Monday, November 28, 2016

அஞ்சலி: பாலமுரளி விரும்பிய விருது!

பி.ஜி.எஸ். மணியன்
படங்கள் உதவி: ஞானம்

திருவிளையாடல்” படத்தில் வரும் ஹேமநாத பாகவதர் என்ற ஆணவத்தின் சிகரத்தில் நிற்கும் இசைக் கலைஞரை அன்றாடம் பக்திப் பாடல்கள் பாடும் பாணபத்திரர் என்ற பக்தனுக்காக ஈசன் வெற்றி கொள்ளும் கதை.

இந்தக் காட்சியில் அரசவையில் ஹேமநாத பாகவதர் பாடுவது போன்ற ஒரு காட்சி. அவருக்குப் பின்னணி பாடுவதற்காக இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை அணுகிக் கதைப் பின்னணியைப் பற்றிக் கூறினார் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். தான் பாடும் கதாபாத்திரத்தின் தன்மையைக் கேட்டதும், “அண்ணா! என்னை மன்னிச்சுக்குங்க. தோற்றுப்போகும் கதாபாத்திரங்களுக்குப் பாடுவதில்லை என்று ஒரு கொள்கை வைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று மறுத்துவிட்டார் சீர்காழி.

யாரைப் பாடவைப்பது?

இசை மேதை ஒருவருக்குப் பின்னணி பாடுவதற்குக் கர்நாடக சங்கீதத்தில் மட்டுமல்லாமல் ஹிந்துஸ்தானியிலும் தேர்ந்த பிரபலப் பாடகர் ஒருவரைப் பாடவைத்தால் என்ன? இந்த எண்ணம் தோன்றியதும் இசை அமைப்பாளர், இயக்குநர் இருவர் மனதிலும் பளிச்சென்று தோன்றியவர் மங்கலம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா.

பாலமுரளி அப்போது புகழின் உச்சியில் இருந்தார். சீர்காழியே மறுத்துவிட்ட ஒரு கதாபாத்திரத்துக்கு இவர் பாட எப்படி ஒப்புக்கொள்வார்? எதற்கும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து பாலமுரளி கிருஷ்ணாவை அணுகி வேண்டுகோளைத் தயக்கத்துடன் அவரிடம் வைத்தார் ஏ.பி.என்.

சற்றும் தயங்காமல் மலர்ந்த முகத்துடன், “அதுக்கென்ன? பாடிட்டாப் போச்சு” என்று மனப்பூர்வமாக எந்த வித சுணக்கமும் காட்டாமல் சம்மதம் கொடுத்துவிட்டார் அவர். இதுதான் பாலமுரளிகிருஷ்ணா. அதற்கேற்றாற்போல அவரது குரலில் வெளி வந்த ‘ஒருநாள் போதுமா’ பாடல் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களையும் மீறி முதல் இடம் பிடித்த பாடலாக அமைந்துவிட்டது.

பாடலின் ஆரம்பத்தில் ‘மாண்ட்’ என்ற ஹிந்துஸ்தானி ராகத்தில் பாலமுரளி கிருஷ்ணா வெளிப்படுத்திய சங்கதிகள் ஒவ்வொன்றும் வெல்வெட்டில் பாதிக்கப்பட்ட வைரக்கற்கள். சரணத்தில் வரிக்கு வரி ராகம் மாறும் பாடலில் பாலமுரளியின் மேதாவிலாசம் பாமர ரசிகர்களையும் கிறங்க வைத்தது. கர்நாடக சங்கீத உலகில் மட்டுமல்ல; திரை இசையிலும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா சாதனை படைத்திருக்கிறார்.

கோதாவரியின் கரையிலிருந்து…

மங்கலம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா என்ற டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா ஆந்திரத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுப்தம் என்ற கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் மிகப் பெரிய இசைக் கலைஞர். புல்லாங்குழல், வீணை, வயலின் ஆகிய வாத்திய இசைகளில் தேர்ந்தவர். அவரது தாயாரும் மிகச் சிறந்த வீணை விதூஷகி. பிறந்த சில நாட்களிலேயே தாயை இழந்த பாலமுரளி தந்தையின் ஆதரவால் இசைத் துறையில் காலூன்ற ஆரம்பித்தார். தியாகராஜரின் நேரடி சிஷ்ய பரம்பரையில் வந்த பாருப்பள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலு என்பவரிடம் இசை பயின்றார்.

எட்டு வயதில் தனது முதல் கச்சேரியை ஆரம்பித்தவர் கர்னாடக இசைத் துறையில் முன்னணிக் கலைஞராக உயர்ந்தார். பதினைந்து வயதுக்குள் 72 மேளகர்த்தா ராகங்களையும் தன் வசப்படுத்தி அவற்றில் சொந்தமாக சாகித்யங்கள் இயற்றுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. பாலமுரளி கிருஷ்ணாவால் அது முடிந்தது.

நினைவுக்கு வரும் பாடல்

தமிழ்த் திரை உலகில் அவர் பாடிய பாடல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இயக்குநர் ஸ்ரீதரின் ‘கலைக்கோவில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே’ என்ற ஆபோகி ராகப் பாடலை எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா. டி.கே. ராமமூர்த்தி தனித்து இசை அமைத்த ‘சாது மிரண்டால்’ படத்தில் இவர் பாடிய ‘அருள்வாயே அருள்வாயே’ என்ற சிந்துபைரவி ராகப் பாடல் அருமையாக மனதை வருடும்.

