Tuesday, November 29, 2016

பொலிவான கலைவாணர் அரங்கம் தெரிந்திருக்கும்... பாழடைந்த கலைவாணரின் இல்லம் பற்றி தெரியுமா?


நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்.எஸ்.கிருஷ்ணன். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை பாடல்களாகவும் அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர். வெறும் நகைச்சுவையாக மட்டும் இல்லாமல், தனது பாடல்களால், பேச்சால் மக்களின் சிந்தனையைத் தூண்டியவர். இன்றும் மக்களின் மனதில் நீங்காமல் வாழும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று.

என்.எஸ்.கே. என அனைவராலும் பாசமுடன் அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்துக்கு ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டு, மிக அழகாய் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் என்.எஸ்.கே. வாழ்ந்த இல்லம் எப்படி இருக்கிறது என்பது தெரியுமா? நாகர்கோவிலில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் அந்த வீடு, இப்போது பராமரிப்பின்றி, பாழடைந்து கிடக்கிறது.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

முதல் கான்கிரீட் வீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுப்பப்பட்ட முதல் கான்கிரீட் வீடு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் "மதுர பவனம்" தான். இந்திய விடுதலைக்கு முன் அதாவது 1941ம் ஆண்டு இந்த வீடு கட்டப்பட்டது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் ஆச்சரியத்தோடு வியந்து பார்த்த வீடு இது. மொசைக் தரை போட்ட அந்த வீட்டை பார்க்க மாட்டு வண்டி கட்டி வந்தவர்கள் கூட உண்டு. இப்போதும் கம்பீரம் குறையாமல், அதே நேரத்தில் பராமரிப்பு இன்றி நிற்கிறது நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மதுர பவனம்.

நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. தன் பெயரைப்போலவே வாழ்க்கையையும், 49 ஆண்டுக்குள் சுருக்கிக் கொண்டார். கலைவாணருக்கு இரண்டு மனைவிகள் ஒருவருக்கு காவிரி ஆற்றங்கரையிலும்,இன்னொருவருக்கு குமரிமாவட்டம் பழையாற்றங்கரை ஒழுகினசேரியிலும் வீடு கட்டினார் கலைவாணர்.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

பொக்கிஷங்களை பாதுகாக்கும் வீடு

அப்போது குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அப்போது சித்திரை திருநாள் மகாராஜா மன்னராக இருந்தார். சமஸ்தானத்தில் உள்ள சில பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டபோது நாடகம் நடித்து அந்த பணத்தை சமஸ்தானத்துக்கு கொடுத்தார் என்.எஸ்.கே. நாடகத்தில் கலைவாணரின் நடிப்பும், அத்துடன் அவரது சமூக சேவையும் பிடித்துப்போக அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இன்றும் இந்த வீட்டில் அந்த படம் பொக்கிஷமாய் உள்ளது. தியாகராஜ பாகவதர்கூட இந்த வீட்டில் வந்து பாடல் பாடியுள்ளார் என்கிறார்கள். வீட்டின் மொட்டை மாடியில் அழகாக அமைக்கப்பட்ட கோபுர கூண்டிலில் கலைவாணர் அமர்ந்திருப்பாராம்.

ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டுள்ளார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார்.வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார்.

புரியாமல் விழித்த பெண்ணிடம் என்.எஸ்.கே. சிரித்தபடியே சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன் மேல் இரக்கப்பட்டு கொடுத்தது. இப்போது கொடுத்தது உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

கலைவாணருக்கு வந்த 'சோதனை காலம்'

அள்ளி அள்ளி கொடுத்த கலைவாணருக்கு மிகப்பெரிய சோதனைக் காலம் வந்தது.லட்சுமிகாந்தன் கொலைச் செய்யப்பட்ட போது, லட்சுமிகாந்தனை யார் கொன்றிருக்கக்கூடும் என்னும் கேள்வி எழுந்தது. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் , ஸ்ரீராமுலு நாயுடு ஆகிய மூவரையும் அதற்குப் பொறுப்பாளிகளாக்கியது காவல் துறை. மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவாளிகளுக்குப் பிரபல வழக்கறிஞர்கள் ராஜாஜி, வி.டி. ரங்கசாமி ஐயங்கார், கோவிந் சாமிநாதன், கே.எம்.முன்ஷி, பி.டி.சுந்தர்ராஜன், சீனிவாச கோபால் மற்றும் பிரேடல் ஆஜரானார்கள். நீதிபதி மாக்கெட் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு நடந்த சமயத்தில் ஜூரி முறை இருந்தது. ஜூரி என்றால் நடுவர் குழு. பொது மக்களிலிருந்து 12 நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த நடுவர் குழு அமைக்கப்படும். வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு தான், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று முடிவெடுக்கும். அந்த முடிவை வைத்து நீதிபதி தகுந்த தீர்ப்பை அளிப்பார். இந்த முறை இப்போது நடைமுறையில் இல்லை.

வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு விசாரணையின் இறுதியில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பை வெளியிட்டது. ஆனால் ஸ்ரீராமுலு குற்றம் ஏதும் இழைக்கவில்லை என்ற முடிவையும் நீதிபதிக்குத் தெரிவித்தது. நடுவர் குழுவின் முடிவின்படி நீதிபதி, தியாகராஜ பாகவதருக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். (இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு, 1955 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து நாடு கடத்தும் தண்டனை நீக்கப்பட்டது).



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

மீண்டு வந்த என்.எஸ்.கே.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பாகவதரும் கலைவாணரும் ப்ரிவி கவுன்சிலில் இரண்டாவது மேல்முறையீடு செய்தார்கள். ப்ரிவி கவுன்சில் லண்டனில் இருக்கிறது. இந்தியாவில் உச்ச நீதிமன்றம் நிறுவப்படாத நிலையில், இந்திய உயர் நீதிமன்றங்களுடைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பியவர்கள் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலைத்தான் அணுக வேண்டியிருந்தது. இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர் உச்ச நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு, ப்ரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்வது நிறுத்தப்பட்டது.

பாகவதர் மற்றும் கலைவாணருடய மேல்முறையீட்டை விசாரித்த ப்ரிவி கவுன்சில், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று கூறி, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்தியாவில் மறுபடியும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேப்பல் மற்றும் ஷஹாபுதின் அடங்கிய பெஞ்ச் (Division Bench) முன்பு விசாரணைக்கு வந்தது. (இதில் நீதிபதி ஷஹாபுதின் பின்னாளில் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டார். அங்கே அவர் பதவி உயர்வு அடைந்து இறுதியாக பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்). இம்முறை குற்றவாளிகளுக்காக வாதாடியவர் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ். வழக்கை விசாரித்த புதிய பெஞ்ச், தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

பாழடைந்து நிற்கும் 'மதுர பவனம்'

இந்த வழக்கு முடியும்வரை பாகவதரும் கலைவாணரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையிலிருந்தனர். லட்சுமிகாந்தன் கொலை வழக்கிலிருந்து விடுபடுவதற்கு பாகவதரும் கலைவாணரும் தாங்கள் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் செலவு செய்திருந்தனர். கலைவாணர் விடுதலையானபிறகு பல படங்களில் நடித்தார். புதிய நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். பல கலைஞர்களைத் திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1957-ம் ஆண்டு தன்னுடைய 49 வயதில் கலைவாணர் காலமானார்.

கலைவாணர் .என்.எஸ். கிருஷ்ணன் அருமை பெருமையோடு ஆசையாகக் கட்டிய "மதுரபவனம்" நாகர்கோவில் ஏலத்திற்க்கு வந்த செய்தி கேள்வி பட்டதும் ஏராளமான போட்டி ஏற்பட்டது. செய்தி எம்.ஜி.ஆர் காதுக்கு எட்டியதும் துடிதுடித்துப் போய் கலைவாணர் எப்படி எவ்வாறு வாழ்ந்தவர் அள்ளிக் கொடுத்த வள்ளல் அவர் வீடு ஏலத்திற்க்கு வருவதா? அப்படி வந்தால் அவரது குடும்பத்தினர் எல்லோரும் வீட்டை வீட்டு வெளியேறி நடுத்தெருவுக்கு வந்து விடுவார்களே என பதறினார். ஆர்.எம்.வீரப்பன் மூலம் பணம் கட்டி வீட்டை மீட்டு அதன் குடும்பத்தாரிடமே ஒப்படைத்தார்.

தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் பிறந்து நாடறிந்த திரைப்பட கலைஞர், சிரிப்பு நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் இது. இன்றும் அப்பகுதிவாசிகளின் அடையாள சின்னமாய் மாறி நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீட்டில் இப்போது அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.


படங்கள் : ரா.ராம்குமார்

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...