பெற்றோருக்கு ஜீவனாம்சம் வழங்குவது பிள்ளைகளின் கடமை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார்.
ஜீவனாம்சம் கேட்ட தாயார்
மதுரையைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
என் தாயார் பொன்.தேவகி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு எங்கள் குடும்பத்தினரைவிட்டு பிரிந்து சென்றார். இதன்பின்பு
என் தந்தை இறந்துவிட்டார். தற்போது நான், தம்பி ராஜகுமாரன், தங்கை இளமதி ஆகியோர் தனித்தனியாக வசித்து வருகிறோம். எங்களிடம் ஜீவனாம்சம் கேட்டு தாயார் மதுரை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, நானும், தம்பியும் தலா ரூ.3 ஆயிரமும், தங்கை ரூ.5 ஆயிரமும் மாதந்தோறும் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ரத்து செய்ய வேண்டும்
ஆனால் என் தாயார், எங்கள் அப்பாவை மதித்து நடக்கவில்லை. எங்களிடம் போதிய அக்கறை காட்டவில்லை. அவர் வீட்டை விட்டுச் சென்றதால் தான் என்னுடைய தந்தை இறந்தார். பிள்ளைகளை வளர்த்து, நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டியது தாயின் கடமை. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
எனவே, நாங்கள் ஜீவனாம்சம் தர வேண்டும் என கீழ்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்.தேவகி ஆஜராகி, ‘‘தற்போது எனக்கு 70 வயது ஆகிறது. 22 வயது வரை முதல் மகனையும், 14 வயது வரை 2–வது மகனையும் வளர்த்தேன். எனக்கு அங்கு போதிய பாதுகாப்பு இல்லாததால்தான் வீட்டை விட்டு வெளியேறினேன்’’ என்று கூறினார்.
பிள்ளைகளின் கடமை
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
பெற்றோரின் பராமரிப்புக்காக ஜீவனாம்சம் வழங்குவது வாரிசுகளின் கடமை. இதை அவர்கள் செய்யாவிட்டால் அது சட்டவிரோதம். பிள்ளைகளிடம் ஜீவனாம்சம் கேட்க சட்டரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் தாய்க்கு உரிமை உள்ளது. தனது பொறுப்பை பற்றி 2–வது மகன் ராஜகுமாரன் பேசவில்லை. அவர் கனடாவில் நல்ல நிலையில் வசிக்கிறார். மகள் இளமதியின் கணவர் இறந்துவிட்டதால் தற்போது அவர் நல்ல நிலையில் இல்லை. எனவே, இளமதி மாதம் ரூ.3 ஆயிரமும், இளங்கோவன் ரூ.3 ஆயிரமும், கனடாவில் உள்ள ராஜகுமாரன் மாதம் ரூ.15 ஆயிரமும் ஜீவனாம்சமாக அவர்களின் தாயாருக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment