தடம்புரளும் ரயில்வே!
By ஆசிரியர் | Published on : 26th November 2016 05:28 AM |
ஆங்காங்கே சரக்கு ரயில் தடம் புரள்வதும், பயணிகள் ரயில் தடம் புரள்வதும் வழக்கமாகி விட்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் மூன்று மிகப்பெரிய விபத்துகள் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த மாதம், பஞ்சாபிலுள்ள ஜலந்தர் மாவட்டத்தில் ஜீலம் விரைவு ரயில் நல்ல வேளையாக சட்லஜ் நதியைக் கடப்பதற்கு 50 மீட்டர் முன்னால் தடம் புரண்டது. அதுவே நதியின்மீது செல்லும்போது தடம் புரண்டிருந்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் பலியாகி இருப்பார்கள்.
இந்த ஆண்டில் மொத்தம் 80 ரயில் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த ஆண்டைவிட 11 விபத்துகள் அதிகம். டிசம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் இருந்தால் அதிர்ஷ்டம். இந்த 80 விபத்துகளில் பாதிக்குமேல் ரயில் தடம் புரண்டதால் நிகழ்ந்த விபத்துகள்தான். ரயில் தடம் புரள்வதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, தண்டவாளத்தில் ஏற்படும் விரிசல் அல்லது முறையான பராமரிப்பு இன்மை. இரண்டு, ரயில் பெட்டிகள் பழையதாகி விட்டிருப்பது.
பாதுகாப்புக்கு சில அடிப்படைத் தேவைகள் இருந்தாக வேண்டும். தண்டவாளங்களின் பராமரிப்பு, சிக்னல்கள் சரியாக இயங்குவது, ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் என்று அனைத்துமே முறையாக இருந்தால்தான் பாதுகாப்பாக ரயில் இயங்க முடியும்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர்கள் நடத்திய துறை சார்ந்த விசாரணைகளில், மிகப்பெரிய ரயில் விபத்துகளில் 70% விபத்துகள் மனித கவனக்குறைவால்தான் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது. மனித கவனக்குறைவு என்றால், தண்டவாளங்களை சரியாக பராமரிக்காமல் இருப்பது, சிக்னல்களை சரியாக இயக்காமல் இருப்பது போன்றவை. இதற்குக் காரணம், ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாமல் இருப்பதும், கண்டிப்பான செயல்பாட்டு ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படாமல் இருப்பதும்தான். இதற்கு, ரயில்வே தொழிலாளர்களின் யூனியன்களும் ஒரு காரணம்.
ரயில்வேயின் பாதுகாப்புக்காக அனில் ககோட்கர் குழுவும், ரயில்வே சீரமைப்புக்காக விவேக் தேவ்ராய் குழுவும் அமைக்கப்பட்டன. அவர்கள் பல பரிந்துரைகளை முன்வைத்தனர். ஆனால் அவை எதுவுமே செயல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
2011-இல் அனில் ககோட்கர் குழு அமைக்கப்பட்டது. பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதல், பழைய தண்டவாளங்களை மாற்றுதல், சிக்னல் முறைகளை நவீனப்படுத்துதல் போன்றவற்றிற்காக ஐந்தாண்டு காலகட்டத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யக் கேட்டுக்கொண்டது ககோட்கர் குழு. அதேபோல, கனமான ரயில் பெட்டிகளுக்கு பதிலாக, எடை குறைந்த நவீன ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்தி, பழைய பெட்டிகளை மாற்றுவதற்கு ஐந்தாண்டு இடைவெளியில் ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யக் கோரியது. பரிந்துரை அளித்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும்கூட வெறும் 10% ரயில் பெட்டிகள்தான் மாற்றப்பட்டிருக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால், தேய்மான ஒதுக்கீடு நிதி என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 2006 - 09இல் ரூ.6,000 கோடியாக இருந்த இந்த ஒதுக்கீடு 2015 - 17இல் ரூ.3,000 கோடியாக குறைக்கப்பட்டுவிட்டது. உண்மையான தேவை ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை. ஏறத்தாழ 2.3 கோடி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை ரயில்வே நிர்வாகம் உணராததுதான் இதற்குக் காரணம்.
இந்திய பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது ரயில்கள்தான். 2.3 கோடி பயணிகளை மட்டுமல்ல, தினந்தோறும்
30 லட்சம் டன் சரக்குகளையும் கையாள்கிறது. ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பதில் குறியாக இருக்கும் நிர்வாகம், பொதுமக்களைக் கவர்வதற்காக புதிய ரயில்களை அறிவிப்பதும், அளவுக்கதிகமாக சரக்கு ரயில்களை இயக்குவதுமாக இருக்கிறது. அதிகரிக்கும் ரயில் இயக்கத்துக்குத் தகுந்தவாறு, தண்டவாளங்களை மேம்படுத்துவதிலும் சிக்னல்களை நவீனப்படுத்துவதிலும், ஊழியர்களின் தரத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் ரயில் விபத்துகளுக்குக் காரணம்.
புதிய வழித்தடங்கள், புல்லட் ரயில், ரயில் நிலையங்களிலும், ரயிலிலும் வைஃபை இவையெல்லாம் அல்ல ரயில்வேத் துறையின் உடனடித் தேவைகள். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யாமல் இவையெல்லாம் இருந்து என்ன பயன்? ரயில்வே போர்டு ஒருபுறம், ரயில்வே அமைச்சகம் இன்னொருபுறம் என்று இரட்டை நிர்வாகக் கேந்திரங்கள் இருப்பதும்கூட ரயில்வே துறையின் செயலின்மைக்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
இந்தூர் - பாட்னா ரயில் விபத்தைத் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படும். ஒருசில ஊழியர்களின் கவனக்குறைவு காரணம் என்று கண்டறிவார்கள். அந்த ஊழியர்கள் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். யூனியன்களின் தலையீட்டால் அவர்கள் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ரயில்வேயின் நிரந்தரக் குறைகளுக்குக் காரணமான தலைமை எந்தவித பொறுப்பும் ஏற்காது; தண்டவாளங்களும், சிக்னல்களும், பழைய ரயில் பெட்டிகளும் இருப்பது போலவே தொடரும். இனி, அடுத்த ரயில் தடம் புரளும் வரை இதுகுறித்து யோசிக்கவும் மாட்டார்கள்!
No comments:
Post a Comment