வங்கிகளோடு மோதும் அரசு ஊழியர்கள்! - 60 ஆயிரம் கோடி சம்பளப் பணம்
மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், ஒட்டுமொத்த வணிகம் முடங்கியுள்ளது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. அதேநேரம், அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளப் பட்டுவாடா தொடங்கினால், ஒரேநாளில் நான்கு கோடிப் பேர் வரையில் வங்கி ஏ.டி.எம்களை முற்றுகையிடுவார்கள். இதனால் தேவையற்ற சம்பவங்கள் நிகழலாம்' என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வந்தனர். இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் 'சி' பிரிவுஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு மூன்றாயிரம் ரூபாய் பணத்தை ரொக்கமாக அளித்தனர். இதனால் அரசின் இதர பிரிவு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் கடை நிலை ஊழியர்கள் அனைவரும் மளிகை, பால், அன்றாட செலவுகள் என அனைத்துக்கும் சம்பளத்தை மட்டுமே நம்பியுள்ளனர். நாளை காலை முதல் வங்கிகளின் பண விநியோகம் சீராக இல்லாவிட்டால், மிகப் பெரும் மோதல் வெடிக்கக் கூடிய அபாயம் உள்ளதாகவும் வங்கி ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் (தமிழ்நாடு) சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம். “நாளை காலை முதல் சம்பளப் பணத்தை எடுப்பதற்காக அரசு ஊழியர்கள் வங்கிக்குப் படையெடுப்பார்கள். மத்திய அரசில் பணியாற்றும் 33 லட்சம் ஊழியர்களின் மொத்த சம்பளம் 15,500 கோடி ரூபாய். இதில் 14 லட்சம் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளனர்.
மத்திய அரசிடம் பென்சன் பெறுபவர்கள் 52 லட்சம் பேர் உள்ளனர். அதேநேரம், மாநில அரசில் பென்சன் பெறுபவர்கள் கிட்டத்தட்ட 1 கோடிப் பேர் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 80 லட்சம் பேர். தவிர, மாநில அரசில் பென்சன் பெறுபவர்கள் மட்டும் 70 லட்சம் பேர். ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், இரண்டரை கோடிப் பேர் வருகின்றனர். இதுதவிர, தனியார் நிறுவனங்களில் பணிபுரியக் கூடியவர்கள் இரண்டு கோடிப் பேர் உள்ளனர். இன்றிலிருந்து மூன்று நாட்கள் சம்பளப் பட்டுவாடா நடக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்களுக்கு மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இவர்களுடைய கணக்கில் சம்பளமாகவோ பென்சனாகவோ நாளை காலைக்குள் பணம் போடப்பட்டுவிடும். இந்தப் பணத்தில் முதல் மூன்று நாட்களுக்குள் 25 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்துவிடுவார்கள்.
அதற்கேற்ப ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு வழங்கப்பட வேண்டும். பண விநியோகம் பாதிக்கப்பட்டால், அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும். எனவே, தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு கூடுதலான 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஆர்.பி.ஐ வழங்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், வங்கி ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையில் மோதலாக மாறக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது” என்கிறார் ஆதங்கத்தோடு.
“ஊழியர்களின் சம்பளத்தை ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டங்களை நடத்தினோம். குறிப்பாக, நிலைமை சீரடைவதற்கு 50 நாட்கள் ஆகும் என பிரதமர் சொல்கிறார். எனவே, இரண்டு மாத சம்பளத்தை ரொக்கமாகக் கொடுத்துவிடுங்கள் என்றோம். மத்திய அரசின் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் ரொக்கமாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். 'டி' பிரிவு ஊழியர்களுக்கு அப்படி எதுவும் கொடுக்கவில்லை. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் செக் கொடுத்தால், வீட்டின் உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாடு முழுவதும் உள்ள 10 கோடி கடைகளில் கார்டு பயன்படுத்தும் வசதி 2 சதவீத கடைகளில்கூட இல்லை.
காய்கறி, பால் என வீட்டிற்குத் தேவையான பொருட்களை ரொக்கம் கொடுத்துத்தான் வாங்க முடியும். நாளை முதல் அரசு அலுவலை விட்டுவிட்டு வங்கிகளுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலை அரசு உருவாக்கிவிட்டது. ரொக்கமாக பணத்தைக் கொடுத்தால், பணச் சுழற்சிக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும். ஏ.டி.எம்களில் இரண்டாயிரம் ரூபாயை எடுத்தாலும், அதை சில்லறையாக மாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. நாளை முதல் ஏற்படப் போகும் அசாதாரண சூழலுக்கு ஏற்ப எந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் அரசு செய்யவில்லை” என வெடிக்கிறார் மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன்.
தமிழக அரசில் 14 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளையும் அரசு செய்யவில்லை. வங்கிகளில் போடப்பட்ட சம்பளப் பணத்தைக் கையில் எடுப்பது எப்படி என்ற விவாதமே அரசு அலுவலகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
No comments:
Post a Comment