Monday, November 21, 2016


டிசம்பர் மாத சம்பளத்தை 2000 ரூபாய்களை வைத்து சமாளிக்க முடியுமா?
நவம்பர் 8-ம் தேதி முதல் நம் அன்றாட வாழ்க்கையே மாறிவிட்டது. வாரத்திற்கு சில மணி நேரங்கள் வங்கிக்கும், ஏடிஎம்முக்கும் ஒதுக்க தொடங்கியிருக்கிறோம். கார்டு ஏற்கும் கடைகள், 2000 ரூபாய் ஏற்கும் ஹோட்டல்களை தேடிச் செல்கிறோம். பார்க்கிங்கில் வணக்கம் வைக்கும் காவலாளிக்கும், சிக்னலில் கையேந்தும் குழந்தைகளுக்கும் காசு தர யோசிக்கிறோம். டீக்கடைகளில் அக்கவுண்ட் ஆரம்பித்திருக்கிறோம். பர்ஸில் பத்து நோட்டுகளுக்கு மேல் வைப்பது சிரமமாக இருப்பதால் சீக்ரெட் லாக்கர் ஒன்றை உருவாக்கியிருக்கிறோம். இதையெல்லாம் சமாளித்தாகிவிட்டது. இன்னும் சில தினங்களில் புது மாதம் பிறக்கவிருக்கிறது. கடந்த சில நாட்களாக நாம் சந்திக்காத பல செலவுகள் அப்போது வரும்.

அதையெல்லாம் கேஷ் இல்லாமல் சமாளித்து விட முடியுமா?

ஒரு நடுத்தர குடும்பத்தின் செலவுகளை யோசித்து பாருங்கள். 35000 மாத செலவு செய்யும் ஒரு குடும்பத்தின் செலவுகளை இப்படி பிரிக்கலாம்.

கடன்களுக்கான இ.எம்.ஐ - 5000

வீட்டு வாடகை - 10000

மொத்த மளிகை செலவுகள் -4000

மின்சாரம் -1000

பெட்ரோல் அண்ட் டீசல்-1000

வாகன பராமரிப்பு-300

பள்ளி கல்லூரி கட்டணங்கள்-2000

பஸ் அல்லது ரயில் பாஸ்-500

கேபிள் மற்றும் பத்திரிகைகள்-400

கேஸ் -500

ஃபிட்னெஸ் செலவுகள் -200

பியூட்டி & பர்சனல் கேர் -300

ரெகுலர் மருந்துகள்-500

குடி தண்ணீர் கேன்கள்-200

உடைகள்-1000

தினசரி காய்கறிகள் -2000

ஸ்நாக்ஸ் - 1000

காலணிகள்-300

ஃபேமிலி / லவ்வரோடு சினிமா -1000

சிகரெட் & புகையிலைப் பொருட்கள், மது - 1500

இதில் எதையெல்லாம் உங்களால் ஆன்லைனில் செய்ய முடியும்? வாடகையை செக்காக தந்தால் ஓனர் ஏற்பாரா? காய்கறிக் கடைக்காரர், பால்காரர் காசு தானே கேட்பார்? பைக் பஞ்சர் ஆனால் கிரெடிட் கார்டு ஒட்டாது. முடி வெட்ட முந்நூறு ரூபாய் தர தயாராய் இருந்தால் பிரச்னை இல்லை. 80 ரூபாய் சில்லறையாய் இருந்தால் மட்டுமே முனைக்கடையில் வெட்ட முடியும். சிகரெட்/மது பழக்கம் இருந்தால் ஆரோக்கியம் தாண்டி இன்னும் சில பிரச்னைகளும் உண்டு. எப்படி பார்த்தாலும் 20000 ரூபாய் கேஷ் வேண்டும். இதை ஏடிஎம்மில் 2000, 2000 ரூபாயாக எடுத்து தீராது. வங்கிக்கு சென்றே ஆக வேண்டும். ஆனால், வேலை நாட்களில் வங்கிக்கு செல்ல நேர்ந்தாலே பர்மிஷன் எடுக்க வேண்டும். இந்த நிலையில் இரண்டு நாட்களாவது லீவு எடுத்தால் தான் மாத துவக்கத்தில் வங்கியில் சாத்தியம் ஆகும். மாத துவக்கத்தில் எல்லோருக்குமே 100 ரூபாய் தாள்களாக தேவைப்படும். வங்கியில். 2000 ரூபாய் நோட்டை வாடகைக்கு மட்டுமே தர முடியும். ஒட்டு மொத்த மாத சம்பளக்காரர்களும் வங்கியை நோக்கி படையெடுத்தால்? டிஜிட்டலாக மாற்றுகிறோம் என எல்லா வசதிகளையும் மொபைல் ஆப்பிலே தந்துவிட்டு, வங்கியில் ஆட்களை குறைத்து விட்டார்கள். சில நிறுவனங்கள் வங்கிகளின் என்ணிக்கையே குறைத்து விட்டார்கள்.

வரும் ஒன்றாம் தேதியை எப்படி சமாளிப்பது என இப்போதே யோசியுங்கள். வீட்டு ஓனரிடம் பான் கார்டு எண் கேளுங்கள். செக் அல்லது ஆன்லைன் டிரான்ஸ்ஃபர்தான் சாத்தியம் என்பதை சொல்லுங்கள்.

பால்காரரிடம் பேசுங்கள்.

மெடிக்கல் ஷாப்பில் சின்னச் சின்ன தொகைக்கு கார்டு வாங்க மாட்டார்கள். மொத்தமாக வாங்க திட்டமிடுங்கள்.

வீட்டில் வேலை செய்பவர்கள் யாராவது இருந்தால் அவருக்கு என்ன செய்வது என யோசியுங்கள்.

சிலர் வீட்டுக்குத் தெரியாமல் வயதான அப்பா, அப்பாவுக்கு பணம் தருபவர்களாக இருப்பீர்கள். அதற்கு முதலில் இப்போதே பணத்தை எடுத்து வையுங்கள்.

பள்ளி/கல்லூரி படிக்கும் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு தினமும் தரும் பாக்கெட் மணியை எப்படி தரலாம் என கேளுங்கள்.

எப்படியும் கேபிள் டிவிகாரர் சில்லறையாகத்தான் கேட்பார்.

150 ரூபாய் டிரெயின்/ பஸ் பாஸுக்கு கார்டு வாங்க மாட்டார்கள். நம்மை மட்டும்தான் மாற சொல்லும் அரசு. அதற்கு ஒரு தொகை எடுத்து வையுங்கள்.

மிசோராம் மக்கள் பணத்துக்கு மாற்றாக பேப்பரில் கைகளால் எழுதி பயன்படுத்துகிறார்கள். அதெல்லாம் இங்கே நடக்காது.உங்கள் வங்கி கணக்கில் 20000 ரூபாய் இருந்தால், இப்போதே எடுத்து வந்து விடுங்கள். இல்லையேல் மாத துவக்கத்திலே பல பேரிடம் திட்டு வாங்க நேரிடும். அப்போது 'நாட்டுக்காக சில திட்டுகள் வாங்கலாம்' என எந்த அமைச்சராவது அறிக்க விட்டிருக்கக்கூடும். அதுதான் அதிகமாக வலிக்கும்.

- கார்க்கிபவா

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024