Saturday, November 19, 2016

பணத்தட்டுப்பாட்டால் மனநல பாதிப்பில் மக்கள்: சம்பவங்களுடன் எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள்

பிடிஐ

மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் கிராமப்புற வர்த்தகர்கள் உட்பட பலரும் கடும் அவதிக்குள்ளாகி மனநல பாதிப்பு நிலைக்குத் தள்ளப்படுவதாக உளவியல் நிபுணர்களும் மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் கிராமப்புற உருளைக்கிழங்கு மொத்த விற்பனையாளர் ஒருவர் ரூ.50-60 லட்சம் பெறுமான உருளைக்கிழங்குகளை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளார். இவர் சிறிய காய்கறி வியாபாரிகளுக்கு அதனை ரொக்கத்திற்கு விற்று வருபவர், ஆனால் மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் வாங்குவதற்கு ஆளில்லாமல் வியாபாரம் நின்று போனது. இதனையடுத்து மனத்தளவில் பாதிப்படைந்த மொத்த வியாபாரி வாய்க்கு வந்த படி பேசிய படி தான் இறந்து விடுவோம் என்ற அச்சப்பட்டு மூலையில் ஒடுங்கிக் கிடப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் பிறகு மூத்த மனநல மருத்துவர் சஞ்சய் கார்க் என்பவரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர் கூறும்போது, “தனது ஒட்டுமொத்த ரூ.50-60 லட்சம் பெறுமான உருளைக் கிழங்குகள் விற்காமல் விரயமாகி விடும் என்று அவர் கடுமையாக பயந்து போயுள்ளார். இதனால் ஏற்படும் நஷ்டம் தன்னை அழித்து விடும் என்று மரணபயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.

மேலும் பல உளவியல் மருத்துவர்களை தொடர்பு கொண்ட போது, ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு, அன்றாட வாழ்க்கை பாதிப்பு போன்றவற்றினால் மனச்சோர்வு உள்ளிட்ட மனநிலை பிரச்சினைகளுடன் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் தங்களை அணுகுவதாக தெரிவித்தார்.

பொதுவாக இவர்கள் நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். காரணம் மேற்கு வங்கத்தின் கிராமப்புற வர்த்தகத்தில் கார்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பண உபயோகம் இன்னும் பெரிய அளவுக்கு இல்லை என்பதே.

சாந்தாஸ்ரீ குப்தா என்ற மற்றொரு மன நல மருத்துவர் கூறும்போது, தன்னை அணுகிய கணவனை இழந்த 50 வயது பெண்மணி தன்னுடைய கணவனின் சேமிப்பான ரூ.30 லட்சம் பணத்தை மாற்ற முடியாமல் கடும் மனக்கவலையில் சிக்கினார் என்றார்.

“இந்தத் தொகையில் ஒரு குடியிருப்பு ஒன்றை வாங்கி மீதிப்பணத்தில் தன் மகன் திருமணத்தையும் முடித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் தற்போது கடந்த 10 நாட்களாக கடும் மன அவஸ்தையிலும், மன பாதிப்பிலும் அவர் என்னை அணுகியுள்ளார்,நான் அவருக்கு ஆலோசனைகளையும் சிகிச்சையும் அளித்து வருகிறேன்” என்றார்.

பூரி மற்றும் திகா என்ற ஊர்களில் ஹோட்டல் நடத்தி வரும் அசீஸ் ரே, மத்திய அரசின் நடவடிக்கையை அடுத்து கடுமையாக குடித்து விட்டு குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துவதாக மனநல மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.

“சுற்றுலாப்பயணிகள் வரத்து குறைந்து போனதால் அவரது வர்த்தகம் கடுமையாக பின்னடைவு கண்டது. விடுதியில் தங்கியிருப்பவர்கள் கூட பணத்தை கொடுக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குடியை அதிகப்படுத்தினார் இதனால் நடத்தையும் பாதிக்கப்பட்டது” என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கார்க் என்பவர் கூறுகிறார்.

ஏற்கெனவே நோய் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாராந்திர செக்-அப் செய்து கொள்ள முடியவில்லை, மருத்துவக் கட்டணங்களுக்கு போதுமான பணம் இல்லை.

சில நோயாளிகள் சில சோதனைகளையும் சிகிச்சைகளையும் சீரான இடைவெளியில் எடுத்துக் கொள்வது அவசியம் ஆனால் பணத்தட்டுப்பாடு இவர்களை பாதிப்பதால் அவர்களது ஆரோக்கியம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது, என்கிறார் மற்றொரு மருத்துவர்.

தற்போது பணத்தட்டுபாடு காரணமாக் மன உளைச்சல் ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஆழ்நிலை பிராணாயாமம், இசை கேட்க வைத்தல், நடைப்பயிற்சி உள்ளிட்ட பிற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மனநல மருத்துவர் கார்க் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024