Wednesday, November 30, 2016

பென்‌ஷன் பணத்தை எடுக்க முடியாமல் வயதானவர்கள் பரிதவிப்பு


சென்னை:
வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பென்‌ஷன்தாரர்களுக்கு இன்று சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்பட்டன.
அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட சம்பளத்தை பெறுவதற்காக வங்கிகளில் அரசு ஊழியர்கள் இன்று காத்து நின்றனர்.
ஏ.டி.எம். மையங்களில் ரூ.2 ஆயிரம் மட்டுமே நாள் ஒன்றுக்கு எடுக்க முடியும் என்பதால் பலரும் வங்கிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களும் பணம் இல்லாமல் பெரும் அளவில் செயலிழந்து கிடப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இதற்கிடையில் ஓய்வூதியம் பெறக்கூடிய வயதானவர்கள் வங்கி வாசலில் காத்து கிடப்பது பரிதாபமாக இருந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் ஓய்வூதியதாரர்கள் தங்கள் கணக்கில் போடப்பட்ட பென்‌ஷன் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வங்கிகளில் பணம் இல்லாததால் தங்களின் சொந்த பணத்தை எடுக்க முடியாமல் மனவேதனையுடன் ஓய்வூதியதாரர்கள் குமுறினார்கள்.
சின்னகோவிந்தன் (வயது 93):- சென்னை மாநகராட்சியில் லாரி டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். எனக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் பென்‌ஷன் வருகிறது. இன்று பென்‌ஷன் பணம் போடப்பட்டதால் வண்ணாரப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கிக்கு காலை 7 மணிக்கே வந்து விட்டேன்.
பணத்தை எடுப்பதற்காக எனது பேரன் மணிகண்டனும் வங்கி வாசலில் காத்து நின்றேன். என்னால் நிற்க முடியாததால் கீழே அமர்ந்து விட்டேன். மதியம் 12 மணிக்கு பிறகு பணம் இல்லை என்று கூறி விட்டனர்.
இந்த பென்‌ஷன் பணத்தை வைத்து என் செலவுகளை செய்வேன். பணம் இல்லாததால் மீண்டும் நாளை வரவேண்டிய நிலை உள்ளது. எங்களை போன்ற வயதானவர்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கூறிய போதிலும் வங்கிக்குள் விடவில்லை.
பர்வதம்மாள்:- அரசு ஊழியரான எனது கணவர் இறந்து விட்டதால் அவரது பென்‌ஷன் பணத்தை நான் மாதந்தோறும் பெற்று வருகிறேன். இந்த பணத்தை நம்பிதான் என் வாழ்க்கை உள்ளது. அக்டோபர் மாத பென்‌ஷன் பணத்தை என்னால் எடுக்க முடியவில்லை.
வங்கிக்கு பலமுறை வந்தும் பணம் இல்லாததால் திரும்பி செல்கிறேன். இன்றாவது பணம் கிடைக்கும் என்று நம்பி வந்தேன். ஆனால் பணம் இல்லை என்று கூறி விட்டார்கள். எங்களை போன்ற வயதானவர்களை அலை கழிக்காமல் முன்னுரிமை கொடுத்து பென்‌ஷன் பணத்தை வழங்க உதவ வேண்டும்.
முசலையா:- கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் நான் மாநகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பென்‌ஷன் பணம் ரூ.9,500 இன்று போடப்பட்டதால் அதனை எடுக்க வந்தேன். ஆனால் வங்கியில் பணம் இல்லை என்று கூறி எங்களை வெளியில் நிறுத்தி விட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் இங்குள்ள கூட்டத்தை பார்க்கும் போது இதில் நின்று எப்படி பணத்தை எடுப்பேன் என்று நினைத்து திரும்பி சென்று விடுவேன்.
எந்த வருமானமும் இல்லாத என்னை போன்றவர்கள் பென்‌ஷனை நம்பி வாழ்கிறார்கள். இந்த பணமும் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? பென்‌ஷன்தாரர்களுக்கு பணம் இல்லை என்று கூறாமல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024