Saturday, November 26, 2016

நீட்’ தேர்வுக்குத் தயார் ஆகலாமா?

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முறை (NEET) கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. இதனால் தற்போது பிளஸ் டூ படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள். புதிய தேர்வு முறை என்பதால் இதற்கு எப்படித் தயாராவது, தேர்வை எப்படி எதிர்கொள்வது, ஓஎம்ஆர் ஷீட்டில் (OMR sheet) எப்படி பதிலளிப்பது போன்ற பல கேள்விகள் எழும். இவை அனைத்துக்கும் உங்களுக்குப் பயிற்சி அளித்து நீட் தேர்வுக்கு முழுவதுமாகத் தயார்படுத்தும் விதத்தில் உண்மையான தேர்வுபோன்ற ஒரு மாதிரித் தேர்வை நடத்தும் முயற்சியை ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழின் இணைப்பிதழான எஜுகேஷன் பிளஸ்ஸும் ஸ்மார்ட் பயிற்சி மையமும் இணைந்து முன்னெடுத்திருக்கின்றன.

வரும் ஆண்டில் நீட் தேர்வை எழுத முனைவோருக்கு மாநில அளவிலான மாதிரித் தேர்வைத் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மையங்களில் 2017 ஜனவரி 8 அன்று நடத்துகிறார்கள். இந்த மாதிரித் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெறும் முதல் 100 பேருக்கு நீட் தேர்வு எழுத இலவசமாகச் சிறப்புப் பயிற்சி அளிக்க ஸ்மார்ட் மையம் முன்வந்திருக்கிறது. மாநில அளவிலான இந்த மாதிரித் தேர்வு எழுத ரூ. 650/- கட்டணம் செலுத்த வேண்டும்.

பணி வாழ்க்கைக்குப் பயிற்சி அளிப்பதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஸ்மார்ட். அந்நிறுவனம் நீட் தேர்வுக்குத் தமிழக மாணவர்களைத் தயார்படுத்த முடிவெடுத்திருக்கிறது. பொதுத் தேர்வுகளுக்குக் கேள்வித் தாளைத் தயாரிக்கும் கல்வியாளர்கள் மற்றும் தேர்வு ஆய்வாளர்களின் ஆலோசனையின்படி இந்தத் திட்டத்தை ஸ்மார்ட் நிறுவனம் வகுத்திருக்கிறது. “மாநில அளவிலான இந்த மாதிரித் தேர்வை எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அளவில் ராங்க் அளிப்போம்.

படிப்பில் அவர்களுடைய பலம் / பலவீனம் மற்றும் எந்தப் பாடப் பகுதிகளில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் ஆகியவற்றையும் விரிவான பகுப்பாய்வு அறிக்கையாகத் தருவோம். குறிப்பாக, இந்த மாதிரித் தேர்வை எழுதும் அனைத்து மாணவர்களும் நீட் புளூ பிரிண்ட்டை பின்பற்றும் ஆன்லைன் தொடர் தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்பை இலவசமாக அளிக்கவிருக்கிறோம்” என்கிறார் ஸ்மார்ட் மையத்தின் நிர்வாக இயக்குநரான அர்ச்சனா ராம்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் (CBSE), மாநிலக் கல்வி வாரிய பாடத்திட்டம் மற்றும் இதர வாரிய பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படிக்கும் அல்லது பிளஸ் டூ முடித்தவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதத் தகுதி பெற்றவர்கள்.

தேர்வில் நேரடியாகப் பங்குபெற விரும்பும் மாணவர்கள் www.smartneet.in-ல் விண்ணப்பிக்கலாம். தங்களுடைய பள்ளி வளாகத்திலேயே மாநில அளவிலான மாதிரித் தேர்வை நடத்த விரும்பும் பள்ளிகள் தொடர்புக்கு: பிரவீன் 7401658483.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024