கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவினால் குடும்ப தலைவிகள் மீதும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவி செய்யும் குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடும்ப தலைவிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை தாராளமாக வங்கியில் டெபாசிட் செய்யலாம். அவர்களின் டெபாசிட் ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதேபோல ஜன்தன் வங்கி கணக்குதாரர்கள் ரூ.50 ஆயிரம் வரை டெபாசிட் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் கறுப்பு பணத்தை மாற்ற சில குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள் மற்றும் ஜன்தன் வங்கி கணக்குதாரர்கள் உதவி செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள் மற்றும் ஜன்தன் வங்கி கணக்குதாரர்களிடம் ஆசைவார்த்தை காட்டி கறுப்புப் பணத்தை மாற்ற சிலர் முயற்சிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதன்படி குடும்ப தலைவிகள், தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இது சட்டப்படி குற்றமாகும்.
இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை தீவிரமாக ஆய்வு செய்யும். தவறு இழைப்பவர்கள் மீது வருமான வரித் துறை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment