Wednesday, November 30, 2016

ரகசியத்தால் வந்த வெற்றி!

By எஸ். ராமன்  |   Published on : 30th November 2016 01:15 AM
நவம்பர் 8, 2016-ஆம் நாளுக்கு இந்திய பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கிய இடம் உண்டு. 8-ஆம் தேதி, இரவு எட்டு மணிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு, பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. உலக நாணய விலக்கு வரலாற்றில் இது ஒரு பெரும் நிகழ்வு என பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான், அறிவிப்பில் கடைசிவரை ரகசியம் காக்கப்பட்டது.
செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை, குறிப்பிட்ட காலத்திற்குள், 4,000 ரூபாய் வரை, வங்கிகளில் உடனடியாக மாற்றிக் கொள்ளலாம் மீதி தொகையை, டிசம்பர் 31-க்குள் வங்கி கணக்குகளில் செலுத்தலாம் என்ற திட்டத்தில் அடங்கிய சலுகையை உற்று நோக்கினால், சாதாரண குடிமகனை பொருளாதார இழப்புகளுக்கு உட்படுத்தக்கூடாது என்ற அரசாங்கத்தின் நுண்ணிய நோக்கம் புரியும்.
எதிரி எதிர்பார்க்காத தருணத்தில், தொடுக்கப்படும் திடீர் தாக்குதல்கள்தான், வெற்றிக்கு வழிகாட்டும் சிறந்த போர் தந்திரமாகும். அந்த போர் தந்திரம்தான் உயர்மதிப்பு நோட்டு விலக்கு அறிவிப்பில் பின்பற்றப்பட்டிருக்கிறது.
எனவே, முன் எச்சரிக்கை இன்றி வெளியான திட்ட அறிவிப்பு தவறானது என்ற வாதம் ஏற்க கூடியது அல்ல. முன் அறிவிப்புகள், திட்டத்தின் முக்கிய நோக்கத்தை முற்றிலும் முறியடித்திருக்கும் என்பதுதான் உண்மை நிலவரம்.
அதிக மதிப்புள்ள நாணயங்களை புழக்கத்திலிருந்து நீக்குவது ஒன்றும் நம் நாட்டிற்கு புதிதல்ல. இந்திய சுதந்திரத்திற்கு முன்னால், 1946-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், புழக்கத்திலிருந்த 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதே மதிப்பு நோட்டுகள், 1954-ஆம் ஆண்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன.
1978-ஆம் ஆண்டு, கருப்பு பண பதுக்கலை கட்டுப்படுத்த, இந்திய அரசாங்கம், 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து விலக்கியது. அந்த சமயத்தில், மொத்த பணப் புழக்கத்தில் அந்த நோட்டுகள் 1.4 சதவீதம் வரைதான் அங்கம் வகித்தன.
அந்த காலக்கட்டத்தில், ஒரு 1000 ரூபாய் நோட்டு, மும்பையின் முக்கிய பகுதியில் 5 சதுர அடி நிலத்தையோ, சென்னை புறநகர் பகுதியில் 600 சதுரஅடி நிலத்தையோ வாங்கும் அளவுக்கு மதிப்பு உடையதாக திகழ்ந்தது. எனவே, அந்த உயர் மதிப்புள்ள நோட்டுகளின் விலக்கலின் தாக்கம், அந்த தருணத்தில் சாதாரண மக்களால் அதிகம் உணரப்படவில்லை.
1978-ஆம் ஆண்டு நிகழ்வின்போது, ரிசர்வ் வங்கியின் கவர்னர், அரசின் கொள்கை முடிவை "இது அரசியல் எதிரிகளை முடக்க இயற்றப்பட்ட திட்டம் போல் தெரிகிறது' என்று வெளிப்படையாக விமர்சித்தார். ஆனால், தற்சமயம், ரிசர்வ் வங்கி, அரசின் கொள்கை முடிவில் முழுவதும் ஒத்துப்போயிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
புழக்கத்தில் இருக்கும் நாணய விலக்கல் முறை (Demonetization of currency) வெவ்வேறு தருணங்களில் பல நாட்டு அரசாங்களால் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பின்பற்றப்பட்டு வந்திருப்பதை சர்வதேச நாணய வரலாற்றை புரட்டுவதன் மூலம் அறியலாம்.
