Monday, November 21, 2016

ரூ.25 லட்சம் செல்லாத நோட்டுகள் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது

சென்னை,

சென்னையில் ரூ.25 லட்சம் செல்லாத நோட்டுகள் கொள்ளை போன வழக்கில் திடீர் திருப்பமாக வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ரூ.25 லட்சம் கொள்ளை

சென்னை அடையார் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவில் ‘ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்’ என்ற வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக லோகேஸ்வரராவும், காசாளராக இளங்கோவனும் பணியாற்றி வந்தனர்.

செல்லாத நோட்டுகளை மாற்றி பொதுமக்களுக்கு வினியோகிப்பதற்காக ரிசர்வ் வங்கி இந்த வங்கி கிளைக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள ரூ.2 ஆயிரம், ரூ.100 நோட்டுகளை வழங்கி இருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி அனுப்பிய நோட்டுகளை பொதுமக்களுக்கு முறையாக வினியோகிக்காமல் வங்கியின் காசாளர் இளங்கோவன் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது. தனக்கு தெரிந்த தொழில் அதிபர்கள் பதுக்கி வைத்திருந்த செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்தார்.

அந்த வகையில் ரிசர்வ் வங்கி கொடுத்த ரூ.50 லட்சம் பணத்தில் ரூ.37 லட்சம் அளவுக்கு முறைகேடாக தொழில் அதிபர்களுக்கு மாற்றிக்கொடுத்துள்ளார். முறையாக ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை வாங்காமல் ரூ.37 லட்சம் பணத்தையும் இளங்கோவன் மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. வங்கி மேலாளர் லோகேஸ்வரராவ் இந்த முறைகேட்டை கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து காசாளர் இளங்கோவன் தனக்கு கிடைத்த கமிஷன் தொகையில் மேலாளர் லோகேஸ்வரராவுக்கும் பங்கு கொடுத்து சரிக்கட்டி உள்ளார்.

குறுக்கு வழி

முறைகேடாக மாற்றி கொடுத்த ரூ.37 லட்சம் பணத்தையும் வங்கியில் மீண்டும் திருப்பி வைப்பதற்கு மேலாளர் லோகேஸ்வரராவும், காசாளர் இளங்கோவனும் திட்டம் தீட்டினார்கள்.

இளங்கோவன் தனிப்பட்ட முறையில் தன்னுடைய காரை ஓட்டுவதற்காக சக்திவேல் என்ற டிரைவரை பணியில் அமர்த்தி இருந்தார். முறைகேடாக கொடுக்கப்பட்ட ரூ.37 லட்சம் பணத்தில், ரூ.25 லட்சம் பணத்தை வங்கியில் திருப்பி வைப்பதற்கு முதற்கட்டமாக முடிவு செய்தனர்.

தொழில் அதிபர்களிடம் வாங்கிய செல்லாத ரூ.25 லட்சம் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை குறுக்கு வழியில் மாற்றுவதற்கு டிரைவர் சக்திவேல் உதவி செய்வதாக கூறினார். தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்க்கும் முகேஷ் என்பவரும், ஊழியர் மணிகண்டன் என்பவரும் செல்லாத ரூ.25 லட்சம் பணத்தை மாற்றுவதற்கு உதவி செய்வார்கள் என்று சக்திவேல் தெரிவித்தார்.

முகேசும், மணிகண்டனும் பல்லாவரத்தில் உள்ள ராணுவ மைதானத்துக்கு ரூ.25 லட்சம் பணத்தை கொண்டு வந்தால், அவற்றிற்கு ரூ.2 ஆயிரம் நல்ல நோட்டுகள் தருவதாக கூறினார்கள்.

ரூ.25 லட்சத்தையும் நல்ல நோட்டுகளாக மாற்றிக்கொடுக்க ரூ.4 லட்சம் கமிஷன் கேட்டுள்ளனர். கமிஷன் தொகை தருவதற்கு ஒப்பு கொள்ளப்பட்டது.

