளை உபயோகித்து டிரைவரைத் திட்டடியதோடு, 'அடித்து துவைத்து விடுவேன்' எனக் கொந்தளித்தார். டிரைவரின் நிலையோ பரிதாபமாக இருந்தது. அவர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அநத பெண் சமாதானமாகவில்லை. நானும் சமாதானப்படுத்திப் பார்த்தேன். 'இருவருக்கும் மிஸ் கம்யூனிகேசனால்தான் பிரச்னை. போதும் விடுங்கள்' என்றேன். அவர் காதில் ஏற்றிக் கொள்ளவேயில்லை. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்த பெண், 'போலீஸ் நிலையத்துக்கு வண்டியை விடு, போலீசில் புகார் அளிக்க வேண்டும்' என்றார். மேலும் என்னிடமும்' நீங்களும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்' என்றார் .நான் உடனடியாக மறுத்தேன். தொடர்ந்து என்னையும் திட்டத் தொடங்கினார்.

டிரைவர் பரிதாபமாக என்னை நோக்கினார். பின்னர், 'என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் வேறு ஓரு காரை பிடித்து வீட்டுக்குச் செல்லுங்கள்' என்று என்னிடம் கூறினார். இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதத்தைப் பார்த்து 20க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடினர். இந்த சமூகம் பெண்ணுக்கு ஆதரவாகத்தானே பேசும். அந்த பெண்ணுக்கு ஆதரவாக டிரைவரை அனைவரும் திட்டினர். இதற்கிடையே இருவருமே அவசர போலீசை கூப்பிட, அந்த இடத்துக்கு இரு பெண் போலீசும் வந்தனர். பெண் போலீசாரிடம், டிரைவரின் நிலையை நான் விளக்கினேன் டிரைவர் பக்கம் தவறு இல்லை எனக் கூறினேன். 'போலீஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், என்னைக் கூப்பிடுங்கள் நான் டிரைவருக்கு ஆதரவாக வருவேன்' என அவர்களிடம் தெரிவித்தேன். அத்துடன் எனது செல்போன் எண்ணையும் கொடுத்தேன்.

மேலும் டிரைவருக்கு ஆதரவாக வாக்குமூலம் தரவும் நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். அப்போது, என்னிடம் வந்த பெண் போலீஸ், ''மேடம் நீங்களும் தயவு செய்து போலீஸ் நிலையம் வாருங்கள் அதுதான் நல்லது ''என எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்பு வரை நான் போலீஸ் நிலையம் சென்றது இல்லை. அப்போதே இரவு மணி 9 மணியாகி விட்டது. ஆனாலும், டாக்ஸி டிரைவரை அப்படியே விட்டு விட்டு போக என் மனம் இடம் கொடுக்கவில்லை. நானும் போலீஸ் நிலையத்துக்கு அவர்களுடன் சென்றேன்.

போலீஸ் நிலையத்தில், அந்த பெண் , டிரைவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். நான் போலீசாரிடம் உண்மையை விளக்கினேன். நிலைமையை புரிந்து கொண்ட போலீசாருக்கு டிரைவர் மீது இரக்கம் பிறந்தது. அந்த பெண்ணை போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேற சொன்னார்கள். இரவு 11 மணி வரை அவர் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறவில்லை. 'டிரைவர் தனது காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டால்தான், போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே போவேன்' என்று அடம் பிடித்துக் கொண்டு அங்கேயே இருந்தார்.

பெண்ணின் நடவடிக்கையால் கோபமடைந்த போலீசார், டிரைவரை தனி அறைக்கு கொண்டு சென்றனர். தனி அறையில் வைத்து டிரைவரை அடிப்பது போல வெளியே சத்தம் கேட்டது. உடனே நான் அங்கே ஓடினேன். அங்கே சென்று பார்த்த போதுதான் போலீசாரின் செயல் என் மனதை நெகிழ வைத்துவிட்டது. போலீசார் வெறும் தரையில் போட்டு பெலட்டை அடித்துக் கொண்டிருந்தனர், டிரைவரோ சிரித்தபடி வலியால் துடிப்பது போல கத்திக் கொண்டிருந்தார்.

அறைககுள் சென்ற என்னிடம், டிரைவருக்கு ஆதரவாக வந்ததற்காக போலீசார் நன்றி தெரிவித்தனர். 'நீங்கள் உண்மையை விளக்கவில்லை என்றால் கேஸ் போட்டிருப்போம். அவரது வாழ்க்கை பாழாகிப் போயிருக்கும்' என்றனர். போலீசார் டிரைவரை அடித்ததாக நினைத்து சமாதானமடைந்த அந்த பெண்ணும் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினார். நாங்கள் இருவரும் போலீசாருக்கு நன்றி தெரிவித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டோம். நான் வீடு போய் சேர்ந்த பிறகு அந்த டிரைவருக்கு போன் செய்தேன். அவரது குரலில் ஒரு பாதுகாப்பு தெரிந்தது.

சூழலை புரிந்து கொண்ட மும்பை போலீசுக்கு நன்றி!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024