Sunday, November 27, 2016

புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு ஐதராபாத்தில் 6 பேர் கும்பல் கைது
ஐதராபாத்,

500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டை பயன்படுத்தி, ஐதராபாத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் உள்பட கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

பண தட்டுப்பாடு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், இப்ராகிம்பட்டணம் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டு கும்பல் இருப்பதாக சிறப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அங்கு இருந்த சாய்நாத், அஞ்சையா, ரமேஷ், சத்யநாராயணா, ஸ்ரீதர், விஜய்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தலைமறைவான கல்யாண், ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள்.

அந்த கும்பலிடம் போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும் கடுமையான சில்லரை மற்றும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை பயன்படுத்திக்கொண்ட அந்த கும்பல் முதலில் சிறிய தொகைக்கான ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தனர்.

ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு

அந்த நோட்டுகளை மார்க்கெட்டுகளில் புழக்கத்தில் விட்டனர். இதில் அவர்கள் கொடுத்த நோட்டுகள் மீது யாருக்கும் சந்தேகம் வராததால் மேலும் சில்லரை நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டனர்.

இதற்கிடையே புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியானது. உடனே அந்த கும்பல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டிலும் கள்ள நோட்டுகளை அச்சடித்தனர். 2 ஆயிரம் ரூபாயில் 105 கள்ள நோட்டுகள் தயாரித்து மார்க்கெட்டில் புழக்கத்தில் விட தயாராக இருந்தனர். இதற்காக அந்த வீட்டில் ஆலோசனை நடத்தியபோது தான் தகவல் கிடைத்து போலீசார் சுற்றிவளைத்தனர்.

எந்திரங்கள், பணம் பறிமுதல்

அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 310 மதிப்புள்ள 2 ஆயிரம், 100, 50, 20, 10 ரூபாய் கள்ள நோட்டுகள், 2 கலர் ஜெராக்ஸ் எந்திரங்கள், ரொக்கம் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கும்பலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024