துன்பத்தில் இன்பம் காணலாமா?
By எஸ். ஸ்ரீதுரை | Published on : 26th November 2016 05:29 AM
என்ன ஆகி விட்டது இந்த இளைய தலைமுறைக்கு? பூமியில் நம்மோடு சக வாழ்வு வாழ்ந்து வரும் அப்பாவி மிருகங்களிடம் இவர்களுக்கு ஏன் இப்படிப்பட்டதொரு துவேஷம்?
வேலூரைச் சேர்ந்த சில மருத்துவ மாணவர்கள் அரங்கேற்றியிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தைத்தான் சொல்கிறேன்.
ஓர் அப்பாவிக் குரங்கைப் பிடித்த அந்த மருத்துவ மாணவர்கள், வார்த்தைகளால் விவரிக்க இயலாத சித்திரவதைகளுக்கு அதை ஆளாக்கிக் கடைசியில் அதைக் கொன்றுவிட்டிருக்கிறார்கள்.
கொடூர மனம் படைத்தவர்கள்கூடக் கற்பனை செய்ய முடியாத ஒரு செயலை இந்த இளம் மாணவர்கள் நிகழ்த்தியிருப்பது மனித இனத்துக்கே அவமானம்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு நாயைத் தாங்கள் வசிக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து கீழே போட்டு, அது கீழே விழுந்து கொண்டிருப்பதையும், விழுந்த பின்பு வலியால் துடிப்பதையும் செல்லிடப்பேசி மூலம் படம் எடுத்து ரசித்ததன் மூலம் நம்மையெல்லாம் அதிர வைத்தார்கள்.
பிற ஜீவனின் துன்பத்தில் இன்பம் காண்கின்றவர்களை மனிதர்கள் என்று சொல்லவே நா கூசுகின்றது.
மனித உயிர்களை நோயினின்று காப்பாற்றி உயிர் பிழைக்கச் செய்கின்ற மகத்தான பணிதான் மருத்துவப் பணி.
அதனால்தான், மருத்துவத் தொழில் புரிபவர்களைக் கடவுளுக்குச் சமமாக அனைவரும் மதிக்கின்றனர்.
அப்படிப்பட்ட புனிதமான தொழிலில் ஈடுபடுவதற்காகப் படித்து வரும் மருத்துவ மாணவர்கள் சிலரது நெஞ்சம் இப்படிக் கொடுமை எண்ணங்கள் நிறைந்ததாக எப்படி இருக்க முடியும்?
இப்படிப்பட்டவர்கள் படித்து முடித்து எதிர்காலத்தில் மருத்துவப் பணியில் ஈடு பட்டால் அவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளை எவ்வாறு கருணையுடன் கவனிப்பார்கள்?
இதேபோன்றுதான், சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட நாவரசு கொலை வழக்கிலும் நடந்தது.
மருத்துவக் கல்லூரி மாணவரான நாவரசு தன்னுடைய சீனியரான ஜான் டேவிட் என்பவரால் கொடுமைப்படுத்தப்பட்டுப் பல துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு கல்வி நிலையங்களில் நிகழ்த்தப்படும் ராகிங் கொடுமைகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
மனிதராயினும், விலங்குகளாயினும், மற்ற ஜீவராசிகளின் துன்பத்திலும் மரணத்திலும் இன்பம் காணக்கூடியவர்கள் இந்தச் சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர்கள் அல்லவா?
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும், ஜீவகாருண்யம் போற்றும் இன்னும் எத்தனையோ மகான்களும் அவதரித்து வாழ்ந்து வந்த இந்தப் புண்ணியத் தமிழ் பூமியில், இப்படிப்பட்ட கொடூரர்களும் பிறந்திருப்பதை என்னவென்று சொல்ல?
இத்தகைய சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாகத்தானே நடைபெறுகின்றன என்றும் சிலர் கேட்கலாம்.
ஒரு குடம் பாலை பயனற்றதாக்குவதற்கு ஒரு துளி விஷமே போதுமானது.
அதேபோலத்தான் இத்தகைய சம்பவங்களும். இவை ஏற்படுத்துகின்ற எதிர்மறை அதிர்வுகளும், இந்நிகழ்வுகளைப் பார்க்க நேரிடும் இளைய தலைமுறையினர் மனதில் ஏற்படும் பாதிப்புகளும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.
ஒரு சுவாதி கொலை வழக்கில் துப்பு துலக்கப்படுவதற்கு முன் தமிழகம் முழுவதும் எத்தனை ஒருதலைக் காதல் கொலைகள் அரங்கேறிவிட்டன....
தனது காதலை ஏற்காத பெண் உயிரோடு இருக்கவே தகுதி அற்றவள் என்று இன்றைய இளைஞர்கள் பலரும் நினைக்கத் துவங்கி இருப்பதையே நாள்தோறும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏதோ ஓரிடத்தில் பச்சிளம் பாலகன் ஒருவனை கயவர்கள் சிலர் மதுவருந்த வைத்த செய்தி, இப்போது தொடர்கதையாகி இருக்கிறது.
இன்றைய சூழலில் நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களின் மீதே ஊடக வெளிச்சம் அதிகம் பாய்கிறது.
அத்தகைய வெளிச்ச விளம்பரமானது, இளைய சமுதாயத்தினர் சிந்தனைகளில் ஏற்படுத்தும் பாதிப்பு சொல்லி முடியாதது. தங்கள் மீதும் தாற்காலிகமாகவாவது சிறிது நேரம் ஊடக வெளிச்சம் பாயட்டும் என்ற அற்ப ஆசையில்கூட கொடுஞ்செயல்களைப் பலர் அரங்கேற்றும் வாய்ப்பு இருக்கிறது.
இத்தகைய சூழலில்தான், தங்களிடம் மாட்டிக்கொண்ட அப்பாவி மிருகங்களைச் சித்திரவதை செய்த இளைஞர்களின் செய்கைகளும் பல சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவே கருத வேண்டியுள்ளது.
காட்டுமிராண்டித்தன செயலை நிறைவேற்றுவதோடு நிற்காமல், அதனை படம் பிடித்தும், முக நூல் உள்ளிட்டவற்றில் பதிவேற்றியும் சுகம் காணும் குரூர மனப்போக்கும் இங்கு வளர்ந்து வருகிறது.
இனி இத்தகைய நிகழ்வுகள், கலாசாரம், பண்பாடு நிறைந்த நமது தமிழ்மண்ணின் எந்த ஒரு மூலையில் நிகழ்ந்தாலும் அதை நம் அனைவருக்கும் அவமானம் தரும் நிகழ்வாகவே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அரசாங்கம், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், மனநல நிபுணர்கள் ஆகிய பல துறையினரும் இணைந்து, இன்றைய இளைய தலைமுறையினரின் மனங்களில் வேரோடிப்போயிருக்கும் குரூர சிந்தனைகளையும், குறுகிய விளம்பரம் தேடும் முயற்சிகளையும் களைய வழிவகை செய்ய வேண்டியது மிக மிக அவசியம்; அவசரமும் கூட.
No comments:
Post a Comment