சென்னையில் உள்ள ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இன்று ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் சமீபத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களாகும்.
எதற்காக இந்த சோதனை என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "நாடு முழுவதும் கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுக்களையும் ஒழிக்கவே 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கணக்கில் காட்டப்பட்ட 500, 1000 ரூபாயை மக்கள் தைரியமாக வங்கிகளில் மாற்றியும் டெபாசிட் செய்தும் வருகின்றனர். ஆனால் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களால் அதை மாற்ற முடியவில்லை. இதனால்,சிலர் குறுக்கு வழியில் பணத்தை மாற்றுவதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த குழுமத்துக்குச் சொந்தமான கல்லூரிகளில் சோதனை நடத்தினோம். சென்னை ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் அந்த குழுமத்துக்கு சொந்தமான கல்லூரியில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்துள்ளோம். அந்தப் பணத்துக்கு உரிய கணக்கு காட்டினால் அதை திரும்ப கொடுத்து விடுவோம். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
செல்லாத என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்களை கல்லூரி ஊழியர்கள் மூலம் மாற்றவும் முயற்சிகள் நடந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதற்காகவே அங்கு 8 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகிறது. ஆனால் அதற்கு முன்பே வருமானவரித்துறை அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளது.இது போல கறுப்புப் பண முதலைகள் தங்களது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தங்களுக்கு தெரிந்த நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் வங்கிகளில் வருமானவரி உச்சவரம்பிற்கு ஏற்ப டெபாசிட் செய்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.
"ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தில் நடந்த வருமானவரி சோதனை மற்ற கல்வி குழுமத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பே தகவல் கிடைத்த சென்னையை சேர்ந்த பிரபல கல்வி குழுமம் குறிப்பிட்ட பெரிய தொகையை கை மாற்றிவிட்டுள்ளது. அதுபோல இன்னொரு தனியார் மருத்துவ கல்லூரியும் இதை செய்துள்ளது. மோடியின் இந்த அறிவிப்பு எந்தவகையில் அந்த கல்வி குழுமங்களுக்கு சென்றது என்பது விவரம் தெரிந்தவர்களின் கேள்வியாக உள்ளது. இதில் பிரபல கல்வி குழுமத்துக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருக்கும்" என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.
ஜே.பி.ஆர் கல்வி குழுமம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கணக்கு காட்டப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடங்களிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை தயாராகி விட்டது. பான் கார்டு, ரகசிய தகவல்கள் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் பதுக்கி வைத்த கறுப்புப் பணத்தை மாற்ற சிலர் குறுக்கு வழிகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இந்த கறுப்புப் பணத்தை மாற்றுவதற்கென தனி நெட்வோர்க் செயல்படுகிறது. சென்னையில் கைமாறும் கறுப்புப் பணத்துக்கு மதுரையில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அடுத்து திருச்சியில் கை மாறும் கறுப்புப் பணத்துக்கு சென்னையில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இவ்வாறு தமிழகம் முழுவதும் செயல்படும் இந்த கும்பல், போனிலேயே பேரம் பேசி கறுப்புப் பணத்தை கை மாற்றி விடுகின்றனர். கடைசியில் கறுப்பு பணமாக இருக்கும் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில் செலுத்தப்படுவது புரியாத புதிராக உள்ளது. இந்த நெட்வோர்க்கில் தனிநபர் முதல் சில வங்கி அதிகாரிகள் வரை உள்ளனர். அரசியல்வாதிகள் முதல் தொழிலபதிபர்கள் வரை தங்களால் முடிந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கறுப்புப் பணத்தை செல்லும் கரன்சியாக மாற்றி வருகின்றனர். இதைத் தடுக்க வருமானவரித் துறை கிடுக்குப்பிடி போட்டாலும் அதிலிருந்து கறுப்பு பண முதலைகள் தப்பி விடுவது வேதனை அளிக்கிறது, எனவே இந்த காலக்கட்டத்தில் வருமானவரித்துறையின் அதிரடி நடவடிக்கையே கறுப்பு பணத்துக்கு போடப்படும் கடிவாளமாக அமையும்.
எஸ்.மகேஷ்
No comments:
Post a Comment