குறள் இனிது: உடனடி வளர்ச்சியும் நீண்டகால வளமையும்...
வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை (குறள்: 512)
பல மேலாளர்கள் தம் நிறுவனத்தில் டக் டக் கென்று விற்பனையில் வளர்ச்சியைக் காண் பித்து நல்ல பெயர் வாங்கி விடுவார்கள். ஆமாம், அதெல்லாம் இந்த துரித உணவு போலத்தான்!
ஆனால் சில பணியாளர்களோ அந்நிறுவனத் திற்குத் தற்காலிகமாக இல்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு விற்பனையுடன் லாபமும் அதிகரிக்கும்படியான வழிவகைகளைச் சிந்தித்து, அதற்காகச் செயல்படுவார்கள்.
ஆமாங்க. கீரைச்செடி போன்றவை சீக்கிரமே பலன் கொடுக்கலாம்.ஆனால் ஒரு முறை தானே! தென்னைமரம், மாமரம் போன்றவை காய்க்க நாளாகலாம்.ஆனால் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பலன் கிடைக்குமே!
நான் வங்கியில் பணிபுரிந்த போது இரு வகையினரையும் பார்த்து இருக்கிறேன். நம்ம குமார் போன்றவர்கள் வருடம் முழுவதும் தூங்கி விட்டு மார்ச், செப்டம்பரில் மட்டும் படு சுறுசுறுப்பாகி விடுவார்கள்!
கடைசி நேரத்தில் யார் காலிலாவது விழுந்து, சாளர அலங்காரம் (window dressing) செய்து விடுவார்கள்! நீங்களும் அனுபவப்பட்டு இருப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் அவர்களது ஓவர் டிராஃப்ட் கணக்கிலிருந்து தொகையை எடுத்து சும்மா சிறிது நாட்களுக்கு நடப்புக் கணக்கிலோ சேமிப்புக் கணக்கிலோ வைக்கச் சொல்லி நச்சரிப்பார்கள்.
எங்குமே வளர்ச்சி என்பது வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாதில்லையா? வங்கிகளில் நிலைத்து நீடிக்கும் வளர்ச்சிக்கு வித்திடுபவர்களும் இல்லாமல் இல்லை. எனது நண்பர் ஒருவர். தான் கிளையில் பொறுப்பு எடுத்தவுடன் தமது கணக்கைச் செயல்பாட்டில் வைத்துக்கொள்ளாத வாடிக்கையாளர்களைப் பட்டியலிட்டுத் தொடர்பு கொள்வார். அவர்களின் ஆட்சேபங்களுக்கெல்லாம் பொறுமையாய் பதில் சொல்லி மீண்டும் எங்கள் சேவையைப் பயன்படுத்துங்கள் என்று அவர் கேட்கும் தோரணையே வெற்றி தந்து விடும்!
எந்தப் பிரச்சினை வந்தாலும் அஞ்சி ஓடாமல் எதிர்கொள்வார். அதாங்க, ஆங்கிலத்தில் trouble shooter என்பார்களே. ஒவ்வொரு பிரச்சினையும் ஒரு தீர்வுடன் தான் பிறக்கிறது என்பது அவரது நம்பிக்கை ! எந்த ஊரிலும் மாநகராட்சி மற்றும் அரசாங்கத்தின் பல துறைகளின் கணக்குகளைத் திறக்க பெரும் முயற்சிகள் எடுப்பார். அதற்கு நீண்ட நடைமுறைகள் இருக்கும். நம்மவர் சளைக்க மாட்டார்!
இம்மாதிரிக் கணக்குகளைத் தொடங்குவது சிரமமாக இருக்கலாம். ஆனால் பின்னர் யார் வரி கட்டினாலும் அதுபாட்டுக்குக் கூடிக் கொண்டே போகுமே! தற்பொழுது ,ரூபாய் நோட்டு விவகாரத்திற்குப் பின் பலமடங்கு அதிகரித்த நகராட்சிகளின் வரி வசூல் ஞாபகம் வருகிறதா?
‘நீங்கள் ஓடும் திசை சரியாக இருந்தால்தான் உங்கள் வேகத்தினால் பலன் உண்டு' என்கிறார் மேலாண்மை குரு ஜோயல் பார்க்கர்!
நண்பர் வங்கிக்கு வர்த்தகம் பெருக ,புதுப்புது வழிகளை உண்டாக்க முயலுவார். ஒரு முறை ஒரு பள்ளியில் மாணவிகளுக்குச் சேமிப்பு விழா நடத்தி சில ஆயிரங்களில் ஆரம்பித்தது இன்று அச்சிறுமிகளுடன் பல கோடிகளாய் வளர்ந்துள்ளது! வற்றாத ஊற்றுக்களைத் தேடிப்பிடிப்பவர்கள் தானே நல்ல பணியாளர்கள்! வருவாயைப் பெருக்குவதுடன், தடைகளைத் தகர்த்து தொடர்ந்து பலனளிக்கும் நடவடிக்கைகளை எடுப்பவர்களையே பணியிலமர்த்த வேண்டுமென்கிறார் வள்ளுவர்!
No comments:
Post a Comment