Saturday, November 19, 2016

டாஸ்மாக் பரிமாற்றத்துக்கும் அதிரடி செக்! -வலையில் சிக்கிய அதிகாரிகள்



பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக, விசாரணை வளைத்துக்குள் சிக்கியுள்ளனர் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் சிலர். ' வங்கிகளில் பணத்தை மாற்றியது குறித்து ஆதாரபூர்வமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன' என அதிர வைக்கின்றனர் ஊழியர்கள்.

மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பழைய நோட்டுகளை 100, 50 ரூபாய்களாக மாற்றுவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அதிலும், அரசு நிறுவனங்களில் பணம் புழங்கும் இடங்களில், அதிகாரிகளே தங்களது கள்ளப் பணத்தை மாற்றிக் கொள்வதாக புகார் எழுந்தது. அண்மையில், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உள்பட்ட டிப்போக்களில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள், தேர்தல் செலவுகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய்களை மாற்றியதாக புகார் எழுந்தது.

இதன்பேரில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

அதேபோல், ஆவின், அமுதம் அங்காடிகள், கருவூலம் ஆகியவற்றில் பணம் மாற்றிக் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக, விருதுநகர் உள்பட சில மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் உயர் அதிகாரிகள் நாளொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் பழைய நோட்டுகளைத் திணித்துவிடுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில், 'இனி ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் கடைகளில் இருந்து வங்கிளுக்குச் செலுத்தப்படும் பணத்தைப் பற்றிய டினாமினேஷன்களை நகல் எடுத்து அனுப்ப வேண்டும்' என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமார் ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்பார்க்காத டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

"தமிழ்நாடு முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு கடைகளிலும் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. இப்படி வசூலாகும் தொகைகள் மட்டும் இரண்டாயிரம் கோடியைத் தாண்டும். இந்தப் பணத்தில் பெரும்பகுதி மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்குச் சென்று சேருகிறது" என விவரித்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி ஒருவர், "இந்தப் பணத்தை சிலர் ரியல் எஸ்டேட் உள்பட சில தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். சில அதிகாரிகள் பெரும் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை நல்ல நோட்டுகளாக மாற்றுவதற்கு டாஸ்மாக் சூப்பர்வைசர்களைப் பயன்படுத்தி வந்தனர். விருதுநகர், வேலூர் உள்பட பல மாவட்டங்களில் நாளொன்றுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையில் சில்லறை நோட்டுகளாக மாற்றப்பட்டு வந்தன.

மத்திய அரசின் அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குள் பல கோடி ரூபாய்கள், நல்ல நோட்டுகளாக மாறிவிட்டன. சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கள்ளப் பணமும் மாற்றப்படுவதாக புகார் எழுந்தது. இதில் சூப்பர்வைசர்களுக்கும் கணிசமான அளவுக்குக் கமிஷன் கிடைத்தது. இதுதவிர, பார் எடுத்து நடத்தும் அரசியல் புள்ளிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு, 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் சம்பவங்களும் நடந்தன. ' இந்தச் செயலில் யார் யார் ஈடுபடுகிறார்கள்' என அனைத்து விவரங்களும் டாஸ்மாக் எம்.டி.யின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, 'வங்கிகளில் செலுத்தப்படும் டினாமினேஷன் நகல்கள், செலான்களோடு இணைத்து அனுப்ப வேண்டும்' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் வருமானமும் கண்காணிப்பிற்குள் வர இருக்கின்றன. எந்தக்கடையில் இருந்து அதிகப்படியான 500, 1000 வெளியில் சென்றுள்ளது என்பதும் தெளிவாகத் தெரிந்துவிடும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது" என்றார் விரிவாக.

'ஒவ்வொரு அரசுத் துறைகளிலும் எவ்வளவு ரூபாய்கள் மாற்றப்படுகின்றன என்பது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஏதேனும் நடவடிக்கை பாய்வதற்கு முன், எச்சரிக்கை நடவடிக்கையாகவே டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது' என்கின்றனர் அதிகாரிகள் சிலர்.

- ஆ.விஜயானந்த்

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024