1969-இல் 10,000 மற்றும் 1,000 டாலர் நோட்டுகள், கருப்புப் பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க அரசால் விலக்கப்பட்டது. திட்டத்தின் வெற்றியால், விலக்கப்பட்ட அதிக மதிப்பு நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
1982-இல், ஆப்பிரிக்க நாடான கானா, வரி ஏய்ப்பையும், கள்ளப் பணத்தையும் கட்டுப்படுத்த, உயர்மதிப்பு நாணயத்தை புழக்கத்திலிருந்து விலக்கியது. திட்டத்தின் தொலைநோக்கு நலன்களை மக்கள் புரிந்துகொள்ளாததால், அந்த திட்டத்தின் நோக்கம் தோல்வியை தழுவியது.
1984-இல், நைஜீரிய அரசு புழக்கத்திலிருந்த பழைய நோட்டுகளுக்கு தடை விதித்து, புதிய நோட்டுகளை அறிமுகம் செய்தது. ஏற்கெனவே அயல் நாட்டு கடன்களிலும், பணவீக்கத்திலும் மிதந்து கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரம், அந்த அதிர்ச்சியை உள்ளிழுக்க முடியாமல் பலவீனம் அடைந்தது. திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் சரியாக கணிக்கப்படாதது, திட்ட நோக்கு தோல்விக்கு காரணமாக அமைந்தது.
1996-இல் ஆஸ்திரேலிய அரசு, புழக்கத்தில் இருந்த அனைத்து காகித நாணயங்களையும் விலக்கி, கள்ளத்தனமாக அச்சடிக்க முடியாத பிளாஸ்டிக் நோட்டுகளை (counterfeit-resistant polymer plastic bank notes)   அறிமுகப்படுத்தியது, மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறது.
2002-இல், ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தனி நாணயங்கள் புழக்கத்திலிருந்து விலக்கப்பட்டு, அனைவருக்கும் பொதுவான யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999 லிருந்து 2002 வரை இந்த நடவடிக்கைகள் பல கட்டங்களில் நிகழ்ந்து முழுமை பெற்றன.
ஐரோப்பியக் கூட்டமைப்பு உருவான பல வருடங்களுக்கு பிறகுதான், பொது நாணயமுறை அமல்படுத்தப்பட்டது.
2010-இல் வடகொரிய அரசு, கள்ளச் சந்தையின் தாக்கத்தை குறைக்க புழக்கத்திலிருந்த நாணயங்களின் மதிப்பிலிருந்து கடைசி இரண்டு பூஜ்யங்களை அதிரடியாக நீக்கி, நாணயங்களின் மதிப்பைக் குறைத்தது.
சாதாரண குடிமகன்களின் நலனை மனதில் கொள்ளாமல் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதால், அந்நாட்டு நடுத்தர வர்க்கத்தை இத் திட்டம் பெருமளவில் பாதித்தது.
திட்டங்களின் நோக்கம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அவற்றை அமல்படுத்தும் நடைமுறைகளும் மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை முந்தைய பொருளாதார வரலாறுகளிலிருந்து அறியலாம்.
4,000 ரூபாய் வரை, பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்ற அறிவிப்பிற்கு பிறகு, ஏராளமான மக்கள் தங்கள் அடையாள ஆவணங்களின் நகல்களை வங்கிகளில் கொடுத்து, நோட்டுகளை மாற்றினர்.
ஒருவரே, பலமுறை மாற்றுவதை தடுக்க, மாற்றியவர்களின் விவரங்களை வங்கி பதிவேடுகளில்(computer system)   பதிய வேண்டியது அவசியம். ஆனால், வங்கிகளால் அம்மாதிரி நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதுவே, பல முறைகேடுகளுக்கு வித்திட்டது. இதற்கு பிறகுதான் மை இடும் யோசனை அரசுக்கு வந்தது.
மை தீட்டும் திட்டத்திற்கு பிறகு, வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற காத்திருந்த பெரும் கூட்டம் குறைந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. இம்மாதிரி நுண்ணிய விவரங்கள் அதிகார வர்க்கத்தினால் முன்கூட்டியே கணிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
அறிவிப்புக்கு முன்பு, புழக்கத்தில் இருந்த நாணயங்களில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் 86 சதவீதம் பங்கு வகித்தன. அவை முற்றும் அகற்றப்பட்ட நிலையில், அதிக மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்திற்கு விடப்பட்டன.
