Saturday, November 19, 2016

"சாதாரண மனிதர்களால் குருசாமியாக முடியாது"- நம்பியார்சாமியின் வாக்கு! (நம்பியார் நினைவு தின பகிர்வு)

 '

வில்லன்...' என்றாலே சட்டென நம் நினைவுக்கு வருபவர் நம்பியார். தமிழ் சினிமாவில் அவருடைய வில்லன் பாத்திரம் வேறு யாராலும் ஈடுசெய்ய முடியாதது. கட்டான உடல்வாகு, கர்ஜிக்கும் குரலில் அனல் பறக்கும் வசனங்கள், ஹீரோக்களுடன் போடும் சண்டைக் காட்சிகள், வில்லத்தனமான சிரிப்புடன் அவர் கைகளைப் பிசைந்தபடி தலையைச் சாய்த்துப்பேசும் பாடிலாங்வேஜ்...

நினைத்த மாத்திரத்தில் நம் மனக்கண்ணில் தோன்றுபவை.

சினிமாவில் அவர் காட்டிய முகம் வில்லன், கொடுமைக்காரன், பணத்துக்காக எதையும் செய்பவன், ஏழைகளையும் பெண்களையும் துன்புறுத்துபவன்... `அப்படிப்பட்டவர், நிஜ வாழ்க்கையிலும் மோசமான ஆளாகத்தானே இருப்பார்?' என்று ரசிகர்களை எண்ணவைத்தன அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்.

நம்பியார் அடிவாங்குகிறாரா? அதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போதெல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று கொப்பளிக்கும். ஏதோ ஒரு பழி உணர்வைத் தீர்த்துக்கொண்ட திருப்தி ஏற்படும். ஒரு காலத்தில் பெண்களாலும் ரசிகர்களாலும் திரையரங்குகளில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என்.நம்பியாராகத்தான் இருக்க முடியும்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, `நம்பியார்' என்ற பெயர் உருவாக்கிய பிம்பம் இதுதான். ஆனால், திரைப்படங்கள் உருவாக்கிய இந்த மாய பிம்பங்களுக்கு நேரெதிரான வாழ்க்கையை இறுதிவரை கடைப்பிடித்தவர் என்பதுதான் பலரும் அறியாத அச்சு அசல் உண்மை.
நம்பியாரின் ஆன்மிக முகம் பிரசித்தமானது. மிகச்சிறந்த ஐயப்ப பக்தர். அவரை அறிந்தவர்கள், நெருங்கியவர்கள் பக்தி கலந்த மரியாதையுடன் அவரை `குருசாமி' என்றோ, `நம்பியார்சாமி' என்றோதான் அழைப்பார்கள்.

அவரது 65 ஆண்டுகால ஆன்மிகப் பாதையில் அவருடன் பல பிரபலங்கள் பயணத்திருந்தாலும், அவரது உள்ளம் கவர்ந்த ஐயப்ப பக்திப் பாடகர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வீரமணி ராஜு. இவர், பிரபல ஐயப்ப பக்திப்பாடல் புகழ் கே.வீரமணியின் அண்ணன் மகன். இவர், நம்பியாரின் மறைவுக்குப் பின்னரும், அவரது குடும்பத்தினர் நம்பியார் நினைவாக நடத்தும் பிறந்தநாள் விழாவில் தவறாமல் பங்கேற்று, பாடி வருபவர்.

அவர், நம்பியாருடன் சென்ற சபரிமலை யாத்திரை... குருசாமியாக நம்பியார் கூறிய ஆலோசனைகள்... அவருடனான தனது அனுபவங்கள்... அத்தனையையும் நம்பியாரின் நினைவு நாளான இன்று (நவம்பர் 19) நினைவுகூர்கிறார். அவர் பகிர்ந்துகொண்ட நம்பியார்சாமி குறித்த நீங்காத நினைவுகள்...

சபரிமலையைப் பிரபலமாக்கியவர்!

``சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில் பிரபலமாக்கியவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளைதான். இவர்தான் சபரிமலை ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, எம்.என்.நம்பியார்சாமியையும் மாலை போட வைத்தவர். அவருக்கடுத்து ,ஒரு மாநிலத்தின் கோயிலாக இருந்த சபரிமலையை, தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பிரபலப்படுத்திய புகழ் நம்பியார்சாமியைத்தான் சேரும்.

இதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம் வித்தியாசமானது. வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்பவர்கள் பிரபலங்களே. எனவே, சபரிமலை ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்வதை, தன் ஆன்மிகப் பணியாக வகுத்துகொண்ட அவர், மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற பிரபலங்கள் ஏராளம். அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்கள் கன்னிசாமியாக மாலை அணிந்து மலைக்குப் புறப்பட்டபோது, அவர்களுக்கு நம்பியார்தான் குருசாமி!
யார் குருசாமி?
60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்தவர். நீண்ட காலமாக `குருசாமி'யாக பக்தர்களை ஐயப்பன் கோயிலுக்கு வழிநடத்திச் சென்றவர். இவரது நீண்ட ஐயப்பன் கோயில் பயணம், `மகா குருசாமி' என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், அவரே தன்னை `குருசாமி' என்று ஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை. `நான் உங்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லவில்லை; உங்களுடன் நானும் பயணிக்கிறேன், அவ்வளவுதான்' என்பார்.
அதேபோல குருசாமி யார்? என்பதற்கு புதிய விளக்கமும் தந்தார். `18 முறை சபரிமலைக்குச் சென்றவர்களெல்லாம் குருசாமியல்ல; அவர்கள் அப்போதுதான் கன்னிசாமியாகிறார்கள். இதுபோல 18 முறை கன்னிசாமியாக இருந்தவர்தான் குருசாமி' என்று கூறி அதிரவைப்பார். அதாவது 18 X 18 = 324 வருடங்கள் சபரிமலை சென்றவர்தான் குருசாமியாக முடியும். ஐயப்பன் ஒருவரே குருசாமி, சாதாரண மனிதர்களால் அது முடியாது என்பதையே அவரது பாணியில் உணர்த்தினார்.

ஐயப்பனுக்கு சீசனா?
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்குச் செல்லும் கார்த்திகை மாதத்தை `ஐயப்பன் சீசன்' என்போம். ஆனால் அவரோ, `ஐயப்பனுக்கு ஏதுடா சீசன்... இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா?' என்பார் அவர் பாணியில்.
`அந்த 41 விரத நாட்கள், நம்மை தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் பயிற்சி. ஒருமுறை மாலை போட்டு விட்டால், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுக்க நாம் ஐயப்ப பக்தர்களே. எனவே, அந்த விரதமுறை, ஐயப்பனுக்காக நாம் செய்யும் தியாகம் அல்ல. அதனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அது உன்னை நல்வழிப்படுத்தி, உனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து, மனசாட்சிக்கு உட்பட்டு அதனை நேர்மையாகக் கடைபிடி' என்பார்.
மாதா, பிதா, குரு...
`சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தன் தாயின் கையால்தான் மாலை போட்டுக்கொள்ள வேண்டும்; பெற்றோரின் விருப்பமில்லாமல் மாலை போடக் கூடாது; முதலில் யார் உனக்கு குருசாமியாக இருக்கிறாரோ, இறுதி வரை அவருடன்தான் நீ யாத்திரை செல்ல வேண்டும். அதேபோல முதல்முறை உபயோகித்த மாலையைத்தான் இறுதி வரை பயன்படுத்த வேண்டும்' என்பார்.
புனித யாத்திரையில் கண்டிப்பு
`எந்த இடத்தில் மாலையை போட்டுக்கொண்டாயோ, அந்த இடத்திலேயே திரும்ப வந்து கழற்றினால்தான் உனது புனித யாத்திரை நிறைவுபெறும். பம்பையில் கழற்றினாலும், வழியில் கழற்றினாலும் விரதப் பயணம் நிறைவுறாது' என்பார். அதை அவருமே கடைப்பிடித்தார். அவருடன் வரும் சிவாஜி போன்ற மாபெரும் பிரபலங்களைக்கூட இடையிலேயே மாலையைக் கழற்றிவிட்டு, சினிமா சூட்டிங்குக்குச் செல்ல அவர் அனுமதித்தது இல்லை. இப்படி அனைவரிடமும் அன்புடன் கூடிய கண்டிப்போடு நடந்துகொள்வார் நம்பியார்சாமி.
எம்.ஜி.ஆரின் மரியாதை
நம்பியார் இருமுடி கட்டி ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும்போது, அவரது மனைவி ருக்மணிதான் நெய்த் தேங்காயில் நெய் ஊற்றி பயணத்தைத் தொடங்கி வைப்பார். அதேபோல எம்.ஜி.ஆர் உயிரோடு வாழ்ந்த காலம் வரை, அவர் அனுப்பிவைக்கும் மாலைதான் முதல் மாலையாக நம்பியாருக்கு அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்தது.

ஊருக்கு உபதேசம்!
'ஊருக்குத்தான் உபதேசம்' என்றில்லாமல் அவர் போதித்த விஷயங்களுக்கு அவரே முன்னுதாரணமாக அவற்றைத் தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர். விரத காலங்களில் மட்டுமல்லாமல், தன் வாழ்நாள் இறுதி வரை குடிப்பழக்கம், புகைப் பழக்கம் என எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாத மாமனிதர் அவர். கறுப்பு வெள்ளைக் (சினிமா) காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. ஆனால், அதற்கான எந்த தலைக்கனமும் அவரிடம் இருந்ததில்லை. திரையில் வில்லனாகத் தோன்றினாலும், நிஜத்தில் எந்த கெட்டப் பழக்க வழக்கங்களும் இல்லாத கதாநாயகனாகத்தான் வாழ்ந்தார். இவரிடம் நடிகர்கள் மட்டுமல்ல, அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன.

2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் நம்பியார்சாமி. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் இந்த கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால், ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே ஐயப்ப பக்தர்களாகிய நாங்கள் நம்புகிறோம்.''

- ஜி.லட்சுமணன்
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024