திட்டப்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இளங்கோவன் தனது காரில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள செல்லாத 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றார். சக்திவேல் காரை ஓட்டினார். அவர்கள் பல்லாவரம் ராணுவ மைதானத்தில் ரூ.25 லட்சம் பணத்துடன் காத்திருந்தார்கள்.

கொள்ளை

அப்போது அங்கு இன்னொரு காரில் வந்த 4 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி இளங்கோவன் வைத்திருந்த ரூ.25 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

முறைகேடாக மாற்றுவதற்கு முயற்சித்த ரூ.25 லட்சம் பணமும் கொள்ளைப் போனதால் இளங்கோவன் கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது பற்றி மேலாளர் லோகேஸ்வரராவுக்கு தகவல் கொடுத்தார். இரவோடு, இரவாக சாஸ்திரி நகரில் உள்ள தங்களது வங்கியின் கிளை அலுவலகத்துக்கு இளங்கோவனும், லோகேஸ்வரராவும் வந்தனர். அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்று யோசித்தப்படி இருந்தனர். டிரைவர் சக்திவேல் வங்கியின் வெளியே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சாஸ்திரிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ரோந்து வந்தார். அவர் சக்திவேலை பிடித்து விசாரித்தார். வங்கி அலுவலகத்துக்குள் சந்தேகத்துக்கிடமாக இருந்த லோகேஸ்வரராவ் மற்றும் இளங்கோவனிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது ரூ.25 லட்சம் செல்லாத நோட்டுகள் கொள்ளைப் போன விஷயம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கமிஷனர் உத்தரவு

ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அன்பு ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், செல்லப்பா, ஆனந்த் பாபு ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் கொள்ளையர்களை பிடிக்க களத்தில் இறக்கப்பட்டனர்.

பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலுக்கு தலைவனாக பல்லாவரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் செயல்பட்டது தெரிய வந்தது. ராஜேஷ் திருச்சிக்கு தப்பி ஓடி விட்டதாக தெரிய வருகிறது. அவரையும், அவரது கூட்டாளிகள் 3 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் திருச்சி விரைந்தனர்.

வங்கி ஊழியர்கள் கைது

இதற்கிடையில் பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டிய பணத்தை முறைகேடாக தொழில் அதிபர்களுக்கு மாற்றிக்கொடுத்து சட்ட விரோத செயலில் ஈடுபட்ட வங்கி மேலாளர் லோகேஸ்வரராவ், காசாளர் இளங்கோவன், அவரது டிரைவர் சக்திவேல், தனியார் வங்கி மேலாளர் முகேஷ், ஊழியர் மணிகண்டன் ஆகிய 5 பேரும் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

போலீசாரின் நடவடிக்கை இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே செல்லாத நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கி ஊழியர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

இந்த வழக்கின் மூலம் வங்கி ஊழியர்கள் முறைகேடாக செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைதான 5 பேரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற காவலில் அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

முகத்தை மூடியபடி...

கைதான 5 பேரையும் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்களை படம் பிடிப்பதற்காக சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்துக்கு வெளியே ஏராளமான புகைப்படக்காரர்கள் கூடி நின்றனர். ஆனால் படம் எடுக்க விடாதபடி கைதானவர்களின் முகத்தை மூடியபடி போலீசார் ஜீப்பில் ஏற்றினார்கள். அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டி இருப்பதாலும், மேலும் பணத்தை கொள்ளையடித்த 4 பேரையும் கைது செய்ய வேண்டி இருப்பதாலும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை என்று போலீசார் கூறினார்கள்.

கள்ளப்பண கொள்ளையர்கள்

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கு பிறகு பணத்தை மையமாக வைத்து நடந்த குற்றங்கள் வெகுவாக குறைந்தன.

தொழில்ரீதியாக திருடுபவர்கள் தங்களது தொழிலை கொஞ்ச காலத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் முறைகேடாக கள்ளப்பணத்தை மாற்றுபவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் புதிய கள்ளப்பண கொள்ளை கும்பல் உருவாகி உள்ளது.

வங்கி ஊழியர்களும், தரகர்களும் இந்த கள்ளப்பண கும்பலோடு கைக்கோர்த்து செயல்படும் நிலை உருவாகி உள்ளது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024