அதற்கு பதிலாக, புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்தால், தற்போது நிலவும் குழப்பங்களை ஓரளவு குறைத்திருக்கலாம். 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு நடுவில் பெரும் இடைவெளி நிலவுவதால், அந்த இடைவெளியை நிரப்ப புதிய 200 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகப்படுத்தி இருக்கலாம். ஏனோ அறிமுகப்படுத்தவில்லை. பரவாயில்லை, இனியாவது அறிமுகப்படுத்த வேண்டும்.
ஏ.டி.எம். மெஷின்களின் மூலம் பணம் பெறமுடியாததற்கு ஒரு காரணம் அவற்றை புதிய நோட்டுகளின் வடிவமைப்புக்கு ஏற்றபடி, சீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், தற்போதைய முறைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்கிலிருந்தும் எடுக்கப்படும் தொகைக்கான அளவு மாற்றி அமைக்கப்படவேண்டும்.
ஏ.டி.எம்.களின் சீரமைப்புக்குத் தேவையான சில உதிரி பாகங்கள் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் கசிந்துள்ளது. பிரதமரின் "மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், மற்ற நாடுகளைச் சாராமல், சிறிய உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க முற்பட்டால், இம்மாதிரி முக்கிய தருணங்களில் கால தாமதம் ஏற்படாது அல்லவா?
அதை தவிர, வங்கிகளில் போதிய பண இருப்பு இல்லாதது, வாடிக்கையாளர் பணம் பெற முடியாததற்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.
நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த கடினமான தருணத்தில், வங்கி ஊழியர்களின் அயராத சேவை அனைவராலும் போற்றப்பட வேண்டியதாகும். அதேசமயத்தில், பணம் மாற்றுவதில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், பிரதமரின் விருப்பத் திட்டமான "ஜன் தன்' கணக்குகளில், நவம்பர் 9-ஆம் தேதிக்கு பிறகு 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பணம் செலுத்தப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். சாமானிய மக்களின் அறியாமையையும், வறுமையையும் கருவியாக்கி இந்த கணக்குகள், கருப்பு பண மாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த கணக்குகளிலிருந்து பணத்தை திரும்ப கொடுப்பதற்கு முன்பு, அந்த பணத்தின் உண்மையான உரிமையாளர்கள் கண்டறியப்பட வேண்டும். இதற்கு ஒத்துழைத்து உதவி செய்ய முன்வரும் "ஜன் தன்' வாடிக்கையாளர்களுக்கு அரசு தகுந்த வெகுமதி திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.
"இந்திரா காந்தி இந்திய மேம்பாட்டு ஆய்வக'த்தின் சமீபத்திய அறிக்கையின்படி, பணப்புழக்கக் குறைவினால் சந்தைகளில் விவசாயப் பொருள்களின் வரத்து பெருமளவில் குறைந்து வருகிறது. இதனால், விவசாய கூலி தொழிலாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியப் பொருளாதாரத்தில், நீண்ட காலமாக புரையோடி போயிருக்கும் கருப்புப் பண நடவடிக்கைகளை ஒடுக்க, உயர்மதிப்பு நாணய விலக்கல் திட்டம் மட்டும் போதாது. அம்மாதிரி நடவடிக்கைகளின் அடித்தள காரணங்களை ஆராய்ந்து, அவை முற்றிலும் அகற்றப்பட்டால்தான், இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறியதாக கருதமுடியும்.
பொருளாதார முன்னேற்றத்தில் ஓட்டமெடுக்க ஆரம்பித்திருக்கும் தருணத்தில், நாட்டின் பல்வேறு துறைகளை தாற்காலிகமாக முடக்க வல்ல நாணய விலக்கு திட்டம், ஓடும் வண்டியின் சக்கரத்தில் சுடுவதுபோல் ஆகும். பஞ்சர் ஆன சக்கரத்தை தாமதமின்றி செப்பனிட்டு, வண்டியை மீண்டும் ஓட வைக்கும் முயற்சியில், அரசு ஈடுபட வேண்டும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024