ரயில் விபத்துகள். 92 பைசாவுக்கு உங்கள் பயணத்தை காப்பீடு செய்யுங்கள்!
சாலை வழி போக்குவரத்தைக் காட்டிலும் ரயில் பயணம் பாதுகாப்பானது என்று பொது மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போது, நேற்று உத்தரப்பிரதேசத்தில் இந்தூர் - பாட்னா ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது, சற்று கலத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வேயில் கடந்த 15 ஆண்டுகளில் விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருக்கிறது. இருந்த போதும் கடந்த 5 ஆண்டுகளில் 555 பேர் ரயில் விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
இந்தூர் - பாட்னா ரயிலைப் போல, தடம் புரள்வதால் ஏற்படும் விபத்துகள் தான் அதிகம். இவையே அதிக சேதத்தையும் ஏற்படுத்துகின்றன. 2010-2011 முதல் 2014-2015 வரையிலான கால கட்டத்தில் நடந்த ரயில் விபத்துகளின் எண்ணிக்கைய, கீழே உள்ள சார்ட்டில் காணலாம்.
ஆதாரம்: Indian Railways, Safety Performance 2014-15
கடந்த 5 ஆண்டுகளில் 300 ரயில்கள் தண்டவாளத்தை விட்டு நிலை தடுமாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
கிட்டத்தட்ட 50% ரயில் விபத்துகள் தடம் புரள்வதால் ஏற்படுகின்றன என்பது சார்ட்டில் தெளிவாக காண முடிகிறது. 66 ஆயிரம் கி.மீ ரயில் பாதை ( பூமியின் சுற்றளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்) கொண்ட பிரம்மாண்ட இந்திய ரயில் தடங்களை சீரமைத்து, தினமும் பயணிக்கும் 2.3 கோடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ரயில்வே அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உண்டு. ஆனால், உண்மை நிலை கொஞ்சம் அதிர வைக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் 261 விபத்துகள் ரயில்வே ஊழியர்களின் கவனக் குறைவால் நடந்துள்ளது. 40% விபத்துகளுக்கு ரயில்வே ஊழியர்களே காரணமாக உள்ளனர்.
இந்த ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரயில்வே அமைச்சகம் சார்பில் அனைத்து ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கும் வழிகாட்டுதல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், தொடர்ந்து அதிகரித்து வரும் ரயில் தடம்புரளும் விபத்துகளைக் தவிர்க்க, தண்டவாளங்களை சரி செய்யும் பணிகளை 15 நாட்களுக்கு முழு வீச்சில் நடத்துமாறு ரயில் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தியிருந்தது. அந்த ஆணை முழுமையாக பின்பற்றியிருந்தால் 133 உயிர்கள் வீணாக பறிபோகாமல் இருந்திருக்கலாம். இதைத்தான் கவனக் குறைவு என்று கூற வேண்டி இருக்கிறது. இதன் விளைவாக சில முக்கிய அதிகாரிகளின் தலைகள் உருளும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
இனியாவது மக்களின் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள ரயில்வே ஊழியர்கள் உறு துணையாக இருப்பார்கள் என்று நம்புவோம்.
இன்னொரு பக்கம் பயணிகளான நாமும் பின்பற்ற வேண்டிய ஒன்று உள்ளது.
ரயில் பயணத்தின்போது எதிர்பாராத அசம்பாவிதங்களால் உயிரிழக்கும், காயமடைவோருக்கு என முன்னெச்சரிக்கையாக காப்பீட்டு திட்டம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போது, பயணக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். இதன் விலை வெறும் 92 பைசா மட்டுமே. அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் உயிரிழ்ந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் வரையும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ செலவாக 7.5 லட்சம் ரூபாய் வரையும் காப்பீட்டுத் தொகையை கிளைம் செய்ய முடியும். இந்த சேவை ஆன்லைனில் டிக்கெட் வாங்கினால் மட்டுமே கிடைக்கும். வெறும் 30% பயணிகள் மட்டுமே இத்திட்டத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இந்தூர் - பாட்னா ரயிலில் சென்ற 128 பேர் காப்பீடு செய்துள்ளனர். அதில் 78 பேர் மட்டும் விபத்து நடக்கும்போது ரயிலில் இருந்துள்ளனர்.
எதிர்பாராமல் நடப்பது தான் விபத்து. ஆனால் மக்களும் ரயில்வே ஊழியர்களும் விழிப்புடன் இருப்பது அவசியம். அதுதான் நாட்டுக்கும் நல்லது நமக்கும் நல்லது.
- ரெ.சு.வெங்கடேஷ்
இன்ஃபோகிராப்: ஆரிஃப் முகமது, நிஜார் முகமது
Dailyhunt
No comments:
Post a Comment