Sunday, November 27, 2016

மாத சம்பளத்தை எப்படி கொடுக்கப் போகிறார்கள்?

அடுத்த 4 நாட்களில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் போன்ற கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 53 லட்சம் பென்ஷன்தாரர்களும் இருக்கிறார்கள். தமிழக அரசு பணியில் கிட்டத்தட்ட 14 லட்சம் ஊழியர்களும், 7 லட்சம் பென்ஷன்தாரர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்குகளில் தான் அவர்களது மாத சம்பளம் வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள 1 லட்சத்து 34 ஆயிரம் வங்கிக் கிளைகளிலும், ஏ.டி.எம்.களிலும் தான் இவர்கள் பணம் எடுத்துக்கொண்டிருக் கிறார்கள். கடந்த 8–ந் தேதி திடீரென பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து விட்டார். இந்தியாவின் மொத்த பணப்புழக்கம் ஏறத்தாழ 17 லட்சம் கோடியாக இருக்கும் நேரத்தில், இந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மட்டுமே ரூ.14 லட்சத்து 18 ஆயிரம் கோடி மதிப்பிலிருக்கிறது. ஏறத்தாழ 86 சதவீதம் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், புதிதாக 2,000 ரூபாய்நோட்டுகள் மட்டும் அச்சடிக்கப்பட்டு புழக் கத்திற்கு வந்துள்ளன. 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் எல்லா இடங்களுக்கும் வரவில்லை.

நாட்டில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. தற்போது வங்கிகளில் ஏற்கனவே வங்கிக் கணக்கில் போட்டு வைக்கப்பட்டிருக்கும் பணத்தில், வாரந்தோறும் ரூ.24 ஆயிரம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டாலும், ஒருவங்கியிலும் முழுமையாக இந்த தொகை கிடைப்பதில்லை. ரூ.10 ஆயிரம் எடுக்கப்போனால், ரூ.4,000 அல்லது ரூ.5,000 தான் தருகிறார்கள். ஏ.டி.எம். மெஷினிலும் ஒருநாளைக்கு ரூ.2,000 தான் எடுக்க முடியும். இன்றைய சூழ்நிலையில், 1,570 கோடி எண்ணிக்கையில் பழைய 500 ரூபாய் நோட்டுகளும், 632 கோடி எண்ணிக் கையில் 1,000 ரூபாய்நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்துவிட்ட நிலையில், இந்த 1,570 கோடி எண்ணிக்கையிலுள்ள 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவே இன்னும் 6 மாத காலமாகும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சென்னையில் அறிவித்திருக்கிறது. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் 4 அச்சகங்கள் மத்தியபிரதேசம், மராட்டியம், கர்நாடகம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங் களில் இருக்கிறது. இதில், கர்நாடக மாநிலம், மைசூரிலுள்ள அச்சகத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளே அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இரவு, பகலாக வேலை பார்த்தால் கூட பிரதமர் கூறியபடி, டிசம்பர் 31–ந் தேதிக்குள் நிலைமை சீரடையுமா? என்பது ஐயமாகத்தான் இருக்கிறது.

2 லட்சத்து 20 ஆயிரம் ஏ.டி.எம்.களில், எல்லா ஏ.டிஎம்.களிலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள், 2,000 ரூபாய் நோட்டுகள் எடுக்கப்படும் வகையில் வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. இந்த நிலையில், அடுத்த 4 நாட்களில், 1–ந் தேதி முதல் எல்லா மாதசம்பளம் பெறுபவர்களும் தங்கள் சம்பளத்தை எடுக்க வங்கிகளையும், ஏ.டி.எம்.களையும் நாடுவார்கள். வழக்கமாக 1–ந் தேதி முதல்
7–ந் தேதிக்குள் சம்பளப்பணத்தில் ஏறத்தாழ முழுத்தொகையையும் அரசு ஊழியர்கள் ரொக்கமாக எடுத்துக் கொள்வார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.15 ஆயிரத்து 350 கோடி வழங்க வேண்டும். இதுதவிர, 29 மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், 40 லட்சம் ஐ.டி. ஊழியர்கள் என இந்த பட்டியல் கோடிக் கணக்கில் நீண்டு கொண்டே இருக்கிறது. இப்போதுள்ள நிலையில், முழு சம்பளப்பணத்தையும் ரொக்கமாக கொடுக்க வங்கி கிளைகளால் முடியுமா? என்பது சந்தேகத்தில் தான் இருக்கிறது. இப்போது ரூபாய் நோட்டு களை எடுப்பதற்கு வங்கிக் கிளைகளிலும், ஏ.டி.எம்.களிலும் எப்படி கூட்டம் இருக்கிறதோ?, அதே கூட்டத்தை வருகிற 1–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை அரசு ஊழியர்களும் பணம் எடுக்க நின்று கொண்டிருப்பதை பார்க்கலாம். அரசு எப்படி இந்த பிரச்சினையை சமாளிக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024