திரை நடிப்பும் திரையிசையில் பிடிப்பும்

பாடகராக இருந்த பாலமுரளியை நடிகராக்கிய பெருமை ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரையே சாரும். ஏ.வி.எம். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரித்த ‘பக்தப் பிரகலாதா’ படத்தில்தான் நாரதர் வேடத்தில் தோன்றி நடித்தார் பாலமுரளி கிருஷ்ணா. ‘ஆதி அநாதியும் நீயே தேவா’ என்ற பாலமுரளியின் பாடல் அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டது.

‘அபூர்வ ராகங்கள்’ படத்துக்காக ஒரு புதிய ராகத்தில் பாடல் அமைக்க வேண்டும் என்று விரும்பிய எம்.எஸ்.வி., பாலமுரளியை அணுகி “யாரும் இதுவரை உபயோகப்படுத்தாத புதுமையான ராகம் தொடர்பாக எனக்கு உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டபோது, “ஆரோகணம் அவரோகணம் இரண்டிலும் மூன்றே ஸ்வரங்கள் கொண்ட ராகமான மஹதி ராகத்தில் அமையுங்கள். புதுமையாக இருக்கும்” என்றார் பாலமுரளி கிருஷ்ணா. அப்படி அமைக்கப்பட்ட பாடல்தான் ‘அதிசய ராகம் அபூர்வ ராகம்’.

நான்கு தேசிய விருதுகள்

‘ஹம்சகீதே’ என்ற கன்னடப் படத்துக்காக இசை அமைப்பாளராகவும் பாடகராகவும் இரண்டு தேசிய விருதுகளை 1975-ம் வருடம் பெற்றார். ‘ஆதி சங்கராச்சார்யா’ என்ற சம்ஸ்கிருத மொழிப் படத்துக்கு அமைத்த இசைக்காக ஒரு தேசிய விருது. ‘மத்வாச்சாரியா’ என்ற கன்னடப் படத்துக்காக மீண்டும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஆகியவற்றைப் பெற்றார்.

பொதுவாக கர்நாடக இசைத் துறையில் இருப்பவர்கள் மற்ற இசையை ஒரு படி குறைவாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், பாலமுரளிகிருஷ்ணா இதிலும் வித்தியாசமான சிந்தனை உடையவர். “பாப்போ, வெஸ்டெர்ன்னோ, சினிமா பாட்டோ எதுவா இருந்தாலும் நிலைச்சு நிக்கறதுதான் கிளாசிகல். கர்னாடக சங்கீதம் மட்டும்தான் கிளாசிகல்ன்னு சொல்லறது தப்பு” என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னவர். அதுபோலவே, அவர் திரையிசைக்காகக் கொடுத்த பாடல்கள் அனைத்துமே நிலைத்து நின்று கிளாசிக்கல் பாடல்களாகத் திகழ்கின்றன.

இளையராஜாவின் இசையில் ‘கவிக்குயில்’ படத்துக்காக ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’, பாடல் எனப் பல பாடல்களைச் சொல்லலாம். ‘மானஸ சஞ்சரரே’ பாடலின் அமைப்பிலேயே எம்.எஸ்.வி. சாமா ராகத்தில் அமைத்த ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’ என்ற ‘நூல்வேலி’ படப் பாடல் பாலமுரளி கிருஷ்ணாவைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இப்படி எடுபட்டிருக்குமா என்பது சந்தேகமே.

ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ‘பசங்க’ படத்துக்காக இவர் பாடிய ‘அன்பாலே அழகாகும் வீடு’ என்று இன்றைய தலைமுறை இசை அமைப்பாளர்களின் இசையிலும் பாடிய மகா பாடகர். கமல் ஹாசன்,ஜெயச்சந்திரன், ஏ.வி. ரமணன் ஆகியோருக்குக் கர்நாடக இசையைக் கற்றுக் கொடுத்த ஆசான். “மறுபிறவி என்று ஒன்று இருக்குமானால் நான் பலமுரளிகிருஷ்ணா அவர்களின் சிஷ்யை யாகப் பிறந்து அவரிடம் இசை கற்றுக்கொள்ள வேண்டும்” - முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட விருப்பம் இது.

பத்ம பூஷண், பத்ம விபூஷண் என்று நமது நாட்டின் உயரிய விருதுகளால் கௌரவிக்கப்பட்ட இந்த மாமேதைக்கு பிரான்ஸ் நாடும் செவாலியே விருதை வழங்கி கௌரவித்தது. ஆனாலும் மிகப் பெரிய விருதாக இவர் மதித்தது ரசிகர்களின் கரவொலியையும் சந்தோஷத்தையும்தான். “ஒரு கலைஞனுக்கு ரசிகர்கள்தான் எல்லாம். இந்த விருதுகள் எல்லாம் எக்ஸ்ட்ரா போனஸ் போன்றவை” என்று சொன்னவர் அவர்.

அப்படிப்பட்ட மேதையை, ‘சின்னக் கண்ணனை’ இனிய குரலால் அழைத்தவரை, அந்தச் சின்னக் கண்ணன் தன்னிடம் அழைத்துக்கொண்டுவிட்டானோ! ‘ஒரு நாள் போதுமா?’ என்று அவர் பாடக் கேட்டு பாண்டிய மன்னன் மெய்சிலிர்த்ததுபோல அந்தச் சின்னக் கண்ணனும் இப்போது அந்த வசீகரக் குரலில் தன்னை இழந்து தனது குழலிசைக்க மறந்து நின்றிருப்பான்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024